வார்த்தை

இயேசுவில் பிரியமானவர்களே!
“உன்னால் முடியும்” என்ற பெற்றோர்களின் வார்த்தைகள் கல்லூரித் தேர்வில் தோல்வி அடைந்திருந்த வைரமுத்துவை, கவியரசு வைரமுத்துவாக மாற்றியது. “உன்னை பாடச்சொன்னதற்கு ஒரு கழுதையை பாடச் சொல்லியிருக்கலாம்” என்று ஆசியர் அவரை திட்டியபோதும்,” “கண்ணா! நீ பாடு உன் அம்மா நான் கேட்கிறேன்” என்று சொன்ன தாயின் உற்சாக வார்த்தைகள் இன்று உலகிற்கு இசை ஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தியது. “உலகம் எப்போதும் இரண்டாவதாக வருபவனை ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை” என்ற மந்திர வார்த்தைகள் குத்துச் சண்டை போட்டியில் மயங்கி கிடந்த முகமது அலியை உலகின் நம்பர் ஒன் குத்து சன்டை வீரராக மாற்றியது. ஆம்! மானுட வார்த்தைகளால் வாழ்க்கை பலம் பெறுகிறது, அதே நேரம் பலவீனம் அடைகின்றது. ஆனால் கடவுளின் வார்த்தைகள், மனிதனில் எண்ணற்ற மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
  • ‘அப்படியே ஆகட்டும்’ (லூக். 1:38) என்று சொன்ன மரியாளின் வார்த்தைகள், இந்த மனுகுலத்திற்கு அவரை அன்னையாக, உயர்த்திக் காட்டியது.
  • “ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவார்த்தைகள் சவேரியாரை புனிதராக மாற்றியது.
  • “சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு செய்தபோதெல்லாம், எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40) என்ற கடவுளின் வார்த்தைகள் அகில உலகம் போற்றும் அன்னையாக அன்னை தெரசாவை உயர்த்தியது.
  • “பகலில் நடப்பது போல் எப்போதும் நடப்போம், குடிவெறி, சண்டை, காமவெறி, தீய நாட்டம் போன்றவற்றை தவிர்ப்போம்” (ரோமை. 13:13)என்ற வேத வார்த்தைகள் பாவியான அகுஸ்தினாரை புனிதராக உயர்த்தியது.
  • “உன்னிடம் உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு” (மத். 19:21) என்ற இயேசுவின் வார்த்தை மக்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்தோணியாரை புனிதராக மாற்றியது.
  • ஆகவேதான் நாம், கடவுளின் வார்த்தை இரு பக்கம்; கூர்மையானது, எளிதில் வெட்டக் கூடியது என்று சொல்கின்றோம். யார் எல்லாம் கடவுளின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுகிறார்களோ அவர்களை ஆண்டவர் உயர்த்துகிறார். அவர்கள் கற்பாறையின் மீது வீடுகட்டியதற்கு சமமாக கருதப்படுகிறார்கள்.
  • ஆண்டவரின் வார்த்தையை கேட்டு, தன் ஒரே மகனை பலியிடச் சென்ற ஆபிரகாம், இன்று “விசுவாசத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். (தொ. நூல்.22:1-19)
  • கடவுளின் விருப்பத்திற்கு இணங்க, கட்டாந்தரையில் கப்பல் கட்டிய நோவா இன்றும் விவிலியத்தில் போற்றப்படுகிறார். அவரது குடும்பம் காப்பாற்றப்பட்டது. (தொ. நூல். 6:14-22)
  • இயேசுவின் “எஃபாத்தா’ (மாற். 7:34) என்ற வார்த்தை, குருடனை குணமாக்கியது. “தலீத்தாகூம்” (மாற். 5:41) என்ற வல்லமையான வார்த்தை இறந்த சிறுமியை உயிருடன் எழுப்பியது. இந்த இரண்டிற்கும் உறுதுணையாய் இருந்தது இவர்கள் கடவுளின் வார்த்தை மேல் கொண்ட நம்பிக்கை.
எனவே, மெட்டி ஒலி, கோலங்களுக்கு கொடுக்கும் மதிப்பை, SMS, Internet, அலைபேசி என்று செலவழிக்கும் நேரத்தை நாம் நம் விவிலிய வார்த்தைகளுக்கு செலவழிப்போம். அப்போது கடவுளின் வார்த்தை நம்மை மனிதனாக நல்லதொரு புனிதனாக மாற்றும்…. மாற்றம் அடைவோம்.

சகோ. ஆரோக்கிய தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக