திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு

முன்னுரை
இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும்,திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (பாரூக் 5:1-9)
பாரூக் புத்தகமானது இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அகதிகளாக இருந்த பொழுது எழுதப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் மையமாக, உயிர் நாடியாக இருந்த எருசலேம் தேவாலயத்தைவிட்டு அவர்கள் அந்நிய நாட்டில் அகதிகளாகவும், துன்பத்தால் வாடுபவர்களாகவும்,நம்பிக்கையிழந்தவர்களாகவும் வாழ்ந்த மக்களுக்கு அறிவிக்கப்படுகிற நற்செய்திதான் இன்றைய முதல் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11)
பிலிப்பு நகரில் வாழ்ந்த இறைமக்கள் பவுலடியார் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். ஏனெனில் பவுலடியார் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க பல துன்பங்கள்; ஏற்றுகொண்டார். பிலிப்பு நகர மக்கள் பவுலடியார் மீது காட்டும் அன்பின் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட பவுலடியார் அவர்களுக்கு நன்றி சொல்லியும்,அறிவுரை கூறுவதுவும் தான் இன்றைய இரண்டாம் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு
1. படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை,அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா! வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேளிக்குள் துன்பப்படும் இலங்கை தமிழர்களுக்காவும்,மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பின் இறைவா! கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் கொடுமைப்படுத்தப்படும் ஒரிசாவில் வாழும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக