புனித செபஸ்தியாரை நோக்கி ஜெபம்
அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன் பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் விஷக்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.
தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.
ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சியஷடவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். - ஆமென்.
புனித செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு
- பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குடும்பத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணிலடங்காத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக படையில் சேவை செய்தவரான புனித செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையுஞ் சகல பொல்லாப்புக்களிலே நின்று, சர்வேசுரன் இரட்சித்தருள வேணுமென்று பரமகர்த்தர் சந்நிதியில் நீர் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பார்த்து பிரார்த்தித்துக் கொள்கிறோம் -பர, அருள், பிதா.
- ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தை பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான புனித செபஸ்தியாரே, உலகெங்கிலும் பசாசின் ஆராதனை ஒழித்து எல்லோருஞ் சத்திய வேதம் அறிந்து, ஞான தீட்சை பெற்று, திருச்சபைக்கு உள்ளாகத் தக்கதாக, நீரே சர்வேசுரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
- புனித பாப்பானவருக்கு மிகவும் பிரியமும், ஆறுதலும் அகமகிழ்வும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் விஷநோய் முதலானவைகளை நீக்கியவரான புனித செபஸ்தியாரே, இந்நேரங்களில் கிறிஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலான வியாதிகளில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று, நீரே எங்களுக்காக பரம கர்த்தரை வேண்டிக்கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
- சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத்துக்காக துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவியாகவும், வியாதிக்காரருக்கு தேவகிருபையால் ஆரோக்கியங்கொடுத்த புனித செபஸ்தியாரே! கிறிஸ்தவர்களுக்கு விஷபேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரமகர்த்தர் தற்காத்து இரட்சித்தருள வேணுமென்று தேவகிருபை சிம்மாசனத்தில் மன்றாட உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
- பூலோகமெங்கும் சுகிர்த நாமம் உடைத்தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமுமாயிருந்த புனித செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்ல மனதைக் கொடுத்தருளும். இந்த இராச்சியத்துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும் சர்வேசுரனை மன்றாடும் படிக்கு உம்மை பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா.
- உலக மகிமை, பெருமை, புகழ், செல்வமெல்லாம் வெறுத்து இயேசுநாதரைப் பற்றிப் பிராணனைத்தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு மார்செல்லியனுக்கு புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுகளுடன் இயேசுநாதர் வந்து உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாயென்று சொல்லக்கேட்டு சந்தோஷமடைந்த புனித செபஸ்தியாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே காங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்திலே சேர்ந்து கர்த்தரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். -பர, அருள், பிதா
- உரோமாபுரி தியோக்கிலேசியன் என்ற இராயனால் அநேகம் அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை பெருந்தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டு மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டு, உமது திருச்சரீரத்தை அப்போஸ்தலர்களான புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கஞ்செய்யப்பட்ட புனித செபஸ்தியாரே, திருச்சபையாரெல்லாம் சர்வேசுரனுடைய சித்தத்துக்கேற்ப நடக்கத்தக்கதாகவும் சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத்தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.- பர, அருள், பிதா.
முதல்:இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக.
துணை: புனித செபஸ்தியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி! உமது அதி உன்னதமான மகிமை பெற்ற புனித செபஸ்தியார், உமக்காக பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்கு சரியான் ஒளஷதமாகத் திருவுளமானீரே, அவரது பேறுபலன்களை பார்த்து எங்கள் ஆத்தும வியாதியிலும், சரீரத்திலும் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, விஷ பேதி முதலிய தொத்து வியாதிகளிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணுமென்று இந்த ஏழு மன்றாட்டுக்களையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமி -ஆமென்.
புனித செபஸ்தியாருக்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா,
எங்களை. . . . .
இஸ்பீரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை. . . .
வேதசாட்சிகளுக்கு இராக்கினியான புனித மரியாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உயர்ந்த குடும்பத்தில் பிரதாப மகிமையான புனித செபஸ்தியாரே,
உமது பிறப்பினால் நற்போன் பட்டணத்தை முக்கியப்படுத்தின புனித செபஸ்தியாரே. . .
இத்தாலி தேசத்தில் அதிசயப்புண்ணிய பிரகாசத்தினால் விளங்கியவரே. . . .
வேதத்துக்காகத் துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே. . . .
அஞ்ஞான இருளில் ஞானக்கதிரால் பிரகாசித்தவரே. . .
தரித்திரர்களுக்கு உதார தகப்பனாரே. . .
நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சிகளுக்குப் புத்திமதி சொல்லித் திடப்படுத்திப் பிரகதியில் சேர்பித்தவரே. . .
ஆச்சிரியத்துக்குரிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித்தவரே,
அநேக அற்புதங்களால் இயேசு கிறிஸ்துவினுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணினவரே. . . .
வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவராயிருந்தவரே. . .
சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே. . . .
வேதசாட்சிகளுக்குத் தங்கள் சோதனைகளிலும் மரணவேளையிலும் பலமும் தேற்றரவுமாயிருந்தவரே. . . .
திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக்கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையாயிருந்தவரே. . .
பக்தி நிறைந்த வாக்கியங்களாலும் அநேகர் இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே. . .
அஞ்ஞானிகளான அநேகருக்குச் சத்தியத்தை தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே. . . .
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தர்களை முதலாய் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே. . . .
அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே. .
விசுவாசிகளுக்கு உதவியாக, சக்கரவர்த்தி, உரோமாபுரி இராயனிடத்தில் சேனை தலைவராக உயர்த்தப்பட்டவரே. . .
சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் மிகவும் பிரியப்பட்டவரே. . .
சத்திய திருச்சபைக்குத் தஞ்சமானவரே. . .
அர்ச். பாப்பானவருக்கு மிகவும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே. . .
சிலுவை அடையாளத்தில் திமிர்வாதத்தை நீக்கினவரே. . .
ஊமையைப் பேசவைத்தவரே. . .
அநேக வியாதிகளை அதிசயமாகத் தீர்த்து ஆரோக்கியம் தந்த உத்தம வைத்தியரே. . .
எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங்களைச் செய்தவரே. . .
பசாசுக்களுக்குப் பயங்கரமான சாட்டையாய் இருந்தவரே. . .
உலகம் பசாசு சரீரத்தின் தந்திரங்களையெல்லாம் ஜெயித்தவரே. .
பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங்கியவரே. . .
அத்தியந்த விசுவாசத்திடனை உடையவரே. . .
இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞானச்சூளையே. .
உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரே. .
இயேசுநாதருடைய சிநேகத்துக்காக இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இழந்தவரே. . .
இயேசுநாதரைப்பற்றிப் பிராணனைத்தர மிகவும் அபேட்சித்தவரே. . .
சத்திய வேதத்தை அனுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத்தீர்வை இடப்பட்டவரே. . .
திரளான அம்புகளால் எய்யப்பட்டவரே. . .
அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே. .
உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத்துடன் இராயன் முன்னிலையில் போய் கிறிஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தைக் கண்டித்தவரே. . .
குரூரம் மாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே. . .
எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாத வேதசாட்சியே. . .
விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேதசாட்சியே. . .
உமது இரக்கத்தால் கிறிஸ்து வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே. . .
மிக தைரிய சந்தோஷத்துடனே வேதத்துக்காக பிராணனைக் கொடுத்தவரே. . .
தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே. . .
மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த சோதி மகிமையுள்ள வேத சாட்சி முடி சூட்டப்பட்டவரே. . .
வேதசாட்சிகளுக்குள் விசேஷ மகிமைப்பிரதாபத்துடனே பிரகாசித்தவரே. . .
உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளைநோய் பெருவாரிக்காய்ச்சல் நீங்கினதால் மிகவும் பேறுபெற்றவரே. .
பூலோகமெங்கும் சுகிர்தவாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே,
சகல கிறிஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனாரே. . .
வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருந்தவரே. .
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே. . .எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் . . .எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப். . .எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
து: புனித செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
செபிப்போமாக
சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி! எங்கள் இக்கட்டுகளையும் பலவீனங்களையும் கிருபையுடனே பார்த்து அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்ப துரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி புனித செபஸ்தியாருடைய வேண்டுதலினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படியாக கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம் - ஆமென்.
Muthu nagar st. Sebasthiyarae pray for my 🙏🙏🙏🙏🙏🙏🙏family
பதிலளிநீக்குசெபஸ்தியார் அம்மானை Book Kidaikkuma....Please
பதிலளிநீக்குபுனித செபஸ்தியாரே வியாதியின் பிடியில் சிக்கி தவிக்கும் எனது மகனை உமது திருகரங்களால் தொட்டு குணப்படுத்தியருளும்.. ஆமென் 🙏🙏🙏
பதிலளிநீக்குMy baby ammani sagapadithum
நீக்குஎனது கணவருக்கு நல்ல சுகம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குPunitha sebasthiar vazhliyaha en kanavarin kaalukku nalla sugam kidaitharku yesappa umakku nañri.
பதிலளிநீக்குபுனித செபஸ்தியாரின் செபத்திற்காக நன்றி
பதிலளிநீக்குSt. Sebastian prayers are so powerful. I get what I ask when I pray through Sebastian. St. Sebastian. Pray for us
பதிலளிநீக்குAmen
பதிலளிநீக்குI believe that I will be recovered in the name of Jesus with the help of St.Sebastian prayers. புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதிலளிநீக்கு