நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு டிசம்பர்-31


இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே, கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த கணக்கிட முடியாத நன்மைகளுக்கு உளமாற அவருக்கு நன்றிசொல்லவும், கடந்த ஓர் ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், வருங்காலம் நமக்கு வசந்த பாலமாக அமைய இறைவனின் அருள் வேண்டி நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். எனவே இந்த வழிபாட்டிலே நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.

ஆண்டவருக்கு ஆராதனை செலுத்துவோம்

அன்பார்ந்தவர்களே, நம் இறைவன் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாத இறைவன். நம் இறைவன் காலங்களுக்கும், யுகங்களுக்கும் தலைவரான ஆண்டவர். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை சீரும் சிறப்புமாய் வழிநடத்திய நம்இறைவனை, நம் வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டைக் கொடுக்கப்போகிற இறைவனை நாம் இப்போது ஆராதித்து புகழ்வோம். என்றும் வாழும் நம் ஆண்டவரை போற்றும் வண்ணமாக இந்தப் பாடலை அனைவரும் சேர்ந்துப் பாடி அவரை ஆராதிப்போம்.

பாடல்: ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்... அல்லது தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம்.. (பொருத்தமான பாடலைத் தேர்வுசெய்து கொள்ளலாம்) அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் மௌனம் காக்கவும்.
கண்ணீர் அஞ்சலி: கடந்த ஆண்டு நோய்களினாலும், பல்வேறுப்பட்ட விபத்துக்களினாலும், தீவிரவாத தாக்குதலாலும், இயற்கையின் சீற்றத்தாலும், மதவெறிதாக்குதலாலும் உயிரிழந்த நம் சகோதரர்கள் இறைவனின் பதம் சேந்தருள வேண்டுமென்று இப்போது உருக்கமாக செபிப்போம்.

இறையருள் பெற மன்னிப்பு வேண்டுவோம்: நம் இறைவன் கருணையே உருவானவர். நம்மை தேடிவந்து அன்பு செய்யும் தேவன். அத்தகைய இறைவனிடம் கடந்த ஆண்டு முழுவதும் அவரக்கு எதிராகவும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும், நமக்கு நாமே செய்த பாவங்களுக்கு இவ்வேளையில் மன்னிப்பு மன்றாட்டுகளை இறைவனிடம் எழுப்புவோம்.

பல்லவி: நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே.
  1. உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அவை உறைபனிபோல வெண்மையாகும். எசாயா 1:18. என்று சொன்ன இறைவா, நாங்கள் உம்மிலே எங்கள் மனதைச் செலுத்தாமல் உலகப்போக்கின்படி வாழ்ந்ததற்காக, எங்களை மன்னித்து உம் அருளை எங்கள் மேல் பொழிந்தருளும் ஆண்டவரே.
  2. நானும் தீர்ப்பிடேன் இனி பாவம் செய்யாதே, சமாதானமாய்ப் போ. யோவான் 8:11. என்று சொன்ன இறைவா, நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளை அநியாயமாய் தீர்ப்பிட்டு அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நேரங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  3. காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவரே, எங்களுக்கு கொடுக்க்ப்பட்ட வாய்ப்புகளையும், நேரத்தையம், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  4. உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. எபேசி 6:2. என்று மொழிந்த இறைவா, எங்கள் பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படியாமல் அவர்களின் அறிவுரைகளை, நல்லொழுக்கங்களை அலட்சியம் செய்தமைக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  5. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். எபேசி 6:4. என்று மொழிந்த இறைவா, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சிறந்த முன்மாதிரிகையாய் இருக்க தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: கருணைமிக்க நம் இறைவன் நம் பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அவரது அன்புறவில் சேர்த்துக்கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைக்ளுக்கு இப்போது நன்றிகூறுவோம்.

வாசகம்: 1தெச 5:16-18
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 105:1-8
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் (இதனை பாடுதல் சிறந்தது)

இப்போது நமது நன்றி மன்றாட்டுக்களை இறைவான்பால் எழுப்ப அனைவரும் எழுந்து நிற்போம். பின்வரும் ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் பின்வரும் பல்லவியை பாடவும்.
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா 
நாவாலே துதிக்கிறோம் நாதா
  1. கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எங்களை நல்வழியில் நடத்தி சென்றமைக்காக நன்றி கூறுகின்றோம்.
  2. கடந் ஆண்டு எங்களை நோய் நொடியிலிருந்து காத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  3. கடந்த ஆண்டு நல்ல மழையைக் கொடுத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  4. வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  5. எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  6. எம் பங்கையும், பங்கு மக்களையும், பங்கு குருவையும், கன்னியர்களையும் நல் வழியில் காத்து வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  7. எம் பங்கு குழந்தைகள் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், ஞானத்திலும் வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  8. இந்ந வருடத்திற்கு சிறந்த விளைச்சலையும், வருமானத்தையும் தந்தமைக்காக இறைவா நன்றி கூறுகின்றோம்.

இறைவனின் ஆசிரைப் பெறுவோம்
இறைவனின் ஆசிரைப் பெற அனைவரும் முழந்தாளிட்டு ‘மாண்புயர்’ கீதம் பாடுவோம்.

புத்தாண்டு விழா

முன்னுரை
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இந்த நாள் இனிய நாள். இன்று புத்தாண்டு விழாவையும், அன்னை மரியா இறைவனின் தாய் என்ற விழாவையும் இணைத்து திருச்சபை கொண்டாடுகிறது. புதிய நாளை காண வாய்ப்புக் கொடுத்த ஆண்டவரைப் போற்றுவோம், நன்றி கூறுவோம். கடந்த ஆண்டு இறைவன் வழியாக பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைவு கூறுவோம். நம் உறவுகளுக்கு உறுதியூட்டுவோம் ஒவ்வொரு கணமும் ஆண்டவரின் அருள் தரும் நாளாக மாற ஆண்டவரை இறைஞ்சுவோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், இன்ப துன்பங்களை சமமாக பார்த்து சரித்திரம் படைக்கவும், அமைதியான உலகை உருவாக்க அன்னையின் துணையை வேண்டி இக்கல்வாரி பலியில் ஒன்றிணைவோம்.
முதல் வாசகம் (எண் 6:22-27)
ஆண்டவர் அனைவருக்கும் ஆசீர் வழங்குகின்றார் அதை நாம்தான் உணரவில்லை. ஆண்டவரின் ஆசீர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அமைதியை தருகிறது. அருள் பொழிகிறது என விளக்கும் முதல் வாசகத்தை திறந்த மனதுடன் கேட்போம்.
இரண்டாம் வாசகம் (கலா 4:4-7)
சட்டத்திற்கு அடிமையாகி, சுதந்தர வாழ்வை இழந்து வாழ்ந்த நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார். கடவுள் தம் ஆவியை பொழிந்ததினால் நாம் அவரை அப்பா என அழைக்கும் உரிமை பிள்ளைகளானோம். இறை பிள்ளைகளாய் வாழ இரண்டாம் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இறைமக்களின் வேண்டல்

1. அன்பின் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் சமாதான கருவிகளாய் திகழவும், இறையரசின் விழுமியங்களை நிலைநாட்ட தேவையான உடல், உள்ள நலனை தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானம் அளிக்கும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, நாடுகளிடையே சமூக உறவை வளர்க்க தேவையான பரந்த மனதை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் பொழியும் தலைவா! உலக மக்கள் சுயநலத்தை விடுத்து, பிறர் நலம் காக்க சுற்றுபுற சுகாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவும், சமூக பாகுபாடுகள் ஒழிந்து சமத்துவம் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி மக்கள் புதுவாழ்வு பெற வேண்டிய வரங்களை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் நல்தெய்வமே! புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 2: 16-21)

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று தாய் திருச்சபை இரண்டு விழாக்களை இணைத்து கொண்டாடி மகிழ்கிறது. 1. அன்னை மரியா இறைவனின் தாய் 2. புத்தாண்டு விழா. ஜானஸ் என்ற உரோமை கடவுளின் பெயரில் இருந்து ஜனவரி என்ற மாதம் உருவானது. இந்த உரோமை கடவுளுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும், இது எதை குறிக்கிறது? நாம் கடந்து வந்த காலம், விட்டு வந்த தடங்கள், மகிழ்ச்சியான நேரங்கள், கசப்பான அனுபவங்கள், சாதனைகளை திரும்பி பார்த்து நினைவு கூறவும், வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நம் கண்முன் நிற்கும் சவால்களை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அன்னை மரியா - இறைவனின் தாய்
மரியா, இயேசுவின் தாய், இறைவனின் தாய் என்னும் உண்மை, விவிலியத்திலும், வரலாற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்படமுடியாத ஓர் உண்மை. தொடக்க காலத்திலிருந்தே, மரியாவை இறைவனின் தாய் என போற்றி வணங்கி வந்தனர். கி.பி.429 ம் ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமையன்று கான்ஸ்ந்தாந்தி நோபிள் என்ற நகரில் நெஸ்டோரியஸ் என்ற ஆயர் தன்னுடைய மறையுரையில் மரியா மனித தன்மையில் இருந்த இயேசுவின் தாயேயன்றி, இறைவனின் தாயல்ல என்று குறிப்பிட்டு, யார் யாரெல்லாம் மரியாவை இறைவனின் தாய் என்கிறார்களோ அவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இதை மறுத்து கி.பி.431ல் எபேசு நகர் பொது சங்கம் theotokos (தெயோடோகோஸ்) என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தி, மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தியது. தெயோஸ் என்றால் கடவுள், டோக்கோஸ் என்றால் ஈன்றெடுத்தவர் என்பது பொருள்.

புதிய ஆண்டிலே அடி எடுத்து வைக்கின்ற நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் ஆண்டவர் கூறுவது: எனது ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. இந்த ஆண்டு முழுவதும் உனக்கு அமைதி தருவேன் என்கிறார். இன்றைய முதல் வாசகம் (எண் 6:22-27) குருத்துவ ஆசிமொழிகள் பற்றி குறிப்பிடுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெற ஒவ்வொரு மனிதரும் விரும்புகின்றனர். மக்கள் செல்வங்களில் ஆண்மக்கள் ஆசீர், பெண்மக்கள் சாபம் என்ற கருத்து மக்கள் மனதில் இருந்தது. தால்மூத் என்னும் யூத விளக்கவுரை நூல் எண் 6:24 க்கு இவ்வாறு விளக்கமளிக்கிறது.

ஆண்டவர் உனக்கு ஆண்பிள்ளை என்னும் ஆசி வழங்கி, பெண் பிள்ளையினின்று உன்னை காப்பாராக என்கிறது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் ஆபிரகாமிடம் உனக்கு ஆசி வழங்குவேன் … நீயே ஆசியாக விளங்குவாய்… உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்றார் (தொநூ 12:2-3). யாக்கோபு ஆற்றுத்துறையில் ஒரு நபரோடு போராடியபோது, நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடமாட்டேன் என்று கூறினார் (தொநூ 32:26).

புதிய ஏற்பாட்டில், பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தினை பெற்ற மரியா (லூக் 1:42) கடவுளின் திருவுளத்தை செயல்படுத்த துன்பம் ஏற்ற ஓர் உண்மையான அடியவராக விளங்கினார்.

ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திபா 121:8ல் பார்க்கிறோம். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார்: வரும்போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னை காப்பார்.” ஆண்டவரின் கரம் நம்மைக் காத்து வழி நடத்தும் போது நமது வாழ்வில் அமைதி நிலைக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலா 4:4-7), பெண் வழியாக எவ்வாறு மனித குலத்திற்கு அழிவு வந்ததோ, அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்தது. கிறிஸ்து மனிதனாகவில்லை, கடவுளாக மட்டுமே இருந்தார். வானவர் போன்று காட்சி தந்தார் என்னும் கருத்தை எதிர்த்து, அவர் உண்மையில் மனித நிலையை ஏற்றார் என வலியுறுத்துகிறது. அவர் மனித இயல்பில் மட்டும் பங்கு கொள்ளாமல், எல்லா மனிதரைப் போல சட்டத்திற்கும் கட்டுப்பட்டார்.

கிறிஸ்து மேற்கொண்ட மீட்பு பணியின் இரு நோக்கங்களும் கூறப்படுகிறது. 1.திருச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்பது 2. இறைவனின் பிளைளைகளாக்குவது. யூதர் தம் தந்தையரை அன்போடு அழைக்க ‘அப்பா’ (யுடிடிய) என்னும் அரமேயச் சொல்லை பயன்படுத்துவர். ஆனால் இதே வார்த்தையை கொண்டு தந்தை கடவுளை அழைக்க எந்த ஒரு யூதனும் துணியமாட்டான். இயேசுவோ அப்பா என அழைப்பதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் அவ்வாறு அழைக்கும் உரிமையை கொடுத்தார். நாம் அவரின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் ஆவியை பொழிந்துள்ளார். எனவே நாம் அடிமையல்ல அவரின் உரிமை மக்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் (லூக் 2:16-21) இடையர்கள் வியப்பு மிக்கவர்களாய் பெத்லகேமிற்கு சென்று தூதர் கூறிய ஒவ்வொன்றும், வார்த்தைக்கு வார்த்தை உண்மையாயிருப்பதை கண்டனர். தங்களுக்கு தூதர் அறிவித்ததை; யோசேப்புக்கும், மரியாவுக்கும், மக்களுக்கும் தெரிவித்தனர். மக்கள் வியந்தனர். அதோடு மறந்திருக்க கூடும். ஆனால் ஒரு பெண் மட்டும் மறக்கவில்லை அவர்தான் மரியா. அதையும் உள்ளத்தில் சிந்தித்தார். இறைவன் விரும்பிய விதத்திலே மரியா இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்.
குழந்தைக்கு பெயர் கொடுப்பது தந்தையின் உரிமையாகும். இங்கு கடவுளே தூதர் வழியாக “யாவே மீட்கிறார்” என பொருள்படும் இயேசு என்ற பெயரை கொடுக்கிறார்.

இறையேசுவில் பிரியமானவர்களே! இந்த நன்னானில் அண்டவரின் ஆசிரும், அமைதியும் நமக்கு நிறைவாய் கிடைக்க ஜெபிப்போம். கடந்த காலத்தில் ஆண்டவர் அன்னை மரியா வழியாக செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். வருகின்ற ஆண்டிலே நாம் செய்யும் செயலை இறைவன் நிறைவாய் ஆசிர்வதிக்கவும், அனைத்தும் வெற்றியடையவும் நம் விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.

அமைதி என்பது சண்டை, சச்சரவு இன்றி வாழ்வது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த தூய வாழ்வு வாழ்வதேயாகும். இறைவன் மட்டுமே அதை கொடுக்கமுடியும். யோவா 14:27ல் “அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்”, என்று இயேசு கூறினார். அமைதியை பெற்ற நாம் அதை எல்லா இடங்களிலும் நிலைநாட்ட வேண்டும். நம்முடைய குடும்பங்களில், உறவு நிலைகளில், அமைதியை ஏற்படுத்துவது நமது கடமை, ஏனெனில் ஆண்டவர் இயேசு பிறந்த போதும், இறந்து உயிர்த்த பின்னும் அவர் நமக்கு விட்டு சென்றது அமைதி. இந்த புதிய ஆண்டில் இறைவனை மையப்படுத்தி நம் செயலை தொடங்கும் போது நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.

- பெ. யூஜின் அருண்குமார்

புத்தாண்டு இரவுத் திருப்பலி 01-01-2012


திருப்பலி முன்னுரை:
குழந்தை இயேசுவை மகிழ்ச்சியோடு உள்ளத்திலே வரவேற்றிருக்கும் அன்பார்ந்த இறைமக்களே! எவ்வாறு இயேசுவின் வருகையை பழைய ஏற்பாட்டு நூல்கள் சுட்டிக்காட்டி கடவுளின் மகனை இவ்வுலகிற்கு தந்ததோ அதே போல் இன்றைய நாளும் நாம் கடந்து வந்த நல்ல பாதைகளுக்கு நன்றியாகவும் இடறலான காலங்களை நினைந்து அவற்றிலிருந்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளவும் எதிர் காலத்தை சரியான விதத்திலே முழுமையாக பயன்படுத்தத் தேவையான மன பலத்தையும் நமக்கு கொடுக்க இத்திருப்பலியில் குழந்தை இயேசுவின் மூலம் கடவுளைப் போற்றி நன்றி கூறவும் தாய் மரியாளும் வளர்ப்புத் தந்தை யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் தங்களை கடவுளிடம் எவ்வாறு முழுமையாக ஒப்படைத்தார்களோ அதுபோல இன்று நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைப்பதன் மூலம் புதிய வாழ்வை இப்புதிய ஆண்டிலே பெற இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசகமுன்னுரை:
கடவுள் இஸ்ராயேல் மக்களை பராமரிக்கும் நிலையையும் அவர்களுக்கு அவர் தருகின்ற அருள் வரங்களையும் ஆசிரையும் மோசேயிடம் விவரிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் முதல்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுள் தம் ஒரே அன்பு மகனை அனுப்பி நாம் அவரின் பி;ள்ளைகளாக திருவுளம் கொண்டார் என்றும் இதனால் நாம் அனைவரும் கடவுள் மீது பிள்ளைகள் என்ற முறையில் முழு உரிமை கொண்டவர்களாக இருக்க முடியும் என்ற மேலான கருத்தை விவரிக்கும் இறைவார்த்தைக்கு செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. எங்கள் திருச்சபையை இறையன்பில் வழிநடத்தி வருகின்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவும் அதன் வழியில் சென்று இறைப்பணி செய்திட அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. உண்மையின் ஊற்றாகிய எம் இறைவா! எங்களி;ன் நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நாட்டை சொந்தமாக்கி கொள்ளாமல் நாட்டிற்காக தொடர்ந்து உழைக்க அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. நலன்களை வழங்கும் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களை எல்லா வித நன்மைகளிலும் தீமைகளிலும் காத்து வழி நடத்தினீரே. அதேப்போல் புலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டிலும் எங்களை உமது அருளால் வழிநடத்தி செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. சமாதானத்தின் இறைவா! உலக சமாதானத்திற்காகவும் எங்கள் குடும்பங்களில் இருப்பவர்களுக்காகவும் வேண்டுகிறோம். நீர் அளித்;த சமாதானம் எங்களின் வாழ்விற்கு ஒளியாக மலர அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஓற்றுமையின் உறைவிடமே இறைவா! இந்த புதிய ஆண்டில் எங்களிடையே உள்ள தீய குணங்களை வெறுத்து பிறரோடு அன்பு ஒற்றுமை பகிர்வு ஆகிய உயரிய குணங்களோடு நல் வாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

புத்தாண்டு காலைத் திருப்பலி 01-01-2012

திருப்பலி முன்னுரை:

அன்பான இறைமக்களே இன்று நம் அனைவர்க்கும் மகிழ்ச்சியான நாள். ஏனெனில் கடந்த ஓர் ஆண்டாக எல்லா துன்பங்கள் மத்தியிலும் இறைவனுடைய அன்புகரம் நம்மை வழிநடத்தியது. அதற்காக நன்றி செலுத்த இந்த பலிபீடத்தை சுற்றி குழுமியிருக்கிறோம். இன்றைய திருவழிபாடானது அன்னைமரியாள் இறைவனின் தாய் என்கிற பெருவிழாவை சிறப்பிக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பங்கள் போராட்டங்களும் நிச்சயம் உண்டு. ஆனால் கடவுளின் குழந்தைகளான நாம் நம்பிக்கையோடு அப்பா என்று அழைத்தவர்களாய் உரிமையோடு இறைவனை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது அவருடைய ஆசிரை வழங்கி நம்மை காப்பார். எனவே வருகின்ற நாட்களில் நம் அன்னை மரியாளைப் போல இறைவனின் அன்பையும் நன்மைத்தனத்தையும் மனதில் சிந்தித்தவர்களாய் வாழ முயற்சி எடுப்போம். அன்னையின் பரிந்துரையால் இறைபாலகனின் ஆசீர் பெற தொடரும் பெருவிழாவில் பங்கெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா எம்; திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்ன இயேசுவே எம் நாட்டை வழிநடத்தும் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம் இவர்கள் இப்புத்தாண்டிலே புது பிறப்பு எடுத்து நன்கு மக்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
  3. இரக்கத்தின் இறைவா! உலகில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வில் மன நிம்மதியின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களை உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். ஆவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மை காண தேவையான அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நல்லாயனே எம் இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பே உருவான இறைவா! கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

திருக்குடும்பத் திருவிழா 30-12-2011

இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!

இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல.  மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது.  குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது.  தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.  

தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான்.  அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம். 

மனிதனை மனிதனாக்குவது

மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள்.  வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது.  அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.  

காலங்கள் மாறுகின்றன.  நாகரீகங்கள் மறைகின்றன.  ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது.  அதை எவராலும் அழிக்க முடியாது.  காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227).  கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார்.  அப்படியே மனிதனும்.  அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான்.  எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.  இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது.  இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.  

நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
  1. புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.  (மத். 1:24)
  2. அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும்.  (மத். 2:14, 19-23)
  3. புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2) 
  4. ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும்.  (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
  5. குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.  (லூக் 2:51-52, கொலோ 3:20)
  6. குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும்.  (சீ. ஞா 3:7)
  7. பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும்.  (கொலே. 3:21)
  8. குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.  (கொலே 3:12)
  9. குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
  10. அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15). 
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர்.  இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல.  இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள்.  நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது.  ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர்.  இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார்.  மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்! 

திருத்தொண்டர் ராபர்ட்