ஆண்டவரின் திருமுழுக்கு (III Year)

(எசா 42: 1-4, 6-7; திப 10: 34-38; மத் 3:15-16,21-22)

அன்புக்குரியவர்களே! கிறிஸ்துவில் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க ‘ஞானஸ்தானம்’ என்ற திருவருட்சாதனம் முழு பலனை நமக்கு தருகிறது. “கிறிஸ்தவன்” என்று தலைநிமிர்ந்து நாம் சொல்ல ஞானஸ்தானமே நமக்கு ஊட்டச்சத்து. இன்று ஆண்டவரின் ஞானஸ்தான விழாவை கொண்டழாடுகின்றோம். இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயலாகும். இயேசுவின் ஞானஸ்நானம் விளிம்பு நிலைமக்கள், பாவிகள், தொழுநோயாளர் இவர்களுடன் நெருக்கமான உறவையும், தோழமையையும் எடுத்துக்காட்டும் செயலாகும். நாமும் வாழ்வில் விளிம்பு நிலைமக்கள் வலிமைபெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (எசா 42: 1-4, 6-7)
இஸ்ராயேல் மக்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இறைவனின் வருகைக்காக, பல விதமாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்காக கூறுகிறார். இறைவாக்கினர் எசாயா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்டவர், நீதி, உண்மை அறத்தை நிலைநாட்ட வருகிறார். திருமுழுக்கில் இ.றைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் ஊழியனைப் போல வாழ்கிறோமா என் எசாயா கூறுவதைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (திப 10: 34-38)
கிறிஸ்து ஒருவரே ஆண்டவர் என் அறிக்கையிடும் நாம் அனைவரும் தூய ஆவியானவரின் அருளைப் பெற்று, இயேசுவைப் போல் தீயஆவியை வென்று, நம்மில் யாரும் வேற்றுமை பாராட்டாமல் இவ்வுலகில் நிலையான அமைதியைக் கொண்டுவர ஒற்றுமையுடன் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுப்பதை கவனமுடன் கேட்போம்.

இறைமக்கள் மன்றாட்டு
1. அருளின் ஊற்றே இறiவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்களின் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, இறைவிருப்பத்தின்படி நடந்து மக்களi தூய ஆவியின் வழியில் நடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வார்த்தையில் சவை தந்திடும் இறைவா! எங்கள் பங்கு மக்கள் அனைவரும் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பித்து இறுதிவரை இறையன்பிலும் பிறரன்பிலும் அமைதியிலும் நிலைத்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 3:15-16,21-22)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை 6ம் சின்னப்பர் இயேசு பாலஸ்தின நாட்டிற்க திருப்பயணம் சென்றார். இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதிக்கரையில் முழந்தாள் படியிட்டார். யோர்தான் தண்ணிரில் கைகளை நனைத்து நம்பிக்கை அறிக்கை செபத்தை சொன்னார். ஏனெனில் நமது கிறிஸ்தவ மறையின் அடிப்படை உண்மைகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. இறைமகன் இயேசு திருமுழுக்கு யோவான் கையால் திருமுழுக்கு பெற்ற இதே நதியில்தான் இறைவன் ஒரேகடவுள், ஆள் வகையில் மூவராக இருக்கிறார் என்ற மறை உண்மை வெளிப்படுத்தப்பட்டது. யோர்தான் என்றால் “இறங்குகிறவர்” என்று பொருள். இயேசு திருமுழுக்கு பெற்றது நான்கு நற்செய்தி நூல்களும் குறிப்பிடுகின்றன. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம் தூய்மை நிலமாகிய புண்ணிய பூமியின் கையப் பகுதியாகும். யோர்தான் நதியில் மேற்குக் கரையில் பெத்தபெரா என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம், யோசுவா இஸ்ரயேல் மக்களை இறைவனால் கூறப்பட்ட புண்ணிய பூமிக்கு அழைத்துக் கொண்டு கடந்த சென்ற இடம் என்றும் யூதர்கள் கூறுகின்றனர்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற இடத்தில் முக்கோண வடிவில் அமைந்துள்ள கற்பாறை மேடை இன்றும் அடையாளமாக விளங்குகின்றது. இயேசுவின் மீது தூய ஆவி, புறா இறங்குவதுபோல இறங்கிய இடமும் யோர்தான் நதிக்கரையில் அடையாளமாக விளங்குகின்றது. இதன் இரு கரைகளிலும் பலவகை மரங்கள் உள்ளன (எரே 12,5, 50,44).
இயேசுவின் திருமுழுக்கை 3 விதமான நிலைகளில் நாம் அறிந்துக் கொள்ளலாம். 1. வானம் திறந்தது 2. தூய ஆவியின் அருட்பொழிவு 3. வானகத்தில் ஒலித்த தந்தையில் குரல்.

1. வானம் திறந்தது.
இயேசு திருமுழுக்குப் பெறும்போது தந்தையோடு ஒன்றிணைந்திருந்தார் என்பது வெள்ளிடை மலையாகும். வானம் திறந்தது என்பது இறையுறவின் ஒன்றிப்பில் என்பது தெளிவாகிறது. மகனும், தந்தையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். வானம் திறக்கப்படுதல் என்றால் விண்ணும் மண்ணும் ஒன்றிணைக்கப்படுவதின் அடையாளச் செயல் எனலாம். அதாவது இறைவன் இனி அணுகமுடியாத தொலைவில் இருப்பவர் அல்ல மாறாக அண்மையில் மக்களின் அருகில் மக்களோடு என்றும் இருப்பவர் என்பது பொருளாகும். மக்களது வாழ்வில் பின்னிப் பிணைந்திருப்பவர், மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர். இதைத்தான் மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகின்றன என்று எசாயா 55:10 கூறுகிறது. இது ஓர் அடையாளச் செயலாகிறது.
2. தூய ஆவியானவரின் அருட்பொழிவு
கடவுள் உலகத்தை படைக்கும் போது, கடவுளின் ஆவி நீர்திரளின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது (தொநூ 1,2) மேலும் அந்த ஆவியானவர் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தி வந்தார் என்று பார்க்கிறோம். அதே ஆவியானவர் இயேசுவின் மீது வல்லமையுடன் இறங்கி வந்ததால் மானிட வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய காலம் புதிய படைப்பின் காலம் தொடங்கியது எனலாம். இதுவரை இருந்த பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு பதிய வாழ்க்கை இம்மண்ணில் புலரும் என்பதன் அடையாளம் தான் இதுவாகும். காலம் நிறைவேறிவிட்டது, “இறையாட்சி நெருங்கி விட்டது” (மாற் 1,15) என் இயேசு கற்பிக்க தொடங்குகிறார்.
தூய ஆவியின் வல்லமையைப் பெற்ற இயேசு ஏழை, பணக்காரர் என்று பாராமல் அனைவருக்கும் இறையரசை போதிக்கிறார். அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையிலே தன்னுடைய போதனைகளை தொடர்கிறார். பணிவாழ்வில் அனைவருக்கும் முன் அவரவருடைய நிறை, குறைகளை எடுத்துக்கூற தூய ஆவி அவருடைய உள்ளத்தில் உறுதியைத் தருகிறார். எதை உண்பது, எதை உடுப்பது என்று கவலை கொள்ளமல் நேர்மையை நோக்கி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்.
3. வானத்தில் ஒலித்த தந்தையின் குரல்.
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3,22) என்று வானத்திலிருந்து ஒலித்த குரல், தந்தை இயேசுவின்மீது வைத்திருந்;த ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுகிறது.
திருமுழுக்கு பெற்றநாம் ஒவ்வொருவரும், நம்முடைய இதயத்தில் தூய ஆவி வழிநடத்த இடமளிப்போம். தூய ஆவியின் வழியில் நாம் நடக்கும்போது அனைத்து தடைகளையும் இறைஇயேசுவைபோல் எதிர்த்து செயல்பட முடியும். நீரே என் அன்பார்ந்த மகன் (லூக் 3,22) என்று தந்தை மகனாகிய இயேசுவை உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் திருமுழுக்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று உறுதிப்படுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் திருமுழுக்க பாவமன்னிப்பைக் கொடுக்கவில்லை, இயேசுவின் திருமுழுக்கு பாவ மன்னிப்பைக் கொடுக்கிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு மனந்திரும்பதலை காட்டுகிறது (மத் 3,11). அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட திருமுழுக்கு அது இயேசுவுக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் இன்று நாம் பெறும் திருமுழுக்கு இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிப்பதில் அடங்கியிருக்கிறது. அதனை வாழ்வில் வெளிக்காட்டுவோம்.
- சகோ.N. சின்னப்பராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு (2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக