புனித தோமையார் - இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி - ஜீலை 3


இன்று நம் மக்கள் மனதில் தோமா என்றால் ஐயப்பேர்வழி, சந்தேகப்புனிதர் எனும் கருத்து நிலவி வருகிறது.  ஆனால் அவர் “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” (யோவான் 20:28) என விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல் வேறு யாரும் மனம் விட்டு அறிக்கையிடவில்லையே!  இதையேதான் நாம் விசுவாச அறிக்கை ஜெபமாக கூறுகின்றோம்.

தோமாவுக்கு ஆண்டவர் மேல் தனிப்பற்று.  அதனால்தான் இயேசு இலாசரை உயிர்பிக்க செல்லும் போது மற்ற அப்போஸ்தலர்கள் அவரது உயிர்க்கு ஆபத்து என்று தடுத்தபோது, தோமா, “நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தாயாராய் இருப்போம்” என்று (யோவான் 11:16); கூறியதை சிந்தித்து பார்க்கவேண்டும்.  இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.  தோமா மட்டும்தானா ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்றுச் சொன்னதை ஏற்றுக் கொள்ள வில்லை?  மற்றவர்கள் எல்லோரும் “உயிர்த்த ஆண்டவரை பார்த்தோம்” என்று பெண்கள் சொன்னதை நம்பினார்களா? இல்லையே.  “அவர் உயிரோடு இருக்கிறார், என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை” (மாற்கு 16:11) சீடர்கள் நம்பவில்லை (மாற்கு 16:13) “தம்மை கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் இறுகிய உள்ளத்தோடு இருந்தமையால் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்” (மாற்கு 16:13.)

தோமா, ஆண்டவரின் விண்ணேற்பிற்குப் பிறகு ‘சென்று போதியுங்கள்’ என்ற ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து மறைசாட்சியாக மரித்தார். அவரது கல்லறையை கி.பி 1522ல் போர்த்துகீசியர்கள் சென்னை வந்த போது கண்டுபிடிதிருக்கிறார்கள். 

ஒன்பதாம் வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வில் எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த ஒரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான்.  காரணம் கேட்டபோது, “என் பேப்பரை வாங்கி எட்டு மாணவர்கள் காப்பி அடித்தனர்.  அவர்களை நினைத்து சிரிக்கிறேன்” என்றான்.

தேர்விலே காப்பிஅடிப்பது முறைகேடான செயல்.  ஆனால் புனிதர்களை காப்பியடிப்பது வரவேற்கத்தக்கது.  திருத்தூதர் பவுல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்” (1கொரி 11:1) என்கிறார்.  புனிதர்கள் அனைவரும் கிறிஸ்துவை மிகவும் பின்பற்றினர்.  எனவே புனிதர்களுடைய வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.  அதிலும் புனித தோமாவின் வாழ்வு நம் விசுவாச வாழ்க்கையை ஆழப்படுத்த வழிகாட்டும் வாழ்வு என்றால் மிகையல்ல.  அன்னை மரியா “நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறவில்லை.  மாறாக “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்றுதான் சொன்னார்.  புனித தோமாவும் “வாருங்கள் அவரோடு செல்வோம்” என்று (யோவான் 11:16) ல் சொல்வதன் மூலம் ஆண்டவரைப் மையப் படுத்துகிறாரே தவிர தன்னை அல்ல. எனவே தோமாவின் வாழ்வை முன்மாதியாகக் கொண்டு ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடிப்போம். 

சகோ. அந்தோணி தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக