விவிலிய ஞாயிறு

திருப்பலி முன்னுரை

“திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போல், விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது” என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளின் கூற்றிற்கு இணங்க, இறை வார்த்தைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய் இன்று நாம் விவிலிய ஞாயிறை சிறப்பிக்கின்றோம். மனித மீட்புக்காய் மனுக்குலம் வந்த மாபரன் இயேசு தன் திருவுடலை மட்டுமல்ல தமது திரு வார்த்தைகளையும் நமக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆகவே இறைவார்த்தையானது பல இன்னல்களும், இடையூறுகளும் நிறைந்த நமது அன்றாட வாழ்விற்கு வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் இருக்கின்றது. திருமுழுக்கின் மூலம் கடவுளின் பிள்ளைகளான நாம், இயேசுவின் உண்மையான சகோதரர்களாக மாற வேண்டுமென்றால் ‘இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்’ (லுக் 8:21). மாறிவரும் இன்றைய சூழலில் பல்வேறு சோர்வுகளையும், களைப்புகளையும், தளர்ச்சிகளையும் சந்திக்கும் நாம் இன்று நற்செய்தியி;ல் ‘உமது சொற்களின்படியே வலைகளைப் போடுகிறோம்’ என்று சொன்ன பேதுருவின் மனநிலையை நம்மிலே உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆகவே இறைவார்த்தையின் படி வாழவும், அது காட்டும் திசையிலே பயணிக்கவும் வேண்டிய அருளை இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகமுன்னுரை: ( எசா 55: 1, 8-11)

இறைவார்த்தை என்பது ஏதாவது ஒரு நோக்கத்திற்காக ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அது அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பி செல்லாது எனக்கூறும் எசாயாவின் இறைவாக்கிற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை: (1பேது 1:22-25)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் புது பிறப்பை அடைந்துள்ளோம். இந்த புதுப்பிறப்பானது அழியக்கூடிய வித்தினால் கிடைத்ததல்ல. மாறாக, உயிருள்ள, நிலையான, அழியாத வித்தாகிய கடவுளின் வார்த்தையால் கிடைத்தது என்று கூறும் புனித பேதுருவின் சொற்களுக்கு செவிமெடுப்போம்.

மன்னிப்பு மன்றாட்டு
'என்னை மன்னியும் என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்'.

1. “சிலவிதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன”.
வார்த்தையான இறைவா! உம்முடைய இறைவார்த்தை எங்கள் உள்ளங்களில் விதையாக விதைக்கப்பட்ட போது, நாங்கள் அதைக் கேட்டு புரிந்து கொள்ளாமலும், அதன் உண்மையான பொருள் மறையுரைகளில் எடுத்து சொல்லப்பட்டப் போது கேட்காமலும் இருந்த நேரங்களுக்காய் மனம் வருந்துகிறோம் மன்னித்தருளும் இறைவா.

2. “ சிலவிதைகள் மண் இல்லாப் பாறை பகுதியில் விழுந்தன. அவைக் காய்ந்து வேரில்லாமையால் கருகிப்போயின”
வழிகாட்டும் இறைவா! நாங்கள் பாறை நிலம் போல் உமது வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எங்கள் வாழ்வில் இன்னலோ, வேதனையோ அடையும்போது இறைவார்த்தையை மறந்து, உதரித்தள்ளியிருக்கிறோம். ஆகவே உம்முடைய வார்த்iதையில் நிலைத்து நிற்காத நேரங்களுக்காய் மனம் வருந்துகிறோம் எங்களை மன்னியும் இறைவா.

3. “சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன”.
வாழ்வளிக்கும் இறைவா! முட்செடிகளின் இடையே விழுந்த விதைகளைப் போல், நாங்கள் உலக கவலைகளாலும், செல்வமாயையைகளாலும் நாங்கள் நெருக்கப்பட்டு பயன் அளிக்காமல் போன நேரங்களை நினைத்து மனம் வருந்துகிறோம் எங்களை மன்னியும் இறைவா.

விசுவாசிகள் மன்;றாட்டு

1. திருவிவிலியம்
“புல் உலர்ந்துபோம்;, பூ வதங்கி விழும், நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்” (எசா40:8).
அன்பின் இறைவா! எங்கள் திருஅவையை வழிநடத்தும் திருதந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், எங்கள் ஆயர் மேதகு. தாமஸ் அக்குவினாஸ், ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், என்றென்றும் நிலைத்திருக்கும் உமது வார்த்தையை தங்கள் மனதில் பதித்து, அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வரம் அருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. ஒளி
“ என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே” (திபா 119:105).
நீதியின் இறைவா! எங்கள் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள், உம்முடைய வார்த்தையை அவர்களின் பாதைக்கு ஒளியாக கொண்டு, நீதி, உண்மை, நேர்மை போன்ற உயரிய மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் ஏற்று வாழ வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தண்ணீர்
“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன” (யோவா 6:68).
இரக்கத்தின் இறைவா! தண்ணீர் ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்பதுபோல், உம்முடைய வார்த்தையே எங்களுக்கு நிலைவாழ்வை அளிக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டு, எங்கள் வாழ்வில் இன்னல்கள், இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும் போது உம்மைவிட்டு விலகி செல்லாமல், உம்மை நாங்கள் நாடி வர வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அப்பம்
“வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிக்கொண்டார்” (யோவா 1: 14).
வல்லமையுள்ள இறைவா! மனிதனாக உருவெடுத்த நீர் எங்களிடையே குடிகொள்ள இந்த அப்பத்தைத் தேர்ந்தெடுத்தீர். இந்த அப்பத்தை உமது திருவுடலாக மாற்றுகின்ற எங்கள் பங்கு குருக்களுக்காவும், மற்றும் ஏனைய குருக்களுக்காவும் நாங்கள் இப்போது மன்றாடுகின்றோம். அவர்கள் அனைவரும் உமது இறைவார்த்தையின் சாட்சிகளாக வாழ வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Prepared by
I Year Theology Students (2010)
Good Shepherd Seminary
Coimbatore

1 கருத்து: