Sunday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sunday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 19-02-2012
முன்னுரை: இறை இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டவர் இயேசுவிடம் சென்றால் வேண்டியது கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு முடக்குவாதமுற்ற மனிதனை தன்னிடம் கொண்டுவந்ததை கண்ட இயேசு அவனைக் குணப்படுத்துகிறார். மிகுந்த நம்பிக்கையோடும், தோழமை உணர்வோடும் பிணியாளரைத் தூக்கி வந்த நண்பர்களை போன்று இருந்தால் இன்றும் அதிகமாக நம்பிக்கை, விசுவாசம் கொண்டு பிறரை அன்பு செய்ய வரம் வேண்டுவோம். உள்ளத்திலே பொறாமை, தீய எண்ணம் ஆகியவைகளை கொண்டு வெளியில் நடக்கும் நன்மைகளை தீமையாகப் பார்த்துப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற மறைநூல் அறிஞரை போன்று இருந்தோமென்றால் இறைவன் நம் அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: நம் முன்னோரின் கடவுள் பழிவாங்குபவராகவும், தண்டிக்ககூடியவராகவும் இல்லை மாறாக பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வதுபோல அவர் நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வை அருள்வார் என்று இறைவாக்கினர் எசாயாவிடம் கடவுள் கூறுவதை வாசிக்க கேட்போம்.
முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்;இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்;இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை; உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை; மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி என்று மொழிந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லையென்றும் பேசவில்லை. அதேப்போன்று தான் கடவுளின் ஊழியனாகிய நானும் என் உடன் ஊழியர்களும் இருந்தோம். ஆகவே நீங்களும் உண்மைக்கு சான்று பகர்ந்து கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறவை உறுதிப்படுத்தி தூய ஆவியை பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயாராக்குவோம் என்று புனித பவுலடியார் கூறுவதை வாசிக்க கேட்போம்.
நான் ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம் " என்றும் "இல்லை " என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் "ஆம் " என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் "ஆம் " வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக "ஆமென் " எனச் சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (2:1-12)
சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்றார்.அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் " என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ "என்றார்.அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே " என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- அன்பு தந்தையே எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் மக்களை சாமாதானத்தின் கருவிகளாக மாற்றி நம்பிக்கையின் ஒளியில் வழிநடத்தி இறையரசைப் பரப்பிட தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று மொழிந்த இறைவனே! எம் ஊரில் உள்ள மக்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாவம் செய்து உம்மை விட்டு விளகி சென்றிருக்கும் அவர்களை மன்னித்து உம்பிள்ளைகளாக வாழ்ந்து உமக்கு பெருமைச்சேர்க்க வேண்டிய அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நம்பிக்கையோடு வந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதனை குணப்படுத்தியது போல என் பங்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை ஆசிர்வதித்து அவர்கள் நம்பிக்கையோடு எதிர்கொள்ள இருக்கின்ற அரசு பொதுத்தேர்வினை சிறந்த முறையில் செய்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற்றமடைந்து பிறருக்கு உதவிசெய்து வாழ வேண்டிய அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 12-02-2012
முன்னுரை:
பணியாளர்கள் நாம்; பகவான்கள் அல்ல.
பாட்டாளிகள் நாம்; முதலானவர்கள் அல்ல.
நோயாளிகள் நாம்; நோயற்றவர்கள் அல்ல.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 6ஆம் ஞாயிரை பொருளுணர்ந்து இயேசுவின் தியாகப்பலியை நிறைவேற்றிடவும், நமது பங்கில் உள்ள நோளிகள் நலம் பெற்றிடவும் செபிக்க அழைப்பு விடுக்கின்றது. தீட்டுப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தொழுநோளிகளை நம் இறைமகன் இயேசுகிறிஸ்து மனித மாண்பேடும், மதிப்போடும் தொட்டுக் குணமளிக்கின்றார். மருத்துவன் நோயற்றவருக்கு அன்று நோய்யுற்றவருக்கே தேவையென்று கூறி இவ்வுலகிற்குவந்த நம் இறைமகன் இயேசுவின் இப்பணி வெறும் உடல்சார்ந்த நோய்களை போக்குவதோடு நின்றுவிடாமல் ஆன்ம, உள்ள சமூக நலன்களை கொடுக்கின்ற பணியாக செய்துவந்தார். அப்படிப்பட்ட நாம் இறைவனிடம் செல்லும்போது நாம் குணம்பெறுவது நிச்சயம் எனவே யாருகெல்லாம் மருத்துவ மற்றும் பிற உதவிகள் அதிகமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உயிர் வாழும் வரை கிடைப்பதற்கு வேண்டிய அருளைத் இறைவன் தந்தருள வேண்டுமென்று இத்திருப்பலியில் செபிப்போம்.
பாட்டாளிகள் நாம்; முதலானவர்கள் அல்ல.
நோயாளிகள் நாம்; நோயற்றவர்கள் அல்ல.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 6ஆம் ஞாயிரை பொருளுணர்ந்து இயேசுவின் தியாகப்பலியை நிறைவேற்றிடவும், நமது பங்கில் உள்ள நோளிகள் நலம் பெற்றிடவும் செபிக்க அழைப்பு விடுக்கின்றது. தீட்டுப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தொழுநோளிகளை நம் இறைமகன் இயேசுகிறிஸ்து மனித மாண்பேடும், மதிப்போடும் தொட்டுக் குணமளிக்கின்றார். மருத்துவன் நோயற்றவருக்கு அன்று நோய்யுற்றவருக்கே தேவையென்று கூறி இவ்வுலகிற்குவந்த நம் இறைமகன் இயேசுவின் இப்பணி வெறும் உடல்சார்ந்த நோய்களை போக்குவதோடு நின்றுவிடாமல் ஆன்ம, உள்ள சமூக நலன்களை கொடுக்கின்ற பணியாக செய்துவந்தார். அப்படிப்பட்ட நாம் இறைவனிடம் செல்லும்போது நாம் குணம்பெறுவது நிச்சயம் எனவே யாருகெல்லாம் மருத்துவ மற்றும் பிற உதவிகள் அதிகமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உயிர் வாழும் வரை கிடைப்பதற்கு வேண்டிய அருளைத் இறைவன் தந்தருள வேண்டுமென்று இத்திருப்பலியில் செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை: தொழுநோயால் பீடிக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி தனிமையில் விடப்பட்டனர். அதேப்போன்று பாவம் செய்து இறைவனைவிட்டு பிரிந்து செல்பவர்களும் அத்தகைய தனிமையின் கொடுமையினை உணர்வார்கள் என்று மறைமுகமாக கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்." எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: முதல்வாசகத்திற்கு பதில் அளிக்கின்றவகையில் இன்றைய இரண்டாம் வாசகம் அமைகின்றது. நாம் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் இறைவனுக்காக செய்திடுவோம். திருச்சபையின் போதனைக்கு எதிராக நடக்காமல் இருந்தால் நாம் இறைவனின் மக்களாக, குழந்தைகளாக வாழ்வோம் இருப்போம் என்று புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலிருந்து வாசிக்க கேட்போம்.
அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:40-45)
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, " நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் " என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! " என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் " என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார்.எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை என்று மொழிந்த எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து நோயினாலும், பிணியாலும் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் உம் வல்லமையின் கரங்கள் அவர்கள் வழியாக வந்து மக்களை ஆசிர்வதிதத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல தேவையான அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், பிணியினாலும் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் இயங்கிவருகின்ற அன்பியங்கள் அனைத்தும் பிறர்நலனில் அக்கறைக்காட்டிடவும், பொருளாதாரவசதியின்றி மருத்துவசிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவர்களின் அன்பை பிறர்க்கு எடுத்துக்காட்டி சாட்சிய வாழ்வு வாழ தேவையான அருளைத்தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 05-02-2012
முன்னுரை: இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது. அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ (லூக்கா 2:52) இப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை: மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன, என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: தமது புகழ்க்காக, நற்பெயருக்காக வாழாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு மக்கட்பணி செய்தவர். நற்செய்திப் பணி வழி நம்பிக்கையை ஊட்டியவர். நற்செய்தி அறிவிக்காவிடில் ஜயோ எனக்குக்கேடு என்று பவுல் அடியார் நம் அனைவரையும் இறையன்புக்குச் சான்றுபகர்வோம் என்றும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாவோம் என்றும் நல்லது செய்வதில் என்றுமே முனைப்பாயிருப்போம் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:29-39)
பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் " என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் அன்பை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் உற்றார் உறவினார்கள் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 29-01-2012
முன்னுரை: இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்” என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: மனித மனம் அது ஒரு நிலம. அங்கே விதைக்கப்படும் இறைவார்த்தைகள் அனைத்தும் தவறாது முளைக்கும. அவ்வார்த்தையின்படி நடக்கிறவர்கள் சிறகடித்துப் பறப்பார்கள், அவ்விறைவார்த்தையின்படி நடவாதவர்கள் அனைவரையும் வேரறுப்பேனென்று கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.
கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னைநோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார். உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: இல்லறம் என்பது இமயம் போன்றது. அதன் உச்சத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை செய்வதில் கணவனுக்கு மட்டும் என்று நின்று விடாமல் ஆண்டவரிடமும் பற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:21-28)
அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சுதந்தரம், சமத்துவம, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும, பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்தரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புசெய்து வாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 22-01-2012
முன்னுரை: எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா? நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: நினிவே நகரத்து மக்கள் யோனாவின் வழியாக இறைவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடனே மனம் வருந்தினார்கள், மனமாற்றம் அடைந்தார்கள். இறைவனும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களை மன்னித்து அன்பு செய்தார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. ஓவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்முடன் பேசுகின்றார். அவரின் குரலுக்கு நம்முடைய பதில் என்ன என்பதை சிந்தித்தவர்களாக இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உலத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை மறந்துவிட்டு உலகச் செல்வங்களில் அதிகம் பற்று உடையவர்களாகவும், அவற்றில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைக் கண்ட பவுலடியார் உலகச் செல்வங்களில் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள் ஏனெனில் அவை நிலையானது அல்ல மாறாக அழிந்துபோககூடியவை என்று கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கவனம் எதன் பக்கம் இருக்கின்றது என்ற சிந்தனையுடன் இப்போது வாசிக்கப்படும் வாசகத்தை கேட்போம்.
அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:14-20)
யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- ‘நல்ல ஆயன் நானே’ என்று சொன்ன இறைவா உமது அன்பு பிள்ளைகளை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும் நலமுடன் வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உம்மிடம் அழைத்து வரவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- ‘பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன’ என்று திருவாய் மலர்ந்த இறைவா, எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் பணிவிடை பெறுவதை விட்டுவிட்டு பணிவிடை புரியவே தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை உணர்ந்து செயல்பட தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- ‘உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா, என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- ‘விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது’ என்று உரைத்த இறைவா, சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும் ஞானத்திலும், பக்தியிலும் வளரவும் உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பொதுக்காலம் 2-ம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு)15-01-2012
முன்னுரை: புத்தொளி வீசிட, புதுமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது, இறைவனின் அருளை இறைபலியினில் பெறவே புனித நாள் புலர்ந்தது.
இறைவனின் திருக்கூட்டமே இன்று நாம் பொதுக்காலம் 2ம் ஞாயிறை சிறப்பிக்கிறோம். இன்றைய இறைவார்த்தை பகுதிகள் நமக்கு வெளிப்படுத்தும் மையக்கருத்து யாதெனில் நாம் அனைவரும் இறைவனின் ஆலயம் என்பதாகும்.
அன்று, இறைநம்பிக்கை கொண்டவர்கள் இயேசு இருந்த இடத்தை பார்த்தார்கள், அவரோடு தங்கினார்கள், இறைசீடர்களாக மாறினார்கள். இன்று, இறைவனுடைடய இறைகுலமாய், இருக்கும் நாமும் இறைவனை நமது உள்ளத்தில் ஏந்தி, இறைசீடர்களாக உருமாற அருள் வேண்டி இந்த இறை உறவு பலியிலே பங்கெடுப்போம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.
முதல் வாசக முன்னுரை: இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் சாமுவேலோடு
உரையாடுவதை வெளிப்படுத்துகிறது. இந்த இறை-மனித உரையாடலின் உச்சக்கட்டம், ‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’ என்று சாமுவேல் பணிவுடன் கூறுகிறார்.இந்த இறைபலியிலே இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடப் போகிறார். இதற்கு நாம் என்ன பதில் தரப்போகிறோம் என்று சிந்தித்தவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.அப்போது ஆண்டவர் ' சாமுவேல் ' என்று அழைத்தார். அதற்கு அவன் 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர் 'நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்' என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? ' என்று கேட்டான். அவரோ 'நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? 'என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர் தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டான். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ 'ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் ' என்று பதில் சொல் ' என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல் ' சாமுவேல் ' என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல்'பேசும், உம் அடியேன் கேட்கிறேன் ' என்று மறு மொழி கூறினான்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: இவ்வாசகத்தில் திருத்தூதர் பவுல்
உடல் இறை ஆலயம், இறைமக்கள் ஒவ்வொரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதையும், இந்த ஆலயத்தை சார்ந்த உடல் உறுப்புகள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை வலியுறுத்தி உடல் சார்ந்த பாவத்தை விளக்க அறிவுரை கூறுகிறார். கவனமுடன் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
'வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு. ' இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது. ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவியார் தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42)
மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து 'அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா ' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை ' என்பது பொருள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
மன்றாட்டுக்கள்:
- நல்ல ஆயனே, எங்களை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் உமக்கு என்றும் பணிசெய்து, தாங்கள் பெற்றுக் கொண்ட கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உன்னத தேவனே, எங்களை ஆள நாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். கைம்மாறு எதிர்பாராமல் உழைக்கும் வரத்தை அவர்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் இறைவா, எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும், குழுக்களையும் நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இவற்றில் நாங்கள் வேற்றுமைகளை களைந்து, உம்மோடு இணைந்து நலமுடன் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சிறார்களை நேசிக்கும் இறைவா, எம் பங்கின் சிறுவர், சிறுமியரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரும், நாங்களும் துணைபுரியவும், அவர்களுக்கு தேவையான கல்வி ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா (இரண்டாம் ஆண்டு)(08-01-2012)
முன்னுரை: வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை: இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.
எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுதுää நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.
உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.
- இறைவா உமக்கு நன்றி.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மத் 2:1-12)
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ; என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ; என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். ; நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன் ; என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் Ephiphany என்று அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (Epiphania) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது. ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.
மன்றாட்டுக்கள்:
- அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு டிசம்பர்-31
இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே, கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த கணக்கிட முடியாத நன்மைகளுக்கு உளமாற அவருக்கு நன்றிசொல்லவும், கடந்த ஓர் ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், வருங்காலம் நமக்கு வசந்த பாலமாக அமைய இறைவனின் அருள் வேண்டி நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். எனவே இந்த வழிபாட்டிலே நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.
ஆண்டவருக்கு ஆராதனை செலுத்துவோம்
அன்பார்ந்தவர்களே, நம் இறைவன் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாத இறைவன். நம் இறைவன் காலங்களுக்கும், யுகங்களுக்கும் தலைவரான ஆண்டவர். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை சீரும் சிறப்புமாய் வழிநடத்திய நம்இறைவனை, நம் வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டைக் கொடுக்கப்போகிற இறைவனை நாம் இப்போது ஆராதித்து புகழ்வோம். என்றும் வாழும் நம் ஆண்டவரை போற்றும் வண்ணமாக இந்தப் பாடலை அனைவரும் சேர்ந்துப் பாடி அவரை ஆராதிப்போம்.
பாடல்: ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்... அல்லது தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம்.. (பொருத்தமான பாடலைத் தேர்வுசெய்து கொள்ளலாம்) அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் மௌனம் காக்கவும்.
கண்ணீர் அஞ்சலி: கடந்த ஆண்டு நோய்களினாலும், பல்வேறுப்பட்ட விபத்துக்களினாலும், தீவிரவாத தாக்குதலாலும், இயற்கையின் சீற்றத்தாலும், மதவெறிதாக்குதலாலும் உயிரிழந்த நம் சகோதரர்கள் இறைவனின் பதம் சேந்தருள வேண்டுமென்று இப்போது உருக்கமாக செபிப்போம்.
இறையருள் பெற மன்னிப்பு வேண்டுவோம்: நம் இறைவன் கருணையே உருவானவர். நம்மை தேடிவந்து அன்பு செய்யும் தேவன். அத்தகைய இறைவனிடம் கடந்த ஆண்டு முழுவதும் அவரக்கு எதிராகவும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும், நமக்கு நாமே செய்த பாவங்களுக்கு இவ்வேளையில் மன்னிப்பு மன்றாட்டுகளை இறைவனிடம் எழுப்புவோம்.
பல்லவி: நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே.
- உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அவை உறைபனிபோல வெண்மையாகும். எசாயா 1:18. என்று சொன்ன இறைவா, நாங்கள் உம்மிலே எங்கள் மனதைச் செலுத்தாமல் உலகப்போக்கின்படி வாழ்ந்ததற்காக, எங்களை மன்னித்து உம் அருளை எங்கள் மேல் பொழிந்தருளும் ஆண்டவரே.
- நானும் தீர்ப்பிடேன் இனி பாவம் செய்யாதே, சமாதானமாய்ப் போ. யோவான் 8:11. என்று சொன்ன இறைவா, நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளை அநியாயமாய் தீர்ப்பிட்டு அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நேரங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
- காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவரே, எங்களுக்கு கொடுக்க்ப்பட்ட வாய்ப்புகளையும், நேரத்தையம், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
- உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. எபேசி 6:2. என்று மொழிந்த இறைவா, எங்கள் பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படியாமல் அவர்களின் அறிவுரைகளை, நல்லொழுக்கங்களை அலட்சியம் செய்தமைக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
- தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். எபேசி 6:4. என்று மொழிந்த இறைவா, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சிறந்த முன்மாதிரிகையாய் இருக்க தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: கருணைமிக்க நம் இறைவன் நம் பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அவரது அன்புறவில் சேர்த்துக்கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைக்ளுக்கு இப்போது நன்றிகூறுவோம்.
வாசகம்: 1தெச 5:16-18
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 105:1-8
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் (இதனை பாடுதல் சிறந்தது)
இப்போது நமது நன்றி மன்றாட்டுக்களை இறைவான்பால் எழுப்ப அனைவரும் எழுந்து நிற்போம். பின்வரும் ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் பின்வரும் பல்லவியை பாடவும்.
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
- கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எங்களை நல்வழியில் நடத்தி சென்றமைக்காக நன்றி கூறுகின்றோம்.
- கடந்த ஆண்டு எங்களை நோய் நொடியிலிருந்து காத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
- கடந்த ஆண்டு நல்ல மழையைக் கொடுத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
- வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
- எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
- எம் பங்கையும், பங்கு மக்களையும், பங்கு குருவையும், கன்னியர்களையும் நல் வழியில் காத்து வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
- எம் பங்கு குழந்தைகள் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், ஞானத்திலும் வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
- இந்ந வருடத்திற்கு சிறந்த விளைச்சலையும், வருமானத்தையும் தந்தமைக்காக இறைவா நன்றி கூறுகின்றோம்.
இறைவனின் ஆசிரைப் பெறுவோம்
இறைவனின் ஆசிரைப் பெற அனைவரும் முழந்தாளிட்டு ‘மாண்புயர்’ கீதம் பாடுவோம்.
புத்தாண்டு விழா
முன்னுரை
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இந்த நாள் இனிய நாள். இன்று புத்தாண்டு விழாவையும், அன்னை மரியா இறைவனின் தாய் என்ற விழாவையும் இணைத்து திருச்சபை கொண்டாடுகிறது. புதிய நாளை காண வாய்ப்புக் கொடுத்த ஆண்டவரைப் போற்றுவோம், நன்றி கூறுவோம். கடந்த ஆண்டு இறைவன் வழியாக பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைவு கூறுவோம். நம் உறவுகளுக்கு உறுதியூட்டுவோம் ஒவ்வொரு கணமும் ஆண்டவரின் அருள் தரும் நாளாக மாற ஆண்டவரை இறைஞ்சுவோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், இன்ப துன்பங்களை சமமாக பார்த்து சரித்திரம் படைக்கவும், அமைதியான உலகை உருவாக்க அன்னையின் துணையை வேண்டி இக்கல்வாரி பலியில் ஒன்றிணைவோம்.
முதல் வாசகம் (எண் 6:22-27)
ஆண்டவர் அனைவருக்கும் ஆசீர் வழங்குகின்றார் அதை நாம்தான் உணரவில்லை. ஆண்டவரின் ஆசீர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அமைதியை தருகிறது. அருள் பொழிகிறது என விளக்கும் முதல் வாசகத்தை திறந்த மனதுடன் கேட்போம்.
இரண்டாம் வாசகம் (கலா 4:4-7)
சட்டத்திற்கு அடிமையாகி, சுதந்தர வாழ்வை இழந்து வாழ்ந்த நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார். கடவுள் தம் ஆவியை பொழிந்ததினால் நாம் அவரை அப்பா என அழைக்கும் உரிமை பிள்ளைகளானோம். இறை பிள்ளைகளாய் வாழ இரண்டாம் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இறைமக்களின் வேண்டல்
1. அன்பின் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் சமாதான கருவிகளாய் திகழவும், இறையரசின் விழுமியங்களை நிலைநாட்ட தேவையான உடல், உள்ள நலனை தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானம் அளிக்கும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, நாடுகளிடையே சமூக உறவை வளர்க்க தேவையான பரந்த மனதை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் பொழியும் தலைவா! உலக மக்கள் சுயநலத்தை விடுத்து, பிறர் நலம் காக்க சுற்றுபுற சுகாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவும், சமூக பாகுபாடுகள் ஒழிந்து சமத்துவம் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி மக்கள் புதுவாழ்வு பெற வேண்டிய வரங்களை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் நல்தெய்வமே! புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நற்செய்தி முழக்கம் (லூக் 2: 16-21)
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று தாய் திருச்சபை இரண்டு விழாக்களை இணைத்து கொண்டாடி மகிழ்கிறது. 1. அன்னை மரியா இறைவனின் தாய் 2. புத்தாண்டு விழா. ஜானஸ் என்ற உரோமை கடவுளின் பெயரில் இருந்து ஜனவரி என்ற மாதம் உருவானது. இந்த உரோமை கடவுளுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும், இது எதை குறிக்கிறது? நாம் கடந்து வந்த காலம், விட்டு வந்த தடங்கள், மகிழ்ச்சியான நேரங்கள், கசப்பான அனுபவங்கள், சாதனைகளை திரும்பி பார்த்து நினைவு கூறவும், வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நம் கண்முன் நிற்கும் சவால்களை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அன்னை மரியா - இறைவனின் தாய்
மரியா, இயேசுவின் தாய், இறைவனின் தாய் என்னும் உண்மை, விவிலியத்திலும், வரலாற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்படமுடியாத ஓர் உண்மை. தொடக்க காலத்திலிருந்தே, மரியாவை இறைவனின் தாய் என போற்றி வணங்கி வந்தனர். கி.பி.429 ம் ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமையன்று கான்ஸ்ந்தாந்தி நோபிள் என்ற நகரில் நெஸ்டோரியஸ் என்ற ஆயர் தன்னுடைய மறையுரையில் மரியா மனித தன்மையில் இருந்த இயேசுவின் தாயேயன்றி, இறைவனின் தாயல்ல என்று குறிப்பிட்டு, யார் யாரெல்லாம் மரியாவை இறைவனின் தாய் என்கிறார்களோ அவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.
இதை மறுத்து கி.பி.431ல் எபேசு நகர் பொது சங்கம் theotokos (தெயோடோகோஸ்) என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தி, மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தியது. தெயோஸ் என்றால் கடவுள், டோக்கோஸ் என்றால் ஈன்றெடுத்தவர் என்பது பொருள்.
புதிய ஆண்டிலே அடி எடுத்து வைக்கின்ற நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் ஆண்டவர் கூறுவது: எனது ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. இந்த ஆண்டு முழுவதும் உனக்கு அமைதி தருவேன் என்கிறார். இன்றைய முதல் வாசகம் (எண் 6:22-27) குருத்துவ ஆசிமொழிகள் பற்றி குறிப்பிடுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெற ஒவ்வொரு மனிதரும் விரும்புகின்றனர். மக்கள் செல்வங்களில் ஆண்மக்கள் ஆசீர், பெண்மக்கள் சாபம் என்ற கருத்து மக்கள் மனதில் இருந்தது. தால்மூத் என்னும் யூத விளக்கவுரை நூல் எண் 6:24 க்கு இவ்வாறு விளக்கமளிக்கிறது.
ஆண்டவர் உனக்கு ஆண்பிள்ளை என்னும் ஆசி வழங்கி, பெண் பிள்ளையினின்று உன்னை காப்பாராக என்கிறது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் ஆபிரகாமிடம் உனக்கு ஆசி வழங்குவேன் … நீயே ஆசியாக விளங்குவாய்… உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்றார் (தொநூ 12:2-3). யாக்கோபு ஆற்றுத்துறையில் ஒரு நபரோடு போராடியபோது, நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடமாட்டேன் என்று கூறினார் (தொநூ 32:26).
புதிய ஏற்பாட்டில், பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தினை பெற்ற மரியா (லூக் 1:42) கடவுளின் திருவுளத்தை செயல்படுத்த துன்பம் ஏற்ற ஓர் உண்மையான அடியவராக விளங்கினார்.
ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திபா 121:8ல் பார்க்கிறோம். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார்: வரும்போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னை காப்பார்.” ஆண்டவரின் கரம் நம்மைக் காத்து வழி நடத்தும் போது நமது வாழ்வில் அமைதி நிலைக்கும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலா 4:4-7), பெண் வழியாக எவ்வாறு மனித குலத்திற்கு அழிவு வந்ததோ, அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்தது. கிறிஸ்து மனிதனாகவில்லை, கடவுளாக மட்டுமே இருந்தார். வானவர் போன்று காட்சி தந்தார் என்னும் கருத்தை எதிர்த்து, அவர் உண்மையில் மனித நிலையை ஏற்றார் என வலியுறுத்துகிறது. அவர் மனித இயல்பில் மட்டும் பங்கு கொள்ளாமல், எல்லா மனிதரைப் போல சட்டத்திற்கும் கட்டுப்பட்டார்.
கிறிஸ்து மேற்கொண்ட மீட்பு பணியின் இரு நோக்கங்களும் கூறப்படுகிறது. 1.திருச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்பது 2. இறைவனின் பிளைளைகளாக்குவது. யூதர் தம் தந்தையரை அன்போடு அழைக்க ‘அப்பா’ (யுடிடிய) என்னும் அரமேயச் சொல்லை பயன்படுத்துவர். ஆனால் இதே வார்த்தையை கொண்டு தந்தை கடவுளை அழைக்க எந்த ஒரு யூதனும் துணியமாட்டான். இயேசுவோ அப்பா என அழைப்பதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் அவ்வாறு அழைக்கும் உரிமையை கொடுத்தார். நாம் அவரின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் ஆவியை பொழிந்துள்ளார். எனவே நாம் அடிமையல்ல அவரின் உரிமை மக்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
இன்றைய நற்செய்தியில் (லூக் 2:16-21) இடையர்கள் வியப்பு மிக்கவர்களாய் பெத்லகேமிற்கு சென்று தூதர் கூறிய ஒவ்வொன்றும், வார்த்தைக்கு வார்த்தை உண்மையாயிருப்பதை கண்டனர். தங்களுக்கு தூதர் அறிவித்ததை; யோசேப்புக்கும், மரியாவுக்கும், மக்களுக்கும் தெரிவித்தனர். மக்கள் வியந்தனர். அதோடு மறந்திருக்க கூடும். ஆனால் ஒரு பெண் மட்டும் மறக்கவில்லை அவர்தான் மரியா. அதையும் உள்ளத்தில் சிந்தித்தார். இறைவன் விரும்பிய விதத்திலே மரியா இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்.
குழந்தைக்கு பெயர் கொடுப்பது தந்தையின் உரிமையாகும். இங்கு கடவுளே தூதர் வழியாக “யாவே மீட்கிறார்” என பொருள்படும் இயேசு என்ற பெயரை கொடுக்கிறார்.
இறையேசுவில் பிரியமானவர்களே! இந்த நன்னானில் அண்டவரின் ஆசிரும், அமைதியும் நமக்கு நிறைவாய் கிடைக்க ஜெபிப்போம். கடந்த காலத்தில் ஆண்டவர் அன்னை மரியா வழியாக செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். வருகின்ற ஆண்டிலே நாம் செய்யும் செயலை இறைவன் நிறைவாய் ஆசிர்வதிக்கவும், அனைத்தும் வெற்றியடையவும் நம் விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.
அமைதி என்பது சண்டை, சச்சரவு இன்றி வாழ்வது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த தூய வாழ்வு வாழ்வதேயாகும். இறைவன் மட்டுமே அதை கொடுக்கமுடியும். யோவா 14:27ல் “அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்”, என்று இயேசு கூறினார். அமைதியை பெற்ற நாம் அதை எல்லா இடங்களிலும் நிலைநாட்ட வேண்டும். நம்முடைய குடும்பங்களில், உறவு நிலைகளில், அமைதியை ஏற்படுத்துவது நமது கடமை, ஏனெனில் ஆண்டவர் இயேசு பிறந்த போதும், இறந்து உயிர்த்த பின்னும் அவர் நமக்கு விட்டு சென்றது அமைதி. இந்த புதிய ஆண்டில் இறைவனை மையப்படுத்தி நம் செயலை தொடங்கும் போது நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.
- பெ. யூஜின் அருண்குமார்
புத்தாண்டு இரவுத் திருப்பலி 01-01-2012
திருப்பலி முன்னுரை:
குழந்தை இயேசுவை மகிழ்ச்சியோடு உள்ளத்திலே வரவேற்றிருக்கும் அன்பார்ந்த இறைமக்களே! எவ்வாறு இயேசுவின் வருகையை பழைய ஏற்பாட்டு நூல்கள் சுட்டிக்காட்டி கடவுளின் மகனை இவ்வுலகிற்கு தந்ததோ அதே போல் இன்றைய நாளும் நாம் கடந்து வந்த நல்ல பாதைகளுக்கு நன்றியாகவும் இடறலான காலங்களை நினைந்து அவற்றிலிருந்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளவும் எதிர் காலத்தை சரியான விதத்திலே முழுமையாக பயன்படுத்தத் தேவையான மன பலத்தையும் நமக்கு கொடுக்க இத்திருப்பலியில் குழந்தை இயேசுவின் மூலம் கடவுளைப் போற்றி நன்றி கூறவும் தாய் மரியாளும் வளர்ப்புத் தந்தை யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் தங்களை கடவுளிடம் எவ்வாறு முழுமையாக ஒப்படைத்தார்களோ அதுபோல இன்று நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைப்பதன் மூலம் புதிய வாழ்வை இப்புதிய ஆண்டிலே பெற இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.
முதல் வாசகமுன்னுரை:
கடவுள் இஸ்ராயேல் மக்களை பராமரிக்கும் நிலையையும் அவர்களுக்கு அவர் தருகின்ற அருள் வரங்களையும் ஆசிரையும் மோசேயிடம் விவரிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் முதல்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுள் தம் ஒரே அன்பு மகனை அனுப்பி நாம் அவரின் பி;ள்ளைகளாக திருவுளம் கொண்டார் என்றும் இதனால் நாம் அனைவரும் கடவுள் மீது பிள்ளைகள் என்ற முறையில் முழு உரிமை கொண்டவர்களாக இருக்க முடியும் என்ற மேலான கருத்தை விவரிக்கும் இறைவார்த்தைக்கு செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- எங்கள் திருச்சபையை இறையன்பில் வழிநடத்தி வருகின்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவும் அதன் வழியில் சென்று இறைப்பணி செய்திட அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- உண்மையின் ஊற்றாகிய எம் இறைவா! எங்களி;ன் நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நாட்டை சொந்தமாக்கி கொள்ளாமல் நாட்டிற்காக தொடர்ந்து உழைக்க அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- நலன்களை வழங்கும் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களை எல்லா வித நன்மைகளிலும் தீமைகளிலும் காத்து வழி நடத்தினீரே. அதேப்போல் புலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டிலும் எங்களை உமது அருளால் வழிநடத்தி செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- சமாதானத்தின் இறைவா! உலக சமாதானத்திற்காகவும் எங்கள் குடும்பங்களில் இருப்பவர்களுக்காகவும் வேண்டுகிறோம். நீர் அளித்;த சமாதானம் எங்களின் வாழ்விற்கு ஒளியாக மலர அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- ஓற்றுமையின் உறைவிடமே இறைவா! இந்த புதிய ஆண்டில் எங்களிடையே உள்ள தீய குணங்களை வெறுத்து பிறரோடு அன்பு ஒற்றுமை பகிர்வு ஆகிய உயரிய குணங்களோடு நல் வாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
புத்தாண்டு காலைத் திருப்பலி 01-01-2012
திருப்பலி முன்னுரை:
அன்பான இறைமக்களே இன்று நம் அனைவர்க்கும் மகிழ்ச்சியான நாள். ஏனெனில் கடந்த ஓர் ஆண்டாக எல்லா துன்பங்கள் மத்தியிலும் இறைவனுடைய அன்புகரம் நம்மை வழிநடத்தியது. அதற்காக நன்றி செலுத்த இந்த பலிபீடத்தை சுற்றி குழுமியிருக்கிறோம். இன்றைய திருவழிபாடானது அன்னைமரியாள் இறைவனின் தாய் என்கிற பெருவிழாவை சிறப்பிக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பங்கள் போராட்டங்களும் நிச்சயம் உண்டு. ஆனால் கடவுளின் குழந்தைகளான நாம் நம்பிக்கையோடு அப்பா என்று அழைத்தவர்களாய் உரிமையோடு இறைவனை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது அவருடைய ஆசிரை வழங்கி நம்மை காப்பார். எனவே வருகின்ற நாட்களில் நம் அன்னை மரியாளைப் போல இறைவனின் அன்பையும் நன்மைத்தனத்தையும் மனதில் சிந்தித்தவர்களாய் வாழ முயற்சி எடுப்போம். அன்னையின் பரிந்துரையால் இறைபாலகனின் ஆசீர் பெற தொடரும் பெருவிழாவில் பங்கெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா எம்; திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்ன இயேசுவே எம் நாட்டை வழிநடத்தும் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம் இவர்கள் இப்புத்தாண்டிலே புது பிறப்பு எடுத்து நன்கு மக்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
- இரக்கத்தின் இறைவா! உலகில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வில் மன நிம்மதியின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களை உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். ஆவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மை காண தேவையான அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- நல்லாயனே எம் இறைவா! இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பே உருவான இறைவா! கடந்த ஆண்டிலே பல போரழிவுகளை சந்தித்த மக்களுக்காக மக்களாக மன்றாடுகிறோம். அவர்கள் இந்த ஆண்டிலே எந்தவொரு இடர்ப்பாடின்றி வாழ தம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
திருக்குடும்பத் திருவிழா 30-12-2011
இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!
இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது. குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது. தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.
தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான். அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம்.
மனிதனை மனிதனாக்குவது
மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள். வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது. அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.
காலங்கள் மாறுகின்றன. நாகரீகங்கள் மறைகின்றன. ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது. அதை எவராலும் அழிக்க முடியாது. காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227). கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார். அப்படியே மனிதனும். அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான். எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார். இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது. இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.
நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
- புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். (மத். 1:24)
- அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். (மத். 2:14, 19-23)
- புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2)
- ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும். (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
- குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும். (லூக் 2:51-52, கொலோ 3:20)
- குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும். (சீ. ஞா 3:7)
- பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும். (கொலே. 3:21)
- குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும். (கொலே 3:12)
- குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
- அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15).
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர். இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல. இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.
புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள். நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர். இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார். மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்!
திருத்தொண்டர் ராபர்ட்
கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி 24-12-2011
திருப்பலி முன்னுரை:
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உருவிலே இம் மண்ணிலே பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்து இன்று இந்த இரவிலே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கு தாயாம் திருச்சபை அன்புடன் வரவேற்கிறது. தந்தையாம் இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் பாவத்திலிருந்து நம்மை மீட்க திருவுளம் கொண்டார். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடவுள் நிலையை விட்டு இறங்கி அடிமையின் வடிவை ஏற்று அன்னை மரியிடமிருந்து நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார்.
மனிதப் பிறப்பின் மூலம் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் அன்பு தியாகம் ஏழ்மை தாழ்ச்சி ஆகியவற்றைக் நாம் கடைபிடித்து வாழும் போது நம் வாழ்விலே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் இருப்பார். இதோ இத்தியாகப் பலியினிலே இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வடிவிலும் நம் உள்ளத்திலே பிறக்க இருக்கிறார் இயேசுபாலன். இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. நம் மேல் பேரொளி வீச உள்ளது. விண்ணகத் தூதரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதி என்று பாலனுக்கு பாடல் பாட இருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து இயேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இயேசு பாலனே என் உள்ளத்திலே நீ பிறக்க வேண்டும். உம்மைப் போல நான் வாழ வேண்டும். உம் பிறப்பு என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிறைவையும் தர வேண்டும் என்று மன்றாடி பக்தியோடும் பெருமகிழ்ச்சியோடும் இப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகமுன்னுரை:
காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- இயேசு பாலகனே எம் இறைவா! எம் திருச்சபையை ஆளும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோரை ஆசிர்வதித்தருளும். அவர்கள் உம் மந்தையை விசுவாசத்திலும் செப வாழ்விலும் நாளும் வழி நடத்திச் செல்ல தேவையான அருள் வரங்களால் நிரப்பி அவர்களை நிரப்ப குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- அனைவருக்கும் மீட்பளிக்கும் எங்கள் அன்புத் தெய்வமே! நாட்டு நலப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் உம்மைப் போன்று செல்லும் இடமெல்லாம் மக்கள் குறையைக்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய தாராள மனதை தந்தருள குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- பாதை காட்டும் பரமனே! எம் பங்கு இளைஞர்கள் அனைவரும் பாதைகள் மாறி பாவ வழியில் சென்றிடாமல் உண்மையும் வாழ்வுமான உமது வழியில் நடந்து தூய்மையான வாழ்க்கை நடத்த தூய ஆவி துணைபுரிய குழந்தை இயேசுவே வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- ஏழ்மையில் பிறந்த எம் இறைவா! உலகில் உள்ள ஏழைகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையை காண மகிழ்ச்சியில் என்றும் வாழ குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி 25-12-2011
திருப்பலி முன்னுரை:
நல்லவர்கள் இறந்தால் கடவுளிடம் செல்கிறார்கள். நல்லவர்கள் வாழ்ந்தால் கடவுள் அவர்களைத் தேடி வருகிறார். அதுபோலவே வரலாற்றின்படி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தாலும் அவற்றின் நினைவு தினமான இன்று தகுந்த தயாரிப்பிற்கு பி;ன் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உள்ளங்களிலே குழந்தை பாலன் இயேசுவை முழுமையாக பெற காத்திருக்கும் இறைமக்களே! கடவுள் மனிதனை படைத்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்று கடவுளைப்போன்று சுதந்தரமாக வாழ்வது ஆனால் அதை புறக்கணித்த ஆதிப்பெற்றோர்கள் மூலம் வந்த பாவத்தை போக்கவே கடவுள் தாம் அன்பு கொண்ட இவ்வுலகத்திற்கு தம் அன்பு மகனை அன்போடு அனுப்பும் நாள் இந்நாள். எனவே இந்நாளிலே ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலே பிறப்பது நம் மட்டிலா மகிழ்ச்சிக்காக மட்டுமல்;ல. மாறாக பாவத்தை போக்கி அதன் மூலம் வரும் மட்டில்லா மகிழ்ச்சியைப் பெற என சிந்தித்தவர்களாய் கடவுளுக்கு நன்றி பலி செலுத்துவோம்.
முதல் வாசக முன்னுரை:
எசாயா புத்தகத்தி;ன் கடைசி பகுதி நெறிதவறியோர்க்கு எச்சரிக்கைகளையும் உண்மை வழி நடப்போருக்கு மகிழ்ச்சியான வாக்குறுதிகளையும் கொடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் மீட்பு வருகின்றது என்ற மகிழ்ச்சியின் வாக்குறுதி தரப்படுகிறது. மனக்கதவை திறந்து வைத்து கவனமுடன் வரவேற்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
பல வகையான தீமைகளாலும் தீய நாட்டங்களாலும் அடிமையாக இருந்த நமக்கு தந்தை கடவுள் இரக்கம் காட்டினார். நம்மை புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் தூய ஆவியாரினாலும் மீட்க அவர் திருவுளம் கொண்டார். இந்த மீட்புச் செயலை தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து வழியாக அருளி நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை நமக்கு சொந்தமாக்கினார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- அன்பின் இறைவா! எங்கள் திருதந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் பிறந்த குழந்தை இயேசுவின் ஆசீரோடு திருச்சபையை நன்கு வழிநடத்த கிருபை தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! எங்கள் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டவர்களாய் மக்கள் தேவைகளை பூர்த்திச் செய்கின்ற நல்ல ஊழியர்களாக இருக்க உமது ஞானத்தை அவர்களுக்கு தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! இன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் வெறும் ஆடம்பரத்தை முன் வைக்காமல் கிறிஸ்து வருகையின் நோக்கத்தை நன்கு புரிந்துக் கொண்டவர்களாக இனிவருகின்ற நாட்களில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க உமது நிறைவான ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! இன்று எத்தனையோ பேர் வறுமையின் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் உண்மையான மகிழ்ச்சியை கண்டுணர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! சமுதாயத்தில் உள்ள அனாதைகள் கைவிடப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்கள் மதிப்பற்றவர்கள் அவர்கள் தங்களின் அரசர் பிறந்துள்ளார் என்ற மனநிறைவைப் பெற்றுக் கொள்ள உமது ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
திருவருகைக்கால 4ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 18-12-2011
முன்னுரை: அன்புக்குரிய சகோதரமே, நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுகக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.
அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- அன்பு தெய்வமே இறைவா, எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- கருணையின் தெய்வமே, எம் பங்கு பணியாளரை நிறைவாக ஆசீர்வதியும், பங்கின் முன்னேற்றப் பணிகளில் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், பங்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நீதியின் இறைவா, எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறைவா! உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
திருவருகைக்கால 3ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 11-12-2011
முன்னுரை: இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அதுவும் நம் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தமது அழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழ வேண்டும். திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, வெறுமை நிறை மனதோடு நாம் வாழ இன்று இறைவன் நம்மை அழைக்கிறார். எனவே அவரை ஆசீர்வதித்தது போல, நம்மையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதோடு இயேசுவின் பிறப்பிற்காக காத்திருந்து, விழித்திருந்து, செபத்தில் நிலைத்திருந்து தகுந்த தயாரிப்போடு இருக்க அருள்வேண்டி செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை: ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டோரின் பணிகள் பற்றியும், அவ்வாறு தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை ஆண்டவர் விடுதலை, நேர்மை போன்றவற்றால் அழுகுறச்செய்து நல்லநிலத்தினைபோல் பலன் கொடுக்கச் செய்வார் எனக்கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனதுடன் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் பவுல் அடியாரின் குரலுக்கு செவிமடுப்போம்.
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:6-8,19-28)
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீர் யார்? என்று கேட்டபோது அவர், நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர், இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்: எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். "அதற்கு அவர், 'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது""என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார்." பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்: அவர் எனக்குப்பின் வருபவர்: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- எல்லாம் வல்ல இறைவா, எம்திருத்தந்தை 16 ஆம் ஆசிர்வாதப்பரையும், எம் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நற்செய்தியை அறிவிப்பதே எனது கடமை என்பதை உணர்ந்து செயல்பட தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- தியாகத்தின் இறைவா, எம் பங்கிலுள்ள அனைத்து அன்பியங்களும் சிறப்பாக செயல்பட்டு எம் பங்கை ஒரு அன்பிய சமூகமாக உருவாக்கிட அனைவரும் சிறப்பாக உழைக்க தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நீதியின் தேவனே இறைவா, எம் நாட்டுத்தலைவர்கள், சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் எதற்காக மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற தியாக உள்ளத்துடன் பணிபுரிய தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பு தெய்வமே இறைவா எம் பங்கு பணியாளர் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பங்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)