ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

(எசா 60: 1-6; எபே 3: 2-3, 5-6; மத் 2:1-12)
முன்னுரை
வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம் (எசா 60: 1-6)
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (எபே 3: 2-3)
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

இறைமக்கள் வேண்டல்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்;தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் நுpiphயலெ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாhர்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (நுpiphயnயை) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்கள், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது.
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.

- அ. இராயப்பன்

No comments:

Post a Comment