என்னை பின்பற்ற விரும்புகிறவர் எவரும்
தன்னலம் துறந்து தம் சிலுவையைத் சுமந்து
கொண்டு என்னை பின்பற்றட்டும் (மத் 16:24)
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட உணவு ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு பகல் பாராமல் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் வாழ்வு ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு இரவு ஓர் சிலுவை. ஆயிரம், இலட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோருக்கு எதிர்காலம் ஓர் சிலுவை. திருமண தம்பதியர்களுக்கு வயதான பெற்றோர்கள் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று ஆன்மீகவாதிகள் சிலுவை, உனக்கு நான் சிலுவை, எனக்கு நீ சிலுவை….. என்று இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகின்றோம். இதுவா இயேசு நம்மை சுமந்து கொண்டு பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை… இல்லவே இல்லை…
உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மையை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம், இன்பம் என்பது இல்லாமல் போகலாம், துன்பம் மட்டுமே துணையாகலாம், சொத்துக்கள் பறிபோகலாம், சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம் ஏன்? இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளைதான் ஏற்றுக் கொண்டு இயேசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் இயேசுவும் வாழ்ந்து காட்டினார். தன் வழி பின்பற்ற விரும்புகிறவர்களையும் அதனால் கிடைக்கும் பாடுகளின் பயனையும் மூன்று முறை மலைமேல் தோன்றி இயேசு அறிவித்தார். தன்னை பின்பற்ற விரும்புகிறவர்கள் கடை பிடிக்க வேண்டிய தெய்வீக போதனைகளை மலைப் பொழிவாக கலிலேயா மலைமீது அறிவித்தார். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றேர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. (மத் 5:10.). தன்னுடைய இறுதி காலத்தில் கல்வாரியில் தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களின் துன்ப துயரத்தையும், வேதனை சோதனைகளையும் விளக்கி காட்டினார். தன்னை பின்பற்ற விரும்புபவனிடம் “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக் கூட இடமில்லை.” (மத் 8:20). இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாபோர் மலையில் தோன்றி நீதிக்காக, உண்மைக்காக துணிவோடு வாழ்கின்றவர்கள் உயிர்த்த யேசுவில் மகிமை அடைவார்கள் என்பதை வெளிப்படுத்தினார். “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துனை நல்லது” (லூக் 9:33). இத்தகைய அறிவிப்புகளை, அறிவித்ததோடு நின்றுவிடாமல் அதனை செயல் வடிவமாக மாற்றினார் இயேசு. இயேசுவின் காலத்தில் யூத மக்கள் உரோமை நாட்டினராலும், சதுசேயர்களாலும், பரிசேயர்களாலும் அடிமைப்பட்டு கிடந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இயேசு பரிசேயர்களுக்கு பாடம் புகட்டினார். தன்னை தூய்மையானவர்கள், சட்டங்களையும், மரபுகளையும் நுணுக்கமாய் கடைபிடிக்கும் கடவுள் பக்தர்கள் என்று சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் கட்டளைகளை நாங்கள் மீறலாம் என்று நியாயப்படுத்தி வாழ்ந்தவர்களை இயேசு "வெளிவேடகாரர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று கூறினார். மறுபுறம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சட்டங்களை வளைத்து, தங்களை உயர் வகுப்பினராக காட்டி, உரோமையோடு நல்லுறவு வளர்த்து, மக்களை ஏமாற்றி வாழ்ந்த சதுசேயர்களை “உங்களுக்கு ஐயோ கேடு, ஏன் என்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகின்றீர்கள், நீங்களோ அந்த சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள் (லூக் 11:46) என்று வசைப்பாடினார். இவைகள் எல்லாம் ஒரு விதத்தில் இயேசு ஏழைகளின் நீதிக்காக போராடிய போராட்டங்களே. இத்தகைய போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் முத்தாய்ப்பான மூன்று ஆணிகள், இந்த மூன்று ஆணிகளை தொடராக மாற்ற இயேசு நம்மை நோக்கி “தன்னலம் துறந்து பாடுகளின் சிலுவைகளை சுமந்து” வருவதற்கு ஆசைப்படுகின்றார். நாமும் பலவித சுமைகளை சுமக்கின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் இயேசு விரும்பும் சிலுவைகளா? என்பதை தெரியாமல் சுமக்கின்றோம்.
கற்பனைச் சிலுவை
இவர்கள் நிஜத்தை விட நிழலை நேசிப்பவர்கள். எதார்த்தத்தை விரும்பாமல், கற்பனையில் கோட்டை கட்டி கஸ்டப்படுபவர்கள். துன்பப்படும் மனிதனைப் பார்த்து துயரம் கொள்வார்கள், அந்த துயரத்தை மனதளவில் நிறுத்தி “அந்தோ, அய்யோ பாவம்” என்று கற்பனையிலே சிலுவையை சுமந்து கொள்வார்கள். நல்ல சமாரியனின், லேவியராக, குருவாக அடிப்பட்டவரை, அல்லல் படுவோரை, அநீதியைப் பார்த்து கற்பனையிலே சிலுவை சுமந்து கொண்டு சென்றுவிடுவார்கள்.
காற்றுச் சிலுவை
“கடவுளே உனக்கு கண் இல்லையா, காது இல்லையா?” என்று தானே உருவாக்கி கொள்ளும் சிலுவைக்கு கடவுளை பழித்துரைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் வானுயர கட்டிடம் கட்டுவார்கள், பூமிக்கு அடியில் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள், தன் சொந்தம் வளர வேண்டும் என்று தன் உறவிலே பிள்ளைக்கு திருமணம் செய்வார்கள். இப்படி போன்ற விதைகளை விதைத்துவிட்டு சுனாமி, பூகம்பம் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அறுவடை செய்வார்கள். இத்தகைய சிலுவைகளைத் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
மரச்சிலுவை
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறுவார்கள். இதுதான் யேசு விரும்பிய மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைபடுத்தி வாழும் பணக்கார முதலைகளிடமும் போராடுபவர்கள். கொத்தடிமை, இலஞ்சம், ஊழல் வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள்…… போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து “ஐயோ பாவம்” என்று நினைத்து விடாமல் அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் மனித சிலுவையாக, நல்ல சமாரியனாக மாற்றம் அடைய முடியும். இதைத்தான் இயேசு “நீதியை நிலை நாட்ட வேட்கைக் கொண்டோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்” (மத் 5:6) என்றார்.
எனவே சாவுக்கு சாவுமணி அடித்துவிட்டு, துன்ப துயரங்களையும் இயேசுவின் போதனைகளையும் ஏற்று, துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி பிறருக்காய் படும் வேதனைகளை, துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் நம்மால் ஒரு இயேசுவை உருவாக்க முடியவில்லையே? உருவாக்குவோம், நாளைய வரலாறு நமது பெயரை வாழ்த்த வைப்போம்….
சிலுவை வழி…… ஓர் சுகமான வழி…..
சகோ. ஆரோக்கிய தாஸ்