ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க


ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க
அருவாயோ என் இறைவா
அந்தச் சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் தலைவா- ஒரு நிமிடம்
1.
விழிகளை மூடி உனை நினைக்கையிலே
விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா _ 2
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பதும் ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ..ஆ...ஒரு நிமிடம்
2.
சோதரர் மானிடர் அழுகுரல் கேட்க
கேள்விகள் பிறப்பதும் ஏன் இறைவா_2
வேதனை கண்டும் நீர் காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ...ஆ... ஒரு நிமிடம்
3.
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன_2
தொழுதுனை வணங்கி கவலைகள் கூற
கண்ணீர் மறைந்திடும் மாயமென்ன?
மாயமென்ன ஆ...ஆ....ஒரு நிமிடம்

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாராகிய இறைவா
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய
இயேசுவின் திருஇதயமே
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின் திருஇதயமே
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த
இயேசுவின் திருஇதயமே
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய
இயேசுவின் திருஇதயமே
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான
இயேசுவின் திருஇதயமே
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான
இயேசுவின் திருஇதயமே
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான
இயேசுவின் திருஇதயமே
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற
இயேசுவின் திருஇதயமே
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
இயேசுவின் திருஇதயமே
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான
இயேசுவின் திருஇதயமே
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும்
இயேசுவின் திருஇதயமே
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள
இயேசுவின் திருஇதயமே
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
இயேசுவின் திருஇதயமே
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான
இயேசுவின் திருஇதயமே
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்

மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்

இயேசுவின் திருஇதயமே
எங்கள் குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்
நன்றி கூறுகின்றோம்
எங்களை ஆசீர்வதியும்
எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும்
பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும்
விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும் நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும்
சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில் இருக்கின்றவர்களை ஆசீர்வதியும்
உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும்
மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும்
ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும் - ஆமென்

உன் புகழை பாடுவது

உன் புகழை பாடுவது
என் வாழ்வின் இன்பமய்யா
உன் அருளை போற்றுவது
என் வாழ்வின் செல்வமய்யா

துன்பத்திலும் இன்பத்திலும் -நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும்- நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு என்னும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2

பல்லுயிரை படைத்திருப்பாய்
நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும்
நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

இயேசுவே என்னுடன் நீ பேசு

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம்
உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உன் திரு வாழ்வெனக்கருளும்
உன் திரு நிழ‌லில் நான் குடி கொள்ள
என்று என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவின் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னைத் த‌ள்ளி விடாதே

ஒரு போதும் உனைப் பிரியா

ஒரு போதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நினைவாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய்
உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோ நான் வாழுவேன்

நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசுவே என்னுள்ளம் நின்றாய் நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

1.
என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2
நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் - நீர்

2.
எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும் - நீர்