கிறிஸ்மஸ் செய்தி
மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
கடல் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மழையைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
இவையாவும் அழகான சந்திப்புகள்தான். ஆனால் இவற்றைவிட ஓர் அற்புதமான சந்திப்பு ஒன்று நம் நடுவே நிகழப்போகிறது. விண்ணகம் மண்ணகத்தை சந்திக்கப்போகிறது. பாசம் பகையைச் சந்திக்கப்போகிறது. ஆம்! கடவுள் மனிதனை சந்திக்கப் போகிறார். கிறிஸ்து பிறப்பிற்காக நம்மையே தயாரிக்கும் காலம் முடிந்து, காத்திருக்கும் கண்களுக்கு விருந்து படைக்க, இதோ மீட்பர் இயேசு பிறந்துவிட்டார்… வாருங்கள்.
மனித வாழ்விலே சந்திப்புகள் பலவிதம். சில சந்திப்புகள் சந்தோசத்தை கொடுக்கின்றன. சில சந்திப்புகள் சங்கடங்களை கொடுக்கின்றன. கண்களால் காண இயலாத கடவுள் கண்களால் காணும் வகையில் மனிதனாக, இயேசு பாலனாக மண்ணில் பிறந்த வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் விழா.
இறைவன் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்?
ஆதியிலே இறைவன் உலகைப்படைத்தார்,உயிர்களைப் படைத்தார். அவற்றோடு உறவாட தன் சாயலாக மனிதனைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனை படைத்து, அவனுக்கு தன் சாயலைத் தந்து (ஆதி. 1:27) மற்றப் படைப்புகளிடம் இல்லாத அன்பு பாசம் பரிவு போன்றவற்றை தந்து உயர்த்தினார் கடவுள். ஆனால் மனிதனோ இறைஉறவில் நிறைவு பெறாமல், அழிவுக்குறிய உறவைத் தேடினான். தனி வாழ்விலிருந்து குழுவாழ்விற்கு மாறினான். கூடிவாழ்ந்தான் கோடி இன்பம் கண்டான். காயின் ஆபேலைக் கொன்றான். கடவுளின் அன்பை இழந்தான். கடவுளுக்கு இணையாக வேண்டுமென்று எண்ணி பாபேல் கோபுரம் கட்டினார்கள். நோவாவின் காலத்தில் மக்கள் கடவுளை மறந்து பாவத்தில் மூழ்கினர். இஸ்ராயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களோ திரும்ப திரும்ப பாவச்சேற்றிலேயே விழுந்தார்கள். பல இறைவாக்கினர்கள் வந்தும், அம்மக்கள் மனமாற்றம் அடையவில்லை. எனவே தான் கடவுள் தன் ஒரே பேரான மகனையே உலகிற்கு அனுப்பினார். கடவுள் மனிதனாக பிறந்து மனிதனை சந்திக்க வந்த நிகழ்வைதான் கிறிஸ்து பிறப்பு விழாவாக சிறப்பிக்கின்றோம். இறைவனுக்கு எதிராக மனிதன் இழைத்த குற்றத்தை இறைவன் ஒருவித பரிகாரம் செய்து அவனை மீட்கிறார். அவர் மனிதராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்பரிகாரம் மனிதன் சார்பாக செலுத்தப்பட்டதாக இருக்கும். எனவேதான் கிறிஸ்து தம்மையே சிலுவையில் நமக்காக கையளித்தார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளோடும், சமுதாயத்;தால் ஒதுக்கப்பட்ட மக்களோடும் குழந்தைகளோடும் அன்பு கொண்டிருந்தார். இதன் மூலமாக மறைந்து போன மனிதத்தை மண்ணில் நிலைநாட்டினார். புதைக்கப்பட்டிருந்த மனிதத்தை இயேசு உயிர்ப்பித்தார். சிதைக்கப்பட்டிருந்த மனிதனை மாண்புறச் செய்தார். இயேசு இந்த மண்ணில் பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக மரியாளுக்குக் காட்சி கொடுத்த போது கபிரியேல் தூதர் “இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” (லூக். 1:30,31) என்று சொன்னார். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் அல்லது மீட்பர் என்று பொருள். அவர் நம்மை மீட்பதற்காகவே வந்தார். இரண்டாவதாக எசாயா இறைவாக்கினர் உரைத்தபடி, “இதோ கன்னி கருத்தாங்கி ஓர் ஆண்மகவை பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவர் என்று முன்னுரைத்தார். இம்மானுவேல் என்பதற்கு ‘கடவுள் நம்மோடு’ என்று அர்த்தமாகும். இந்த இரண்டு செய்தியும் நமக்கு சொல்லுவது இதுதான், இயேசு நம்மை இரட்சிக்க வந்தார். நம்மோடு குடியிருக்க வந்தார்.
இறைமகன் இயேசு அன்று மட்டும் பிறந்திருக்கவில்லை, இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார். எப்படி? ஏழை, எளியோர், அனாதைகள், நோயாளிகள், முதியோர் என ஒவ்வொருவரையும் அன்பு செய்யும் போது அங்கே இயேசு பிறக்கிறார்.
இன்று மனிதநேயமிக்க இதயங்களிலே இயேசு பிறக்கிறார். மனிதம் மதிக்கப்படுகிற இடமே இயேசு தங்குமிடம். வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை – அன்னை தெரசாள்.
வாழ்வது ஒருமுறைதான் அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம். மண் வேண்டாம், சுகம் வேண்டாம். மாந்தருக்கு உதவிட நல்மனதை தாரும் பாலன் இயேசுவே. இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழுவோம். உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உறைய உறைவிடம் இன்றி வாடுவோருக்கு நம்மிடம் உள்ளதையும், உள்ளத்தையும் பகிர்வோம். பரமனின் அருள் பெறுவோம் எங்கே பகிர்வு உள்ளதோ அங்கே மகிழ்ச்சி பிறக்கிறது. எங்கே மகிழ்ச்சியுள்ளதோ அங்கே பாலன் இயேசு பிறக்கிறார். எனவே பகிர்வோம், மகிழ்வோம்.
பிறந்திருக்கும் பாலன் இயேசு உங்களையும், என்னையும் ஆசீரால் நிரப்பிட தொடரும் கல்வாரிப் பலியில் ஜெபிப்போம்.
சிந்தனைக்கு:
ஆயிரம் முறை இயேசு பெத்லேகமில் பிறந்தாலும் நம் இதயத்தில் பிறக்காவிடில் என்ன பயன்? - ஏஞ்சலுஸ் சிஸ்லெசியுஸ்
திருத்தொண்டர் பர்னபாஸ்