தொழிலாளரான புனித சூசையப்பர் - மே 1


ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!
  • இவ்வாறு வாழ்ந்தவர் யார் தெரியமா?  
அவரே நமது புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது.  ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள்.  இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று.  இந்த விழா எவ்வாறு தோன்றியது.  
உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ஆம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார்.  
யார் இந்த சூசையப்பர்? 
  • மரியாளின் கணவர் சூசையப்பர்.  அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)
  • தாவீதின் வழிமரபினர்தான் புனித சூசையப்பர்.  (லூக் 2:4)
  • இயேசு யோசேப்பின் மகன்.  இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். (அருளப்பர் 1:45, 6:42)
கன்னி மரியாளின் கணவரும் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே எடுத்தியம்புகிறது.  நீதிமான் என்ற வார்த்தை அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது.  தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நன் முறையில் நடத்தினார்.  கன்னிமரியின் பேறுகாலத்திற்கு சத்திரம் தேடி அலைந்த போதும், குழந்தையை கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார்.  இதன் வழியாக யேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
புனித சூசையப்பர் பழையஏற்பாட்டில் காணப்படும் சூசையோடு ஒப்பிடபடுகிறார்.


சூசை

பழைய ஏற்பாட்டில்

  புதிய ஏற்பாட்டில்
  • மக்களை பஞ்சத்திலிருந்து காத்தார்.
  • சூசையை எகிப்து மன்னன் எகிப்துக்கு அதிபராக்கினான்.
  • தேவை என்று வருவோரை சூசையிடம் அனுப்பினான்.
  • மன்னன் இயேசுவை ஏரோதுவிடமிருந்து காத்தார்
  • கடவுள் சூசையப்பரை விண்ணகவீட்டின் தலைவராக்கினார்
  • உதவி என்று வருவோரை புனித சூசையப்பரிடம் செல்ல கடவுள் பணிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். மேலும் கடவுள் மனிதனை தமது சாயலாக படைத்தார்.  ஆணும் பெண்ணுமாக படைததார்.  ஆணும் பெண்ணும் இறைவனது படைப்பு பணியிலே சமமாக பங்கேற்கிறார்கள்.  இன்றைய சூழலில் ஆண்கள் அலுவலகத்தில் 8 மணிநேரம் வேலை செய்தாலும் பெண்கள் வீடுகளில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.  உழைத்து, உழைத்து சோர்ந்து போகிறார்கள்.  இன்றைய சூழலில் நாம், அப்பா ஆசிரியராக இருந்தால் வாத்தியார் மகன் என்றும் அரசியல் வாதியாக இருந்தால் ஆடுயு மகன் என்றும் மருத்துவராக இருந்தால் டாக்டர் மகன் என்றும் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டு பிறரை நாம் இனம் கண்டு கொள்கிறோம்.
  
இன்றைய நற்செய்தியில் கூட இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய சூசையின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட மக்களைப் பற்றி மத்தேயு எழுதிய நற்செய்தி குறிப்பிடுகிறது.  சூசையப்பரின் தொழில் இன்றைய கம்பியூட்டர் உலகிலே மிகச் சாதரணமாகப் பார்க்கப்படும் தச்சுத்தொழில்.  அவர் ஒரு கூலித் தொழிலாளி’.  ஆனால் அன்று அது மேன்மையாக கருதப்பட்டது.  உடல் உழைப்புக்கு மாண்பும், மதிப்பும் இருந்தன.  ஆனால் இன்றோ சேற்றில் இறங்கி உழைப்பவனும், உலைகளத்தில் நெருப்பில் வெந்து சம்மட்டி அடிப்பவனும், சாக்கடையை சுத்தம் செய்பவனும், வேகாத வெயிலிலே பாரவண்டி இழுப்பவனும், யுஃஉ அறையில் வேலை செய்பவர்களுக்கு இழுக்கானவர்கள், மட்டமானவர்கள் என கருதுகின்றனர்.

மாறாக செய்யும் தொழிலே தெய்வம்.  அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும்.  தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும்.  மட்டமான தொழில்கள் எனப்படும் வேலைகளும் செய்யப்பட்டால்தான் படித்த, புத்தி கூர்மையுள்ள தொழில் செய்வோர்களால் முழுமையாக செயல்பட முடியும்.  உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும்.  எனவே எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கும், உலகிற்கும் பயன் அளிப்பதாக இருந்தால் அதைப்பற்றி மேன்மை படுத்துவோம்.  எனவே கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

இன்று நாம் விழா கொண்டாடும் புனிதராம் சூசையப்பரிடம் நாம் கற்றக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பணிகளும் மதிக்கப்படவேண்டும்.  எல்லாப்பணியாளர்களும் இறைவனது படைப்பு பணியிலே ஒத்துழைப்பவர்களாவார்கள்.  எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.  சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்து பார்க்கும் மனநிலை மாற வேண்டும்.  உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும் மனைவிக்கும் சூசையப்பர் ஒரு சிறந்த முன் மாதிரியாவார்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும்; தவறானதாகும். .  நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம்.  அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.  நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.        ஆமென்…..


திருத்தொண்டர் பர்னபாஸ்
(2007- 2008)

1 கருத்து:

  1. புனித வளவனாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
    துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
    கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!
    இவ்வாறு வாழ்ந்தவர். வாழ்க உன் புகழ்!

    பதிலளிநீக்கு