திருவருகை காலம்


வரவிருக்கின்றவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

இறையேசுவில் பிரியமானவர்களே!

திருமுழுக்கு யோவானின் இந்தக் கேள்விகள் நம்மை சிறிது சஞ்சலமடையச் செய்கிறது. “நானோ உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்.  ஆனால் எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் உங்களுக்கு தூய ஆவியாரால் திருமுழுக்கு கொடுப்பார்.  நான் அருடைய காலடி வாரை அவிழ்க்க கூட தகுதியற்றவன் என்று இயேசுவின் கடவுள் தன்மையை, இயேசுவே மெசியா என்பதை விசுவாச சத்தியமாக அறிக்கையிட்ட திருமுழுக்கு யோவான் இயேசுவிடம் இத்தகைய சந்தேகத்தை ஏன் எழுப்ப வேண்டும்?

“ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடாரி வைத்தாயிற்று, நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும்,” (மத் 3:10).  “அவர் உலக்கை தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார், கோதுமையை தன் களஞ்சியத்தில் சேர்ப்பார்.  ஆனால் பதரை அணையா நெருப்பில் சுட்டெரிப்பார்,” என்று மெசியாவின் செயல்பாடுகளை இறைவாக்காக முன்னறிவித்தவருக்கு இயேசுவின் போதனைகள், செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் யூதர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு, திருமுழுக்கு யோவானிடமும் இருந்தது.  மெசியாவானவர் பாவிகளை அழித்து, அநீதியும், அராஜகமும் நிறைந்த சமுதாயத்தை அழித்து ரோம இராஜ்ஜியத்தையும், யூதாவை சுற்றியுள்ள பகைவர்களையும் அழித்து ஒரு மாபெரும் இராஜ்ஜியத்தை உருவாக்குவார் என்று நினைத்தார்கள்.  திருமுழுக்கு யோவானும் இதே மனநிலையில்தான் மெசியாவை எதிர்பார்த்தார்.

ஆனால் இயேசுவின் போதனைகள், “உங்கள் வலக்கன்னத்தில் அறைபவனுக்கு இடக்கன்னத்தையும் காட்டுங்கள்.  உங்கள் அங்கியைக் கேட்பவனுக்கு மேலாடையையும் கொடுங்கள், உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள், உங்களை துன்புருத்துவோர்க்காக செபியுங்கள்” என்று, அவர்களின் எதிர்பார்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. எனவே அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.  பாவியாகிய மத்தேயுவை தனது சீடராக ஏற்படுத்திக் கொண்டதும் பாவிகளோடு அமர்ந்து உணவு உண்டதும், திருமுழுக்கு யோவானிடத்தில் சந்தேகத்தை எற்படுத்தி இருக்கலாம்.

இயேசு யோவானின் சீடர்களுக்கு அளிக்கும் பதிலில் தனது நிலையை, தான் மெசியா என்பதை தெளிவுபடுத்துகிறார் இயேசு.  “குருடர் பார்கின்றனர், செவிடர் கேட்கின்றனர், முடவர் நடக்கின்றனர், இறந்தோர் உயிப்பெற்று எழுகின்றனர் என்று நீங்கள் காண்பதையும், கேட்பதையும் யோவானிடம் சென்று கூறுங்கள்” என்று பதிலுரைக்கின்றார் நம் ஆண்டவர் இயேசு.  (லூக் 10:23-24) இந்த பதிலில் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.  ஆதியிலே எத்தனையோ அரசர்கள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டார்கள்.  சவுல் வந்தார், தவீது வந்தார், சாலமோன் வந்தார், எல்லோரும் ஆட்சி செய்தார்கள்.  ஆனால் இவர்கள் அற்புதங்களை, அருளடையாளங்களை செய்யவில்லை.  இறைவாக்கினர்கள் வந்தார்கள்.இறைவனுடைய வாக்கை அறிவித்தார்கள்.  ஆனால் ஒருவரும் கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், அற்புதங்களையும் சுகத்தையும் நற்செய்தியையும் மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் இயேசுவின் போதனைகளில், செயல்பாடுகளில் கடவுளின் எல்லையில்லா இரக்கமும் கருணையும் வெளிப்படுகிறது. 

ஆம்!  கடவுளின் எல்லையில்லா அன்பும் இரக்கமும், நீதியும் இறைமகன் இயேசுவில் வெளிப்படுகிறது.  கடவுளின் எல்லையில்லா இரக்கத்தை அன்பை மனிதன் பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை.  அவருடைய இரக்கத்தை நாடி வருவதில்லை. திருமுழுக்கு யோவான் நினைத்தது போல இறைவன் அல்லது மெசியாவானவர் பாவிகளை அழித்து தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதாக இருந்திருந்தால் பூவுலகில் ஒரு மனிதன் கூட தப்பி பிழைத்திருக்க முடியாது.  ஏனென்றால் எல்லா மனிதர்களும் தவறக் கூடியவர்கள் பாவிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  கடவுளுடைய இரக்கமும் மனிதனுடைய உண்மையான மனமாற்றமும் இணைகின்ற பொழுதுதான் அங்கு மீட்பு கிடைக்கின்றது.  பழைய ஏற்பாட்டில் பார்கிறோம், நினிவே அழிவுறும் என்று இறைவாக்கு உரைத்தார் யோனா.  ஆனால் அந்த நகரத்தின் அரசன் முதல் ஆண்டிவரை சாம்பலில் அமர்ந்து சாக்குடை உடுத்தி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகின்றார்கள்.  இறைவனும் அவர்களை மன்னிக்கிறார்.  ஆனால் தன் இறைவாக்கு நிறைவேற வில்லையே என்று முணுமுணுக்கும் யோனாவிடம் தான் எவ்வளவு இரக்கம் மிகுந்த இறைவன் என்று தெளிவுபடுத்துவதை பார்கிறோம்.

திருமுழுக்கு யோவான் கடவுளுடைய நீதிதீர்ப்பையும் தண்டணையையும் மிக அழுத்தமாக ஆக்ரோசமாக வெளிப்படுத்தினாரே தவிர, கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், கருணையையும் வெளிப்படுத்தவில்லை.  அவர் ஒரு பழைய ஏற்பாட்டு மனிதராக கடவுளுக்கு உகந்த முறையில், கடவுளுடைய பார்வையில் பெரியவராக இறைவாக்கினரைவிட மேன்மையானவராக விளங்கினார்.  இறைமகன் இயேசுவின் மூலம் புதிய இறையாட்சி இவ்வுலகில் பிறப்பெடுக்கிறது.  இயேசுவின் வருகை பாவிகளுக்கு புறந்தள்ளப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுக்க கூடியதாகவும் எளியோர்க்கு நற்செய்தியை அறிவிப்பதாகவும் அமைந்தது.  இயேவின் மூலம் கடவுள் நமக்கு புதியதொரு வாழ்வை கடவுள் மக்களாகும் உரிமையை கொடுத்திருக்கின்றார். அவருடைய இரக்கத்தை, கருணையை இறைவன் இயேசுவின் மூலம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று நம்மில் இருக்கும் இயேசுவை அவருடைய அன்பை, கருணையை, இரக்கத்தை நாம் முழுவதுமாக உணர்கின்றோமா, என்று சிந்திக்க இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கின்றது.  “ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்,” என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.  கடவுளுடைய அன்பை எல்லையில்லா இரக்கத்தை நாம் உண்மையிலேயே அனுபவித்தோமானால் நாமும் அந்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு கொடுக்க கூடியவர்களாக மாறுவோம் என்பதில் ஐயமில்லை. நமது குடும்பங்களில் வாழும் வயது முதிர்ந்த, அன்புக்காக ஏங்கும் பெற்றோர்களை நாம் எவ்வாறு அன்புசெய்கிறோம்? பெற்றோர்கள் நம்மில் காட்டிய அன்பில் நூறுக்கு பத்து சதவீதம் திரும்ப செலுத்தினாலே பல முதியோர் இல்லங்கள் மூடப்பட்டுவிடும். தவறு செய்கின்ற மனைவியோ, கணவனோ மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும்போது இறைவனின் மன்னிக்கும் குணமும், அன்பும் வெளிப்படுகிறது.  அவர்களின் வாழ்வு இறையன்பை உலகிற்கு பறைசாற்றக் கூடியதாக மாறும். இவ்வாறு இறையன்பை தங்கள் வாழ்வில் செயல்படுத்துபவர்கள்தான் புனிதர்களாகின்றனர். 

பலியை அல்ல, இரக்கத்தையே நம் இறைவன் நாடுகின்றார்.  நம்முடைய உள்ளத்தில் வர்மத்தையும் வைராக்கியத்யையும் வெறுப்பையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆலய படிகளை நாம் ஏறி இறங்கினாலும் இறைவனுடைய ஆசிரையும் அவரது அன்பையும் நாம் அடைவது கடினம்.  மாறாக அவர் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறைகளை நாம் வாழும் போது இறைவனுடைய இரக்கத்தை, அன்பை அனுபவித்து அதை உலகிற்கு பறைசாற்றக்கூடிய குன்றின் மேல் இட்ட தீபமாக நமது வாழ்வு மாறும்.  வாழ்வின் குறைகள் அழிந்து புது பொலிவு பெற இறைவனிடம் மன்றாடுவோம்.  ஆமென்.

சகோ. சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக