புனித சவேரியார்த் திருவிழா - டிசம்பர் 3


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! 

அகிலமெல்லாம் ஆதாயாமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடிருந்தவர் ஆண்டவரை நம்பி தனது ஆன்மாவை ஆதாயாமாக்கிக் கொண்டதுமன்றி ஆண்டவருக்கு அநேக ஆன்மாக்களை ஆதாயாமாக்கினார்.

அவர்தான் நமது இந்திய நாட்டின் பாதுகாவலரான புனித பிரான்ஸிஸ் சவேரியார். அத்தகைய புனிதருக்கு விழா எடுக்கின்ற நாமும் நம்மை எவ்வாறு இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்ற வேண்டும் என்று சிந்திந்துப் பார்க்க வேண்டும்.   புனித சவேரியார் கி. பி 1506 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள நவாரே நகரில், செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.  தமது இளம் வயதில், பேரும் புகழும் பெற்று சந்தோஷ்மான வாழ்க்கையை அமைத்து, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, அப்பல்கலைக் கழகத்திலேயே பேராசியராக பணிபுரிந்த போது அவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் புனித இஞ்ஞாசியார். 

சவேரியாரின் நண்பராக மாறிய இஞ்ஞாசியார், சவேரியாரின் எதிர்கால கனவுகளையெல்லாம் அறிந்திருந்தார்.  ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம், “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவசனத்தைக் கூறியதோடு, சவேரியார் இறைவனின் கைகளில் பயனுள்ள கருவியாக மாற வேண்டும் என்று இஞ்ஞாசியார் இடைவிடாது செபித்தார். அதன் விளைவாக இயேசுவுக்கு உகந்த வாழ்வு வாழ்பவராக மாறினார் சவேரியார்.  இயேசு சபையில் சேர்ந்தவர், குருவான பிறகு மறைபரப்புப் பணியில் இறைவார்த்தையை அறிவிப்பதில் தனியாத தாகம் கொண்டார்.  

இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ள “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்” என்ற இயேசுவின் கூற்றிற்கிணங்க, இயேசு சபையின் முதல் மறை போதகராக கீழ்திசை நாடுகளை நோக்கிப் புறப்பட்டவர், 1542ம் ஆண்டு 13 மாத கால கடுமையான கடல் பயணத்திற்கு பிறகு கோவாவை வந்தடைந்தர்.  இறைபணியாற்ற இந்தியா வந்த அவர் பல சோதனைகளை சந்தித்தார்.  இந்தியா பல மொழிகளுக்கும், இனங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் பெயர் பெற்ற நாடு,  இச்சூழ்நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் நற்செய்தி பணியாற்றுவது என்பது எளிதான காரியமல்ல. எனவேதான் அவரது பணிகளில் எண்ணிலடங்கா இன்னல்களையும் இடர்பாடுகளையும் அனுபவித்தார்.  தென்னிந்தியா, இலங்கை. மலேசியா, மலாக்கா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது, இந்நாடுகளின் தட்பவெப்ப நிலை, பல்வேறு மொழிகளை கற்க வேண்டிய கட்டாய நிலை, உடல் நோய், மக்களிடமிருந்து எதிர்ப்பு மற்றும் விலங்குகளிடமிருந்து ஆபத்து இவை எதுவும் நற்செய்தியை அறிவிப்பதிலிருந்து அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நாடுகளில் கிறிஸ்தவ சமூகங்களைக் கட்டியெழுப்பினார். 

1549 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்த கோவா திரும்பிய சவேரியார். சீனாவில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று உந்தப்பட்டவராக சென்றவர், வழியில் சாங் சுவன் சான் என்ற தீவில் நோய் வாய்ப்பட்டு 1552 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.  அவரது உடல் 1553 ஆம் ஆண்டு கோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது அவரது அழியா, புனித உடல் இன்றும் அழியாமல் இறைவனின் மகிமையை பறைசாற்றிய வண்ணம் இறைவன் அவரை உயர்த்தியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்திலே இறைவன், இறைவாக்கினர் எரேமியாவை தேர்ந்தெடுத்ததை போல புனித சவேரியாரை நாம் கிறிஸ்துவை அறியும் பொருட்டு தேர்ந்துக் கொண்டார்.  அதோடு மட்டுமல்லாமல் “அவர்கள் முன் அஞ்சாதே ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்று எரேமியாவை தேற்றிய இறைவன் நம் புனிதரோடும் இருந்து அவர் எதிர்கொண்ட இடர்பாடுகளிலெல்லாம் அவரைத் தேற்றினார்.  

இரண்டாவது வாசகத்தில் புனித சின்னப்பர் குறிப்பிடுவதைப் போல நற்செய்தி அறிவிப்பதை தம்மீது சுமத்தப்பட்ட ஒரு கடமையாக ஏற்றுக் கொண்டு எப்படியாவது சிலரையேனும் மீட்கும் பொருட்டு எல்லோருக்கும் எல்லாம் ஆனார் புனித சவேரியார். கிறிஸ்துவின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை, நற்கருணை ஆண்டவர் மீது கொண்டிருந்த பக்தி அவரது பணியை எளிமையாக்கியது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த இறைமகன் இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்குத் தோன்றி அவர்களிடம் “உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று சொல்லி நற்செய்தியை அறிவிக்க அவர்களை அனுப்புகிறார்.  அதன் அடிப்படையில்தான் புனித தோமையார் இந்தியாவுக்கு இயேசுவை அறிவிக்க வந்தார்.  அவரைத் தொடர்ந்து ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித சவேரியார் இந்தியாவிற்கு வந்து நற்செய்தியை அறிவித்தார்.  இன்று கிறிஸ்தவர்களாய் இருக்கிற நாம் நற்செய்தியை அறிவிப்பது குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தாரின் பணிதானே என்று சொல்லி நாம் சும்மா இருந்து விடக் கூடாது.  ஏனென்றால் “ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நற்செய்தியை போதிக்கும் கடமை உள்ளது” என்று தாய் திருச்சபை அறிவுறுத்துகிறது.

எப்படி நற்செய்தியை அறிவிப்பது என்று சிந்திப்போமானால் அதற்கு அநேக வழிகள் உண்டு.  முக்கியமான மூன்று வழிகளை குறிந்து சிந்திபோம்.
  • நமது பங்கிலுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களில் பலர் துறவறத்தை மேற்கொண்டு நற்செய்தியை அறிவிக்கலாம்.  அதற்கு நமது குழந்தைகளை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் பக்தியில் சிறந்தவர்களாகவும் வளர்க்க வேண்டியது நமது கடமை. 
  • செபம் செய்வதன் வழியாக நற்செய்தியை அறிவிக்கலாம்.  புனித சவேரியாருக்கு அடுத்தபடியாக வேதபோதக நாடுகளின் பாதுகாவலராக இருப்பவர் சிறுமலர் என்று அழைக்கப்படுகின்ற குழந்தை தெரசம்மாள்.  சவேரியாரைப் போன்று அவர் கடல் கடந்து நாடு நாடாக நற்செய்தியை அறிவிக்கவில்லை.  நான்கு சுவற்றிற்குள் இருந்து செபத்தின் வழியாக நற்செய்தி பணியாற்றினார்.  செபம் செய்வதன் வழியாக பலரை மனம்மாற்றினார்.  பலருக்கு சுகம் கிடைக்கச் செய்தார்.  அதே போல நாமும் உடல் நோயால் வருந்துவோர்காக ஜெபிக்கலாம்.  பாவிகள் மனம்மாற ஜெபிக்கலாம். நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஈடுபடுவோர்க்காய் ஜெபிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணிக்கு தடைக்கல்லாக செயல்படுவோர்க்காக ஜெபிக்கலாம்.  
  • இயேசுவின் வார்த்தைகளைக் கடைபிடித்து சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம் நற்செய்தியை அறிவிக்கலாம்.  இயேசுவின் போதனைகளில் முக்கியமானது அன்பு செய்து வாழ வேண்டும் என்பதாகும்.   சிறுதுளி பெருவெள்ளம் என்பதை கேள்விப்பட்டிருப்போம்.  அதே போல நமது சகோதர சகோதரிகளுக்காக சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சாட்சியாக வாழலாம்.  
புனித சவேரியர் கடல் கடந்து நாடு நாடாகச் சென்று இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்.  அவரது பாதுகாவலில் நாமும் நற்செய்தியை அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.  
  • நமது பிள்ளைகளை துறவறத்துக்கு அனுப்புவது மூலமாகவும் 
  • நாம் மற்றவர்களுக்காக செபம் செய்யும் போதும் 
  • பிறரன்பு செயல்களில் ஈடுபட்டு சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலமும்இறையரசை கட்டியெழுப்புவோம். 
சகோ. ஜெரோம் பால் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக