திருமணம்


திருமணம் - மறையறிவு

முன்னுரை:  அன்பும் பிணைப்பும்: கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு@ பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.

உடன்படிக்கை: கத்தோலிக்க திருமண அருள்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும்

வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருள்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது. 

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருள்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருள்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

திருச்சபையின் வழிகாட்டுதல்: குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48) 
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி,பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)

குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)

மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)

தயாரிப்பு: இத்திருவருள்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம். 

ஆலோசனைகள்:  ஆன்மீக தயாரிப்பு: திருமணம் என்பது வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி. என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இதற்கு நல்ல தயாரிப்புடன் பெற்றோரும் மணமக்களும் ஆயத்தம் செய்யவேண்டும். மணமகனும் மணமகளும் ஆன்மீக தயாரிப்பாக நல்ல பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் மணமக்கள் இதைச்செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மணமக்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வாய்ப்பு இருந்தால் அவர்களும் இந்திருவருள்சாதனத்தைப பெறுவது நல்ல காரியம். தங்கள் இல்வாழ்வு நன்றாக அமைய மணமக்கள் வேண்டுவதோடு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மற்ற எல்லா ஏற்பாடுகளை திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வது போல் திருப்பலிக்கும் செய்ய முன் வரவேண்டும்.

திருப்பலி தயாரிப்பு: முதன்முதலாக சரியான நேரத்திற்கோ அதற்கு முன்னதாகவோ மணமக்கள் ஆலயதிற்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். குருக்களையும் மற்றவர்களையும் நமது சௌகரியத்திற்காக காக்க வைப்பதை தவிற்க வேண்டும். அதற்காக பெற்றோர்கள் - சடங்குகள்,அழகு படுத்துதல், ஆசி பெறுதல், வாகன ஏற்பாடு, இசை முழக்குவோர், எல்லவற்றையும் தக்க நேரத்தில் தயாராக்க கவனமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலயத்தையும் அலங்காரம் செய்ய தகுந்த உறவினர்களையோ முடியாத பட்சத்தில் பூக்களை கொண்டாவது பீட அலங்காரங்களைச் செய்யலாம். வாசகங்களை மணமக்களே வாசிக்க முன்வரவேண்டும். அல்லது மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க முன்வரலாம். அதை முன்னரே பங்குத் தந்தையிடம் ஆலோசனை செய்து வாசகங்களை வாசித்துப் பழகி வரலாம். சிறப்பான விசுவாசிகள் மன்றாட்டை குடும்பத்தாரே தயார் செய்து பாடலாம் அல்லது வாசிக்கலாம்.(இந்த இணையத்தளத்தில் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது). மணமக்களும் அவர்களின் குடும்பத்தாரும் காணிக்கைப் பவனியில் கலந்து கொள்ளாம். மனக்கலக்கத்தோடும் சோகமான முகத்துடனும் வருவதை தவிற்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு புதிய வாழ்கையை இறைவனின் திருமுன்னிலையில் ஆரம்பிக்க போகிறோம் என்ற உணர்வுடன் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வரமுற்படவேண்டும். பராக்கைத் தவிர்த்து திருப்பலியில் அனைவரும் பக்தியோடு மணமக்களுக்காக ஜெபிப்பது மிக மிக முக்கியம். 

சம்பிரதாயச் சடங்குகள்: சடங்குகள் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் சிறுபிழைகள், எதிர்பாராத அசௌகரியங்கள், குறைகள் ஏற்படும போது அதை பெரிது படுத்தாமல், பெருந்தன்மையுடனும் விட்டுகொடுத்தும், நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமை பாராட்டாமல் இரு குடும்பத்தாரும் இணங்கிய முறையில் நடந்துகொள்வது மணமக்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதை நினைவில் இருத்தி திருமணவிழாவினை இரு குடும்பத்தாரும் அனைவரும் போற்றும் படியாக நடத்திக்காட்ட முன்வரவேண்டும்.



வருகைச் சடங்கு :

(குரு பூசைக்குரிய திருஉடைகள் அணிந்து பணியாளரோடு ஆலய வாசலிலே அல்லது வசதியைப் பொறுத்து, பீடக்கிராதியிலே நின்று வரவேற்கிறார் )

குரு : அன்புமிக்க மணமக்களே, திருமண அருள்சாதனத்தை முறையே நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற அவரது திருச்சன்னிதியை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களோடு இன்று திருச்சபையும் மகிழ்கிறது. பரமனின் திருமுன் பக்தியுடன் வருக! என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

(பணியாளர் முன் செல்ல, பின்னர் குரு, மணமக்கள், பெற்றோர், சாட்சிகள் என்ற வரிசையாக பவனி பீடத்திற்கு செல்லும். அப்போது மக்கள் வருகைப் பல்லவி பாடுவர்.)

வருகைப் பல்லவி (சங். 19  3,5)

ஆண்டவர் தம் திருத்தலத்தினின்று உங்களுக்குத் துணைசெய்வாராக. சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இதயம் விரும்புவதை அவர் உங்களுக்கு அருள்வாராக! உங்கள் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக!

பூசையின் தொடக்கச் சடங்குகள்:

வருகைப் பாடல்
  
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் 
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்


குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர் சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவரியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமேஎன் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். 
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்கள்: ஆமென்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.

(பாடல் திருப்பலியில்) 

உன்னதங்களிலே இறைவனுக்ககே மாட்சிமை உண்டாகுக. 
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே. 
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம். 
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். 
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே. 
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே. 
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. 
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே. 
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர். 
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர். 
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர். 
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர். 
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர். 
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர். 
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் 
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு :

குரு : செபிப்போமாக.
அனைத்துலகையும் ஆண்டு நடத்தும் இறைவா, திருமண இணைப்பை ஒரு மாபெரும் அன்பின் அருள்சாதனமாகவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள அன்புறவின் அடையாளமாகவும் ஏற்படுத்தியதற்காக உம்மைக் போற்றுகிறோம். உம்முடைய பிள்ளைகளாகிய... இவர்களுக்காக நாங்கள் புரியும் வேண்டுதல்களைக் கேட்டருளும். இவர்கள் உம்மீதும் ஒருவர் ஒருவர்மீதும் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையால், தங்களது அன்பை இன்று ஒருவர் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறார்கள். இவர்களது வாழ்வு அந்த அன்பின் பேருண்மைக்குச் சான்று பகர்வதாய் அமைவதாக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்.

முதல் வாசகம்:

குரு: மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் இருக்க, அவனது விலாவெலும்பிலிருந்தே முதல் பெண்ணைப் படைத்தார். இதனால் அவர் மனிதனின் அன்புக்குரியவர் ஆகிறார் என்பதை தொடக்க நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

தெடக்க நூலிலிருந்து வாசகம். அதிகாரம் 2, இறைவசனங்கள் 18 முதல் 24 வரை

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான் தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் : சங். 32

ஆண்டவருடைய திருவருளால் 
அவனியெங்கும் நிறைந்துள்ளது!

அவரை இறையாய்க் கொள்ளும் மக்கள் 
அவர் பொருளாய்த் தேர்ந்தோர் பேறுபெற்றோர்,
தமக்கஞ்சிடுவோரைப் பார்க்கிறார் ஆண்டவர்
தம் அருளை நம்பினோரைக் கண்நோக்குகிறார் (ஆண்)

நம் ஆன்மா காத்திருப்ப தவர்க்காக 
நமக்குதவி கேடயமும் அவரே!
மகிழ்கின்ற தவரில் நமது உள்ளம்,
வைக்கிறோம் திருப்பெயரில் நம்பிக்கை (ஆண்)

இரண்டாம் வாசகம் இரண்டாம் வாசகம் (1 இரா 3  1-9) 
அப்போஸ்தலரான புனித பேதுரு முதல் திருமுகத்திலிருந்து வாசகம், அதிகாரம் 3 இறைவார்த்தைகள் 1 முதல் 9 வரை.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள் தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள். அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள் மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

வாழ்த்தொலி:
  
அல்லேலூயா (1அரு.4  8,11) 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! 
அனை: உம்மோடும் இருப்பாராக!

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:6-9
ஆண்டவரே உமக்கு மகிமை.

அக்காலத்தில் படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
மக்கள்: கிறிஸ்துவே உம்மைப் புகழ்கின்றோம்.

மறையுரை :

திருமணச்சடங்கு

அறிவுரை

குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திருமுழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருள்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.

(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)

குரு: (பெயர்...பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?
மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.

குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?
மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.

குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.

மன ஒப்புதல்:

குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)

மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மக்கள்: ஆமென்.

மாங்கலியம் அணிவித்தல்:

குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) ... என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)

12. விசுவாசிகளின் மன்றாட்டு 

(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்களின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட்டாகச் சொல்வது நல்லது.)

குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

நற்கருணை வழிபாடு
அனைவரும் அமர, மணமக்கள் அப்பத்தையும் இரசத்தையும் ஏந்தி பீடத்திற்கு கொண்டு செல்லலாம். வேறு காணிக்கைப் பொருள்கள் கொண்டு வந்திருந்தால், மணமக்களோடு பவனியாக எடுத்துச் செல்லவும்.(பாடல் குழுவினர் காணிக்கைப் பாடல் பாடுவர்.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக்கள் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:
குரு : (காணிக்கை மீது மன்றாட்டு)
அன்புமிக்க இறைவா, இன்று திருமணத்தால் இணைக்கப்பெற்ற ........க்காக நாங்கள் மகிழ்ச்சியுடன் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும். உமது அன்பினாலும் பராமரிப்பினாலும் நீர் இவர்களை இன்று ஒன்றாக இணைத்துள்ளீர். இவர்களுக்குத் தொடர்ந்து உம் ஆசியை வழங்கி, இவர்கள் தங்கள் மணவாழ்க்கை முழுவதும் மகிழ்ந்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் : ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்கள் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

திருமண உடன்படிக்கையை நீர் ஏற்படுத்தி, மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும், 
அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் மணமக்களை இணைத்தருளினீர். 
இதனால், திருமணவாழ்வு மக்கள் பேற்றினால் வளமையுற்று, 
உமக்குப் புதிய அன்பு பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. 
ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளாலும் 
திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர், 
பிறப்பினால் உலகம் அணி செய்யப்படுகின்றது, 
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்மு வழியாக வரும் மறுப்பிறப்பினால் 
திருச்சபை வளர்ச்சி பெறுகிறது.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். 
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, 
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. 
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், 
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன 
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா. 

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் 
வானமும் வையமும் யாவனும் மாட்சிமை யால்நிறைந் துள்ளன. 
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே 
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
இ) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்:

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : 
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் 
ஏனெனில் இது உங்களுக்காக 
கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் 
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். 
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் 
எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள் :ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இககுடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய தக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்கள் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, 
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

சிறப்பு ஆசீர் :

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவில் மணமுடித்த இம்மணமக்களை ஆண்டவர் தம் அருளின் ஆசியால் நிரப்பவும், திருமணத்தில் இணைந்த இவ்விருவரையும் நற்கருணை வழியாக அன்பினால் ஒன்றுபடுத்தவும் வேண்டுn;மன்று மன்றாடுவோம்.

(எல்லாரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிக்கின்றனர்.)

தூய தந்தையே, நீர் எமது சாயலாக மனிதரைப் படைத்த போது, ஆண், பெண் எனப் படைத்தீர். இவ்வாறு, கணவனும் மனைவியும் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றுபட்டு இவ்வுலகில் தங்கள் பணியை நிறைவேற்றச் செய்கின்றீர்.

இறைவா, உமது அன்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும், உம் மக்களோடு நீர் செய்தருளிய உடன்படிக்கையை நினைவூட்டவும், மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை ஓர் அடையாளமாகத் தந்தருளினீர், இந்த அடையாளம் திருவருள்சாதனமாக நிறைவு பெற்றதால், உம்முடைய விசுவாசிகளின் திருமண இணைப்பில் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையே உள்ள மண உறவாகிய மறைபொருள் விளங்கச் செய்கின்றீர். (;---பெயர்-- -) என்னும் உம் பிள்ளைகள் இவர்கள் மீது இரங்கி , உமது வல்லமையால் இவர்களைக் காத்தருளும்.

இறைவா, இத்திருவருள்சாதனம் அருளிய உறவினால் இவர்கள் உமது அன்பின் கொடைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாக, மேலும் நீர் இவர்களோடு இருக்கிறீர் என்பதற்கு ஒருவருக்கொருவர் அடையாளமாய் விளங்கி , ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உடையவர்களாய்த் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் இருவரும் ஒன்றாய் உருவாக்கும் குடும்பத்தை தம் உழைப்பால் பேணிக்காப்பார்களாக, தம் மக்களை நற்செய்தி நெறியில் பழக்கி, உமது வானக அரசின் குடும்பத்தில் வந்து சேர்க்க ஆவன செய்வார்களாக.

உம் மகள் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இதனால், இவர் மனைவிக்கும் அன்னைக்குமுரிய பணிகளை நிறைவேற்றி, தூய அன்பினால் குடும்பத்தைப் பேணி, இனிய பண்பினால் அதை அணி செய்வாராக.

உம் மகன் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இவர் உண்மையுள்ள கணவராகவும், முன்மதியுள்ள தந்தையாகவும் தம் கடமைகளை நிறைவேற்றுவாராக.

தூய தந்தையே, உம் திருமுன் மணம் புரிந்து கொண்ட இவர்கள் உமது திருப்பந்தியில் அமர விரும்புகிறார்கள், ஒரு நாள் இவர்கள் விண்ணக விருந்திலும் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. 
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)

(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எமக்கு அமைதி அருளும்.

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(மணமக்களுக்கு திவ்ய நன்மை அப்ப இரச குணங்களில் வழங்கப்படலாம்.)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடலைப் பாடுக.

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

குரு : ஜெபிப்போமாக ! 
வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா, உமது பராமரிப்பினால் நடந்தேறிய இத்திருமணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம். இம்மால் ஒரு புனித குடும்பமாக இணைக்கப்பெற்று, ஒரே அப்பத்தாலும் ஒரே பானத்தாலும் நிறைவடைந்துள்ள (பெயர்...பெயர்...) இவர்கள், அன்பினால் கருத்தொருமித்து வாழ்ந்து, உம் திருவுளத்திற்கேற்ப ஓர் இல்லத் திருச்சபையை ஏற்படுத்தி மகிழ்ந்திருக்க அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
அனை: -ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : என்றும் வாழும் தந்தையாகிய இறைவன், நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி , கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் என்றும் குடிகொள்ளச் செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

இறுதி ஆசீர்

குரு : உங்கள் மக்களால் ஆசியும், நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று, அனைவரோடும் நல்லுரவுடன் வாழ்வீர்களாக.
எல் : ஆமென்.

குரு : உலகிலே நீங்கள் இறையன்புக்குச் சாட்சிகளாய்த் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும், இறைவனின் வீட்டில் உங்களை ஒருநாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.
எல் : ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று 
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.

ஒப்புரவு அருட்சாதனம்

ஒப்புறவு - மறையறிவு

முன்னுரை: திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வழியாக நாம் கடவுளின் அருளைபெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள்,பேராசை, சுயநலம் ஆகியவை மனிதரை பாவத்தில் விழத்தாட்டுகின்றன. ஆனால் இறைமகன் இயேசு நம்மை ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக பாவத்திலிருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். ஒப்புரவு அருள்சாதனம் பாவசங்கீத்தனம், பச்சாதாபம், என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவார்த்தையில் ஒப்புரவு:  "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்!" (மாற்.1 : 15) எனும் முழக்கத்தோடு இயேசு தம் மீட்புப் பணியைத் தொடங்கினார். உயிர்த்தபின், தம் சீடர்களின் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா!" (யோ. 1 : 22-23) என்று கூறி ஒப்புரவு அருளடையாளத்தை ஏற்படுத்தினார்.

இறைவனின் இரக்கப் பெருக்கால் நாம் ஒப்புரவைப் பெறும்போது, நம்மை முதலில் அன்பு செய்தவரான பரம தந்தையிடம் திரும்புகிறோம். (1யோ. 4 : 19) நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடம் திரும்பி வருகிறோம். (கலா.2 : 20, எபே. 5 :25), நம் மீது ஏராளமாய்ப் பொழியப்படும் தூய ஆவியிடம் திரும்பி வருகிறோம். (தீத்து 3 : 6) இவ்வாறு, இறைவனோடு ஒப்புரவாகும் நாம், திருச்சபையோடும் அதன் உறுப்புகளான நம் சகோதரர்களோடும் ஒப்புரவாகின்றோம்.

முக்கிய கூறு: ஒப்புரவு அருள்சாதனத்தின் மையக்கூறு பாவத்திற்காக மனம் வருந்துதல். மனம் வருந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. பாவங்களை மன்னிப்பது கடவுளே. குருவானவர் இங்கே கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். நாம் மனமுவந்து இவ்வருள்சாதனத்தை பெற செல்வதே நாம் நம் பாவங்களுக்காக வருந்தும் ஒரு அடையாளமாக இருந்தாலும் குருவிடம் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவதாக அறிக்கை இடுவது போற்றுதற்குறிய செயல். நாம் குருவிடம் அறிக்கையிட்ட பாவங்களை அவர் நினைவில் கொள்வதுமில்லை, அடுத்தவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதுமில்லை என்பது நிச்சயம்.

பாவம் என்பது என்ன? கடவுளின் அன்பைப் புறக்கணிப்பது பாவம். கடவுளின் அன்பை நாம் எவ்வாறு புறக்கணிக்கமுடியும்? கடவுள் அன்பே வடிவானவர். அந்த அன்பின் வெளிப்பாடு இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களான நாமும் அதே அன்பில் வாழ அழைக்கப்படுகிறோம். இத்தகைய அன்பில் வாழாமல் சுயநலத்திலும், உலக இன்பத்திலும் முழ்கி, கடவுள் நமக்கு கொடுத்த அன்புக் கட்டளைக்கு எதிராக செயல்படும்போது கடவுளின் அன்பைப் புறக்கணிக்கிறோம். நம்மை அன்பு செய்யும் கடவுளுக்கு எதிராகவும், அன்புசெய்து வாழவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம். 

பாவத்தில் கனாகனம் உண்டா?  உண்டு. அற்ப காரியத்திலோ அல்லது முழு ஈடுபாடில்லாமலோ, அல்லது அறியாமையிலோ நாம் செய்யும் தவறுகள், குற்றங்கள் அற்ப பாவம். எடுத்துக்காட்டு -நமது சௌகரியத்திற்காக சிறு பொய் சொல்லுதல்(அடுத்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது). கடவுளின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் எழிதாக மீண்டும் அன்புறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.

கனமான காரியத்தில், மனம் பொருந்தி, முழு ஈடுபாட்டுடன், பாவம் என அறிந்தும் அதைச் செய்வது சாவான பாவம். எடுத்துக்காட்டு: மனமறிந்து மோக பாவம் செய்வது, கொலை செய்வது, போன்றவையாகும். (அடுத்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய செயல்கள் அனைத்தும்) இவை நமது ஆன்மாவை முற்றிலுமாக சாவுக்கு இட்டுச் செல்லும் காரியங்கள். கடவுளோடு உள்ள அன்புறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையை ஏற்படுத்துகிறது. 

எவ்வாறு இந்த அருள்சாதனத்தை பெறுவதற்கு தயாரிப்பது?  சரியான ஆன்ம சோதனை செய்து பார்த்து அப் பாவங்களுக்காக மனம் வருந்தவேண்டும்.
ஆன்ம சோதனை இரு முறைகளில் செய்யலாம்:
  1. பத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து பாவங்களை நினைவிற்கு கொண்டு வருதல்.
  2. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்: அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்: தன்னிலை செயல்களை ஆராய்ந்து பார்த்தல்.
ஒப்புரவு பெறும் முறை என்ன?
  1. செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல்.
  2. அவற்றிற்காக மனம் வருந்துதல்.
  3. இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல்.
  4. குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல்.
  5. நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.
மாதிரி ஆன்ம சோதனை:
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை 
  • எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முதலிடம் தந்தேனா?
  • பிற தெய்வங்களுக்குத் துதி பாடினேனா? வணங்கினேனா?
  • மாந்தரீகம், மூட நம்பிக்கை, ஜோதிடம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தேனா?
  • என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை பிறர் முன் காட்டத் தயங்கினேனா?
  • துன்ப நேரத்தில் கடவுளுடைய அன்பு, பராமரிப்பில் நம்பிக்கை இழந்தேனா? 
2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே. 
  •  கடவுளுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லியிருக்கிறேனா?
  •  இறைவனின் ஆலயத்தை புனிதமாக மதிக்கத் தவறிஇருக்கிறேனா?
3. கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி. 
  • ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் குறைந்த பட்ச முயற்சியாக திருப்பலி, திருவிருந்தில் பங்குகொள்ளத் தவறினேனா?
  • தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு கடவுளுக்கும், ஜெபிப்பதற்கும் அதிக நேரத்தை செலவுசெய்யத் தவறினேனா? 
4. தாய், தந்தையை மதித்துப் பேணு. 
  • என்னுடைய பெற்றேர்களுக்குத் தக்க மரியாதையை கொடுக்கத் தவறினேனா? பணிந்து நடக்காமல் இருந்தேனா? 
  • அவர்களை மதித்து நடந்தேனா? எக்காரியத்திலாவது நான் அவர்களை மனம் நோகச் செய்தேனா?
  • பெற்றோர்களின் வயதான காலத்தில் அல்லது அவர்களின் முடியாத காலத்தில் அவர்களை மாண்புடனும் என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு சௌரியங்களைச் செய்து கொடுத்து அன்புடன் நடத்தத் தவறியிருக்கிறேனா? கனிவுடன் பேசத் தவறியிருக்கிறேனா?
  • என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்து கரிசனையோடு நடக்கத் தவறினேனா?
  • என்னுடைய அலுவல் மட்டில் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு மதிப்புகொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்ப அளவிலும் அலுவலக அளவிலும் என்னுடைய கடமையை செய்யத் தவறினேனா?
5. கொலை செய்யாதே. 
  • வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கு செய்தேனா?
  • பிறருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினேனா?
  • பிறரைப் பற்றி அவதூறு கூறினேனா?
  • பிறர் மனம் நோகும் படியாக தீய சொற்கள் பேசினேனா? 
  • யாரையாவது நான் வெறுத்து அவர்களுக்குத் தீயது நடக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  • யார்மீதாவது பகைமையும் வஞ்சினத்தையும் நெஞ்சில் கொண்டு மன்னிக்க முடியாமல் இருக்கிறேனா? 
  • நேரடியாகவோ மறைமுகமாகவோ கருக்கலைப்புக்கு ஈடுபட்னேனா? உதவிசெய்தேனா?
  • தற்கொலை முயற்சி அல்லது எண்ணம் போன்றவற்றில் ஈடுபட்டேனா?
  • பிறருக்குத் துர்மாதிரியாக செயல்பட்டேனா? 
  • பிற உயிரினங்களை வதைத்தேனா? கொடுமையுடன் நடந்துகொண்டேனா?
6. மோக பாவம் செய்யாதே. 
  1. என்னுடைய நடை உடை பாவனைகளில் வீண் கவர்ச்சியைத் தேடியிருக்கிறேனா?
  2. தீய படங்களையோ, புத்தகங்களையோ படித்தேனா? பார்த்தேனா? 
  3. தீய எண்ணங்கள் தானாக மனத்தில் தோன்றியபோது அதை உடனடியாக விலக்கமல் இன்பம் அடைந்தேனா?
  4. என்னுடைய சொல்லாலும் செயலாலும் துர்மாதிரியாக நடந்தேனா? 
  5. என்னுடைய உடலை தூய ஆவியின் ஆலயம் என மதிக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேனா? 
  6. பிறரை தவரான நோக்கோடு பார்த்தேனா? மனத்தில் எண்ணினேனா? பழகினேனா?
  7. பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசினேனா? நடந்தேனா? பழகினேனா?
  8. திருமணம் ஆவதற்கு முன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  9. திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துகிறேனா? 
7. களவு செய்யாதே. 
  • பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா? எடுத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை இன்னாரது பொருள் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை உரியவரிடம் சேர்க்க தக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • பிறருடைய பொருள்களையோ சொத்துக்களையோ வேண்டுமென்று சேதப்படுத்தியிருக்கிறேனா?
  • பிறருக்கு கொடுக்கப்பட வேண்டிய அல்லது சேர வேண்டிய பொருளையோ பணத்தையோ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறேனா?
  • சூதாட்டத்தில் ஈடுபட்டேனா?
  • களவு செய்யபட்ட பொருள் என்று தெரிந்தும் குறைந்த விலை என்பதற்காக வாங்கி களவு செய்தலை உற்சாகப்படுத்தினேனா?
8. பொய் சாட்சி சொல்லாதே. 
  • என்னுடைய சுயநலத்திற்காக பொய் சொல்லியிருக்கிறேனா?
  • பொய் என்று தெரிந்தும் அது உண்மை என்று வாதிட்டிருக்கறேனா? சாட்சி கூறினேனா?
  • பிறரைப்பற்றி புறணி பேசினேனா? 
  • அடுத்வர்களை கேலி, பரிகாசத்துக்குள்ளாக்கி இருக்கிறேனா? 
  • இரகசியம் காக்கப்படவேண்டிய உண்மைகளை தீய உள்ளத்துடன் வெளிப்படுத்தினேனா?
  • பிறர் செய்த குற்றத்தை அல்லது பாவத்தை பறைசாற்றினேனா? 
  • அடுத்தவர்களை தீர்ப்பிட்டேனா?
9. பிறர் தாரத்தை விரும்பாதே. 
  • திருமணத்திற்குப் பின் என் அன்பை வெளிப்படுத்த தவறிஇருக்கிறேனா?
  • மனைவியை வெறும் போகப் பெருளாக நடத்துகிறேனா?
  • கணவர் அல்லது மனைவிக்கு தக்க அன்பையும மரியாதையையும உரிமையையும் கொடுக்கத் தவறிஇருக்கிறேனா?
  • திருமண உறவிற்கு அப்பாற்பட்டு எனது சிந்தனைகளை வேறு ஒருவரிடம் செலுத்துகிறேனா?
  • என்னுடைய கணவர் அல்லது மனைவி தவிர்த்து பிறருடன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  • என்னுடைய திருமண உடன்படிக்கையை மீறி வேறு நபருடன் உறவு வைத்துள்ளேனா?
  • தாம்பத்திய உறவில் திருச்சபையின் போதனையை மீறி நடந்திருக்கிறேனா?
10. பிறர் உடைமையை விரும்பாதே. 
  • அடுத்தவரிடம் காணப்படும் திறமைகளையும், செல்வத்தையும், நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டேனா?
  • பிறரை ஏமாற்றி அல்லது நேர்மையற்ற முறையில் பணமோ பொருளோ சம்பாதித்தேனா?
  • பிறருடைய அறிவுசார்ந்த (காட்சி, இசை, மென்பொருள்) உடமையை தவரான முறையில் பயன்படுத்தினேனா? 
பொதுவானவை:
  • என்னுடைய ஆன்மீக வாழ்விற்குத் தேவையான ஜெபம் என்வாழ்வில் முக்கிய இடம் பெறாமல் இருக்கின்றதா?
  • கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்ட கடவுளிடன் அருளைக் கேட்காமல் இருந்தேனா?
  • கிறிஸ்துவ வாழ்வில் துன்பம் வருகின்ற வேளைகளில் அதை தாங்கிக்கொள்ள இறைவனிடம் சக்தியை கேட்காமல் இருந்திருக்கிறேனா? 
  • பிறரை மன்னிக்கின்ற நற்குணம் இல்லாமல் இருக்கிறேனா?
  • என்னை பகைவர் என்று நினைப்பர்களுக்காக ஜெபம் செய்கிறேனா? 
  • என்னுடைய தேவைகளில் பிறர் உதவியை நாடாது தற்பெருமை கொண்டுள்ளேனா?
  • கடவுள் எனக்கு கொடுத்திருக்கின்ற திறமைகளையும் செல்வத்தையும் பிறறோடு பகிர்ந்து கொள்வதில் தாராளமுடன் இருக்கிறேனா?
  • உதவி செய்ய வசதியும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்தபோது சுயநலத்தோடு நடந்துகொண்டேனா?
  • உலக சமாதானத்திற்காகவும் மனித நேயத்திற்காகவும் ஜெபம் செய்ய மறந்திருக்கிறேனா?
  • நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு பரந்த மனத்துடன் அனைவருக்காகவும் உதவி தேவைப் படுவோர்காகவும் உதவிசெய்ய, ஜெபம் செய்ய தயாராய் இருக்கிறேனா? 
  • என்னுடைய ஞான மேய்ப்பர்களுக்கு என்னாலான உதவியைச் செய்கிறேனா?
  • எந்த அளவுக்கு கடவுள் எனக்கு திறமைகளையும், அருட்செல்வத்தையும், பொருட்செல்வவத்தையும் கொடுத்திருக்கிறாறோ அந்த அளவுக்கு அதிகமாக என்னிடம் பிறரன்புச் சேவையும் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து பிறரன்புச் சேவையிலும், திருச்சபைக்கும் என்னால் இயன்ற பொருளுதவியைச் செய்வதிலும், நேரத்தையும், சக்தியையும் கொடுப்பதில் தாராளமாய் இருக்கின்றேனா?
ஒப்புரவு வழிபாடு:
  1. பாவங்களை நினைத்துப் பார்த்தல் (ஆன்ம சோதனை)
  2. பாவங்களுக்காக மனம் வருந்துதல்
  3. பாவ அறிக்கையிடல்.
(குருவிடம் சென்றதும் ,சிலுவையடையாளம் இட்டு )
பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.

சுவாமி நான் பாவியாய் இருக்கிறேன். நான் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறேன். நான் இந்த அருட்சாதனத்தைப் பெற்று ...நாட்கள் அல்லது ....வாரங்கள் அல்லது ....மாதங்கள் ஆகின்றன.

(ஒவ்வொரு பாவத்தையும் எத்தனை தடவை செய்தோம் என்பதைத் தாழ்ச்சியுடன் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லவும். ,இறுதியில் :)

இந்தப் பாவங்களுக்காகவும் மறந்துபோன எல்லா பாவங்களுக்காகவும் என் கடந்த கால வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களுக்காகவும் மனம் வருந்துகிறேன். எனக்குப் பாவ மன்னிப்பு அளித்தருளும்.

4.அறிவுரையும் பாவப் பரிகாரமும்:

(குரு கூறும் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கவும். அவர் கொடுக்கிற பரிகாரம் மனத்துயர் ஜெபத்திற்குப் பின் செய்யவேண்டும்.)

5.குருவின் பாவப் பொறுத்தல் ஆசீர்

குரு : இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன், தம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், பாவ மன்னிப்புக்காகத் தூய ஆவியைப் பொழிந்தருளிய இறைவன், திருச்சபையின் திருப்பணி வழியாக உமக்கு மன்னிப்பும் சமாதானமும் அருள்வாராக. நானும் பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் உம் பாவங்களிலிருந்து உம்மை விடுவிக்கிறேன். சமாதானத்துடன் செல்லுங்கள்.

பெறு : நன்றி. (எழுந்து இருப்பிடம் செல்க. மனத்துயர் செபம் முடிக்கவிலை என்றால் தொடரவும்.)

மனத்துயர் செபம் 

(குரு பொறுத்தல் ஆசீர் வழங்கும் போதே கீழ்கண்ட மனத்துயர் செபம் சொல்லுக.)

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்துக்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.

உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

பின்னர் குரு கொடுத்த பரிகாரத்தை ஜெபிக்கவேண்டும் அல்லது செய்ய வேண்டும்.

உறுதிப்பூசுதல்

உறுதிப் பூசுதல் - மறையறிவு

முன்னுரை:  "உறுதிப் பூசுதல் என்னும் திருவருள்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் கடமைப்பட்டுள்ளனர்," (திருச்சபை11) 

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருள்சாதனத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தில் முன்னேறுகின்றனர், அவர்கள் இந்த அருள்சாதனத்தில், பெந்தகோஸ்தே நாளில் ஆண்டவர் அனுப்பிய அதே தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தூய ஆவி கொடுக்கப்படுவதால் விசவாசிகள் இன்னும் முழுமையாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்கள் ஆகின்றனர். திடம் பெறுகின்றனர், கிறிஸ்துவின் உடலை அன்பிலும் விசுவாசத்திலும் கட்டி எழுப்பக் கிறிஸ்துவுக்குச் சான்று பகரக் கூடியவராகின்றனர். அவர்கள் ஆண்டவரின் அழியா முத்திரையால் பொறிக்கப்படுவதால் உறுதிப்பூவுதல் ஒரே முறைதான் அளிக்கப்படும். (சடங்குமுறை1,2) 

தூய ஆவியின் கொடைகளும் கனிகளும்: உறுதிப்புசுதல் வழியாக நாம் தூய ஆவியின் கொடைகளான ஞானம், புத்தி, அறிவு, திடம், பக்தி, விமரிசை, தெய்வபயம் எனும் ஏழு கொடைகளையும் பெறுகிறோம். உறுதிப்புசுதல் பெற்றவர் தூய ஆவியின் கனிகளான பரிவன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, பரிவு, நன்னயம், பெருந்தன்மை, மென்மை, நம்பிக்கை, ஒழுங்கு, தன்னடக்கம், கற்பு ஆகியவைகளைத் தங்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க ஊக்கம் பெறுகிறார்கள். திருமுழுக்குப் பெற்ற யாரும் தக்க தயாரிப்புடன் இத்திருவருள்சாதனத்தைப் பெறலாம். இத்திருவருள்சாதனத்தை யாரும் இருமுறை பெற இயலாது.

யார் யார்? வழக்கமாக உறுதிப்பூசுதலை வழங்குபவர் அப்போஸ்தலர்களின் வழித்தோன்றல்களும், தலத் திருச்சபையின் தலைவருமான ஆயரே. அவருடைய அனுமதியின் பேரில் குருவும் நிறைவேற்றலாம். உறுதிப்பூசுதல் பெறுவோருக்கு ஞானத்தாய் தந்தையர் இருவரில் ஒருவராவது இருப்பது அவசியம். திருமுழுக்கில் ஞானப் பெற்றோராக இருந்தவரே உறுதிப்பூசுதலிலும் ஞானப் பெற்றோராக இருப்பது சிறப்பானது.

ஆயர் அல்லது ஆயரால் அதிகாரம் பெற்ற குரு 'கிறிஸ்மா' என்னும் புனித தைலத்தால் உறுதிப் பூசதல் பெறுபவரது நெற்றியில் பூசி .........(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!

உறுதிப்பூசுதல் பெறுவோர்: ஆமென். என்று சொல்லும் இப்பகுதி உறுதிப்புசுதலின் முக்கிய பகுதியாகும்.


(திருப்பலியில் இறைவாக்கு வழிபாடு முடிந்தபின், ஆயர் கேள்விகள் கேட்க, உறுதிப்பூசுதல் பெறுவோர் பதில் கூறுகின்றனர்.)

திருமுழுக்கு வார்த்தைப பாட்டை புதுப்பித்தல்

ஆயர் : பசாசையும், அதன் செயல்களையும், அதன் மாய கவர்ச்சிகளையும் விட்டு விடுகிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : விட்டு விடுகிறேன்.

ஆயர் : வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் : அவருடைய ஒரே மகனும், கன்னிமரியாவிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.
ஆயர் : அன்று, பெந்தகோஸ்தே விழாவின் போது அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்டதுபோல், இன்று, உங்களுக்குச் சிறப்பாக அருளப்பட இருக்கின்ற ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் : புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும் விசுவசித்து ஏற்றுக் கொள்கிறீர்களா?

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயர் : இதுவே நம் விசுவாசம், இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதிலே நாம் பெருமை கொள்கிறோம்.

உறுதிப்பூசுதல் பெறுவோர் : ஆமென்.

கைகளை வைத்தல் :

அன்பார்ந்த மக்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை வேண்டுவோமாக, திருமுழுக்கில் முடிவில்லா வாழ்வுக்கென ஏற்கெனவே புதுப்பிறப்பு அடைந்து, இறைவனின் உரிமை மக்களாகப் பெற்ற இவர்கள் மீது அவர் தயவுடன் தூய ஆவியைப் பொழிவாராக. அந்த ஆவியார், தம் கொடைகளை நிறைவாக அளித்து, இவர்களை உறுதிப்படுத்தி, தம் அபிஷேகத்தில் இவர்கள் இறைமகன் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்ளச் செய்வாராக.

(சற்று நேரம் மொளன செபம்)
ஆயரும் குருக்களும் உறுதிப் பூசுதல் பெறுவோர் மீது கைகளை வைக்க, ஆயர்மட்டும் கூறுவதாவது:

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையே, நீரினாலும் தூய ஆவியினாலும் உம் அடியார்கள் இவர்களைப் பாவத்தினின்று விடுவித்து, புதுப்பிறப்பு அளித்துள்ளீர், ஆண்டவரே, துணையாளராகிய தூய ஆவியைப் இவர்களுக்குள் அனுப்பியருளும்.

ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவியை,
ஆலோசனையும் வல்லமையம் தரும் ஆவியை,
அறிவும் பக்தியம் தரும் ஆவியை,
இவர்களுக்கு அளித்தருளும்,
தெய்வ பயத்தின் ஆவியால் இவர்களை நிரப்பியருளும்,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

திருத்தைலம் பூசுதல்

ஞானத்தாய் அல்லது தகப்பன் உறுதிப்பூசுதல் பெறுவோரின் தோள்மேல் தமது வலது கையை வைத்து, அவர் பெயரைச் சொல்ல, ஆயர் தம் வலது பெறுவிரல் நுனியைத் திருத்தைலத்தில் தேய்த்து, அவர் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து சொல்கிறார்.

(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!

உறு.பெறு. : ஆமென்.

ஆயர் : உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உறு.பெறு. : உமக்கும் சமாதானம் உண்டாவதாக.

திருப்பலியின் இறுதியில் ஆசியுரை :

ஆயர் : எல்லாம் வல்ல பரமதந்தை நீரினாலும் தூய ஆவியினாலும் உங்களுக்குப் புதுப்பிறப்பளித்து, உங்களைத் தம் சுவிகார மக்களாக்கிக் கொண்ட இறைவன், உங்களை ஆசீர்வதித்து , தந்தைக்குரிய தம் அன்புக்கு உகந்தவர்களாக உங்களை என்றும் காத்தருள்வாராக.

எல் : ஆமென்.

ஆயர் : பரம தந்தையின் ஒரே திருமகன், திருச்சபையில் உண்மையின் ஆவியானவர் என்றும் இருப்பாரென வாக்களித்த ஆண்டவர், உங்களை ஆசீர்வதித்து, உண்மையான விசுவாசத்தை நீங்கள் அறிக்கையிடுமாறு உங்களைத் தம் வல்லமையால் உறுதிப்படுத்துவாராக.

எல் : ஆமென்.

ஆயர் : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், தூய ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.

எல் : ஆமென்.

புனித அந்தோனியார் நவநாள்


1. வருகைப்பா (நிற்கவும்)

பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)

குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக
எல்: ஆமென்.

குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

எல்: ஆமென்.

புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம்

எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும் அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

இறைமக்களின் மன்றாட்டு (எழுந்து நிற்க)

குரு: ஜெபிப்போமாக - எங்கள் பாப்பரசருக்கும் ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டு தலைவர்கள், சமூகத்கலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருள வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும், சமய ஒற்றுமையிலும் சகோதரரை போல் வாழ்கை நடத்த வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: இத்திருத்தலத்தை நாடிவரும் பக்தர்கள் உமது திருவளத்தின்படி உடல் நலத்தில் நீடிக்கவும், மன அமைதியற்றோர் நிம்மதி அடையவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: தீய நிந்தனையிலிருந்தும், பேயின் சோதனையிலிருந்தும் நாங்கள் விடுதலை பெறவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: நாங்கள் விரும்பும் கோரிக்கைகள் கைகூடவும், எங்களை எதிர்கொண்டு வரும் தீமைகள் விலகவும், என்றும் உமது ஆதரவு இருக்கவும் வேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

குரு: யாவராலும் கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து நிற்கும் நெருக்கடியான வேளையில் எங்களுக்கு உதவவேண்டுமென்று

எல்: புனித அந்தோனியார் மூலம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஜெபிப்போமாக

குரு: எல்லாம் வல்ல இரக்கமுள்ள இறைவா, உம் அளவிலா அன்புக்குரியவரும, உமது அருளின் துணையால் கோடி அற்புதரெனப்பட்ட புனித அந்தோனியாரை அண்டி வந்துள்ள யாதிரீகர்களான எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக

எல்: ஆமென்

பாடல் (நிற்கவும்)

மாநிலம் போற்றிம் தூயவனே
உந்தன் பாதாரம் நாடி வந்தோம்
கோடிஅற்புதரெனப் பகழ் பெற்றீர்-2
நாடிவரும் எம் குறை தீர்ப்பீர் (மாநிலம்)

இயேசுவை கையில் தாங்கியதால் 
இறைவனின் அருளை அடைந்தீரே
மலைபோல் வரும் துயர் வாழ்வினிலே-2
நிலைகுலையாதிருக்க அருள்வீர் (மாநிலம்)

நற்செய்தி வாசகம் (நிற்க)

மறையுரை (அமர்க)

நோயாளிகளை ஆசீர்வதித்தல் (முழந்தாளிடுக)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: அவரே பரலோகத்தையும் பூலேகத்கையும் படைத்தார்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக

குரு: ஜெபிப்போமாக

எல்: ஆண்டவரே உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மை அடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணம் அடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக- ஆமென். 

குரு: (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்கள் பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக. எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து உங்களை வழிநட்துவாராக.

எல்: ஆமென் (பின்னர் தீர்த்தம் தெளித்தல்)

காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம்

ஓ மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே (காணாமல் போன பொருளைத் திரும்பக் கண்டடையும்படி) உமது ஆதரவைத் தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும். தேவரீரைக் கொண்டு இத்தகைய மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மேன்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன். -ஆமென்.

புனித அந்தோனியார் பிராத்தனை:

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரமண்டலததிருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே 
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ளியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்தரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே 
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை ரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே 
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிதருகிறவருமாய் பாவ அக்கினவுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள் உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.

பேய் ஓட்டுகிறதற்கு செபம்:

இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார். அல்லேலூயா!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

குழந்தை இயேசு நவநாள்


பிதா, சுதன், பரிசுத்தாவியின் பெயராலே - ஆமென்.

(வருகைப்பா)

அற்புதக் குழந்தை இயேசுவே!
அடியோர் மேல் இரக்கமாயிரும்!
(மும்முறை)

தொடக்கச் செபம்:
எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே! / அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். / செபத்தின் வழியாக / உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும் / நீரே எங்கள் ஆண்டவர் / நீரே எங்கள் மீட்பர் / எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை / எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். / எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து / எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். / வல்லமைமிக்க உமது உதவியைத் / தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம் / தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் / என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே. - ஆமென்.

விண்ணப்பம், நன்றி அறிக்கை

செபம்:
அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப்போற்றுவோமாக. - ஆமென்.

மன்றாட்டு:
பரிவிரக்கமுள்ள தந்தையே! உமது அன்பு திருமகன்ஆண்டவர் இயேசுகிறிஸ்து எங்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்முடைய பெயராலே உம்மிடம் நம்பிக்கையோடு கேட்குமாறு எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதே நம்பிக்கையோடு இங்கு கூடியிருக்கும் உம் மக்களின் மன்றாட்டுக்களை கேட்டருள உம்மிடம் வேண்டுகிறோம். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  1. நமது திருத்தந்தைக்காகவும், ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், துறவியருக்காகவும் வேண்டுவோம்: திருச்சபையின் வளமைக்கு உதவும் வற்றாத ஊற்றாக இவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். - ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  2. நாங்கள் வேண்டிய வரங்களை பெற்றுக்கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம். நன்றிகூறி உம்மை வாழ்த்திப் போற்றும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். - ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  3. நோயாளிகளுக்காகவும்,திக்கற்றவர்களுக்காகவும்,சோர்ந்திருப்போருக்காகவும் வேண்டுவோம்: இவர்களுக்கெல்லாம் ஆறுதலின், ஆதரவின் பிறப்பிடமாக தெய்வத் திருக்குழந்தையாகிய நீரே இருக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். - ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  4. யார் யாருக்கு தனிப்பட்ட வரங்கள் தேவையோ அவர்களுக்காக வேண்டுவோம்: இவர்களின் எளிய விசுவாசத்தை ஆசீர்வதித்து தம் திருவுளப்படி தெய்வத்திருக்குழந்தை, இவர்களின் விண்ணப்பங்களை அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். - ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
  5. குழந்தை இயேசுவின் பக்தர்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம்  குழந்தை உயிருள்ள விசுவாசத்தை இவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம். - ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(நம் சொந்த தேவைகளுக்காகவும் உறுதியோடு அமைதியாக செபிப்போம்.)

தந்தையே! உம் திருமகன் குழந்தை இயேசு வழியாக எங்கள் மன்றாட்டுக்களை கேட்டருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம், வாழ்வில் என்றுமே உமது திருவுளத்தை ஏற்று வாழும் வரமருளும்.

நன்றி மன்றாட்டு:
வானகத் தந்தையே! எங்கள் மீட்பராம் குழந்தை இயேசுவின் பிறப்பில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். மனுக்குலத்திற்கு
நீர் அருளிய மாபெரும் கொடை அவரே. அவரின் வாழ்வும், மரணமும், உயிர்ப்பும் இவ்வுலகில் எங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதுகாப்பளித்து, மறுவுலகில் முடிவில்லாப் பேரின்பத்தை அளிப்பதாக எங்கள் ஆண்டவராகிய குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

நோயாளிகளுக்காக செபம்:
எங்கள் தந்தையாகிய இறைவா! பாவத்திலிருந்து எங்களை மீட்கவும், துன்பத்திலிருந்து எங்களை விடுவிக்கவும், உம் திருவுளப்படி ஒரு சிறு குழந்தையாக உம் திருமகன் எங்களிடையே தோன்றினார். எல்லா நோயாளிகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். உமது சித்தப்படி இவர்களின் வேதனையை நீக்கி நோயை குணமாக்கியருளும். உமது இரக்கத்தால் உள்ளத்திலும், உடலிலும் இவர்கள் நலம் பெற்று மீண்டும் உமக்கு நன்றி செலுத்துவார்களாக, தந்தையாகிய உம்மோடும், தூய ஆவியோடும் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய குழந்தை இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கமுள்ள தந்தையே! தம்மை அண்டிவந்த நோயாளிகளின் துயரைக்கண்டு மனமிரங்கி, உம் திருமகன் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து நோயாளிகளும், அங்கம் குறைந்தவர்களும், தீராத நோயால் துன்புறுவோரும், கனிவான அவரது கரம் தொட்டவுடனே குணம் அடைந்தனர். இங்கே குழுமியிருக்கும் நோயாளிகள் எல்லோரையும் அதே அன்புக்கரத்தால் தொட்டு குணமாக்க வேண்டுமென்று தாழ்ந்த உள்ளத்தோடு உம்மை கேட்கிறோம். உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று மகிழ்வார்களாக எங்கள் ஆண்டவர் குழந்தை இயேசுவின் பெயரால் உம்மை வேண்டுகிறோம். - ஆமென்.

ஆசீர் பெறுதல்:
சிரம் தாழ்த்தி இறைவனின் ஆசியை இறைஞ்சுவோம் இறைவனின் திருமகன் குழந்தை இயேசு பாவ இருளை அகற்றி மகிழ்ச்சி ஒளியால் நம் உள்ளத்தை நிரப்ப இவ்வுலகத்திற்கு வந்தார். மனுவுருவான வார்த்தையானவர் அமைதியையும், ஆசியையும், அக்களிப்பையும் அளித்து, நம் அனைவரையும் நட்புறவில் ஒன்றாய் இணைப்பாராக.

இறைவனின் ஆவி நம்மை ஒரே குடும்பமாய் இவ்வுலகில் இணைத்து நித்திய பேரின்பத்திற்கு அழைத்துச் செல்வாராக.

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணிசெபம்:
(குறிப்பிட்ட நேரம் துவங்கி மணிக்கு ஒருமுறையாக அடுத்தடுத்து 9 முறை குழந்தைக்குரிய பற்றுதலோடு செபிக்கவும்)

ஓ இயேசுவே! "கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்,தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்" என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னை பரிந்துரை வழியாக நான் தட்டுகிறேன், தேடுகிறேன், கேட்கிறேன். நான் கோரும் இவ்வரத்தை கொடுத்தருளுமாறு பணிவுடன் கேட்கிறேன்.

ஓ இயேசுவே! " என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்" என மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரையின் வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை இறைஞ்சி கேட்கிறேன். 

ஓ இயேசுவே! "விண்ணும் மண்ணும் அழிந்துபோகும் ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா" என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குழந்தை இயேசுவின் செபமாலை

இச்செபமாலையின் அமைப்பு:
திருக்குடும்பத்தின் மகிமைக்காக மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.

நம் மீட்பருடைய குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக பன்னிரு மங்கள் வார்த்தை செபம்.

தூய திரித்துவத்தின் மகிமைக்காக மூன்று திரித்துவ புகழ் செபம்.

செபிக்கும் முறை

ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திற்கு முன்னால்
"வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார்" என்றும்

ஒவ்வொரு மங்கள வார்த்தை செபத்திற்கு முன்னும் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றித் தியானிக்க வேணடிய பேருண்மைகள்

1. இறைவனின் மனிதப் பிறப்பு. . .
2. தூய மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு . . .
3. இயேசுவின் பிறப்பு. . .
4. இடையரின் ஆராதனை . . . 
5. விருத்தசேதனம் . . .
6. ஞானிகளின் ஆராதனை . . .
7. இயேசுவின் காணிக்கை . . . 
8. எகிப்து நாட்டிற்குப் பயணம். . . 
9. எகிப்தில் தங்குதல் . . . 
10. எகிப்திலிருந்து திரும்புதல். . . 
11. நசரேத்தூரில் வாழ்க்கை . . .
12. மறைநூல் மேதைகளுக்கிடையே இயேசு. . . 

செபம்: 
குழந்தை இயேசுவே! ஒப்பற்ற உமது வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி, உமது அற்புத திருக்கர ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீர். நம்பிக்கையோடு உம்மைக் கூவியழைக்கும் பக்தர்களின் மன்றாட்டுக்களுக்கு கனிவாய் செவிசாய்த்தருளும். - ஆமென்.

குறிப்பு: 

இச்சிறு செபமாலைப் பக்தி தமக்கு எவ்வளவு பிரியமானது என்பதை தூய. மார்கரெட் அம்மாளுக்கு அறிவிக்க குழந்தை இயேசு அருள் கூர்ந்தார். இதை பக்தியோடு செபிப்பவர் கற்பு, தூய்மை என்ற வரங்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்களித்துள்ளார். 

பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் ஞானஸ்நானத் தூய்மையைக் களங்கமின்றி காப்பாற்ற இப்பக்தி பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். குழந்தை இயேசுவை தங்கள் முன் மாதிரியாகக்கொண்டு அவரை நேசிக்கவும், பின்பற்றவும், இச்செபமாலை பக்தி அவர்களுக்கு சிறந்த தற்காப்பு சாதனம் என்பதை உணரச் செய்யுங்கள்.

குழந்தை இயேசுவுக்குப் புகழ்மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்
வானகத் தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகை மீட்ட, மகனாகிய இறைவா 
தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

அற்புதக் குழந்தையாகிய இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும். 
வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே
எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே
வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே
உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே
எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே
துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே
உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே 
உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே
நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே
எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே
உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே
ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே 
எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே
ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே
பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே
உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே
எங்கள் மேல் இரக்கமாயிரும்

கருணை கூர்ந்து. . . எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே,
கருணை கூர்ந்து. . . எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.
எல்லாத் தீமையிலிருந்து . . . எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.
எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லா சந்தேகத்திலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்
எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று 
உம்மை மன்றாடுகிறோம். 
அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று
எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று
உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று
நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று
எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று
எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.

உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

உமது அற்புத திருச்சுரூபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

இறைமகனே, மரிமகனே, இயேசுவே 
உம்மை மன்றாடுகிறோம்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.

செபிப்போமாக:
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த . . . (உறுதியோடு கேட்கும்) வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக - ஆமென்.

நன்றி மன்றாட்டு:
கனிவு நிறைந்த குழந்தை இயேசுவே | என் மேல் நீர் பொழிந்தருளிய | எல்லா நன்மைகளுக்காகவும் | முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன் | உமது இரக்கத்தை நான் எனறும் போற்றிப் புகழ்வேன்| நீர் ஒருவரே என் இறைவன் | என் துணைவன் என்று பறைசாற்றுவேன். | என் நம்பிக்கை எல்லாம் இனி உமது கையிலே தான் | உமது இரக்கத்தையும்| வள்ளன்மையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். | உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக | குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் அதிகமதிகமாகப் பரவுவதாக| உமது உதவியை பெற்று மகிழும் அனைவரும் | உமது குழந்தைப் பருவத்திற்கு | என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக | என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக.
அர்ப்பண மன்றாட்டு:
இனிய குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் பேருண்மைகளை வியந்து, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை அன்புசெய்கிறேன் உம்மை மகிமைப் படுத்துகிறேன் என் மீது கொண்ட அன்பால் எனக்காக நீர் ஒரு சிறு குழந்தையாக பிறந்தீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த அன்புக்குப் பதில் அன்பாக என்னை முழுவதும் உமக்குக் கையளித்து காணிக்கை ஆக்குகிறேன். இப்பொழுதும், என் வாழ்நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மை இறைஞ்சிக் கேட்கிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், பிறப்பையும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும். உம்மை அன்பு செய்யவும், உம்மை பின்பற்றி நடக்கவும், வானகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்குத் துணை நிற்பதாக. - ஆமென்.

துன்பவேளை மன்றாட்டு:
இனிய இயேசுவே! மக்களிடையே வாழ்வதும், அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர். உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து, என் விண்ணப்பங்களையும், கோரிக்கைகளையும், ஏக்கங்களையும். . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும்)
உம்மிடம் கேட்கிறேன். உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன். இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து, மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க வேண்டும் என்று குழந்தை இயேசுவே உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்.

நோய் வேளை மன்றாட்டு:
இரக்கமுள்ள குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும். இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர்.

இன்று இந்த உமது திருச்சுரூபத்தை நாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான, படு மோசமான நோய்களிலிருந்து உம்மால் தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர். குழந்தை இயேசுவே! நான் ஒரு பாவி துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும். என்றாலும் எண்ணற்ற வரங்களையும், நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர் மனம் இரங்கி அளித்து வருகின்றீர். ஆகையால் என்னையும் நீர் குணமாக்க முடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன். வானக மருத்துவரே! இந்த . . . நோயினின்று (நோயை குறிப்பிடுக) நான் குணமடைய வேண்டும் என்பதற்காக, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும். எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும். பெற்ற குணத்திற்கும் மூலகாரணம் மருந்தல்ல் எல்லாம் வல்ல உமது தெய்வீக ஆற்றல் என்பது எல்லோருக்கும் புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும். 

ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப எந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே எனக்கு ஆகட்டும். ஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும். இந்நோயால் நான் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும். இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை என் உள்ளத்தை நிரப்பட்டும். அன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே! துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும், உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும். ஓ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும் நோயால் படுக்கையாகி விட்டாலும், நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும். உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும். - ஆமென்.

தூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு:

(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல்)

வல்லமையுள்ள செபம்:
இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்" என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன்.

சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. - ஆமென்.

புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்


அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன் பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் விஷக்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.

ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சியஷடவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். - ஆமென்.

புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு


  1. பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்புக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
  2. ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  3. புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் விஷநோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  4. சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு விஷபேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  5. பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
  6. உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோஷமடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
  7. உரோமாபுரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சரீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்:இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.


துணை: புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்கு சரியான் ஒளஷதமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சரீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, விஷ பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.

புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . . 
வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்புண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . . 
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . . 
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவரே,
அநேக அற்புதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. . 
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபுரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சரீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. . 
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்புகளால் எய்யப்பட்டவரே. . .
அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .
குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோஷத்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசேஷ மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. . 
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. . 

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே. . .எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மு: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

து: புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம் - ஆமென்.