பாவத்தால் கிடைத்த வாழ்வு


ஆதிமனிதன் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் கடவுளை நினைத்திருப்போமா என்பது கேள்விக்குறிதான். இறைமகன் மனிதனாகப் பிறந்திருப்பாரா? இல்லை கிறிஸ்தவம்தான் இருந்திருக்குமா? ஆக கிறிஸ்தவத்தின் அடித்தளத்தோடு இரண்டற கலந்துவிட்டது பாவம். பழைய ஏற்பாட்டில் ஆதாமில் ஆரம்பமான பாவ பயணம்,. புதிய ஏற்பாட்டில் இறைமகனின் இரத்தத்தைக் குடித்து நிறைவு பெறுகின்றது. 

தொடக்கத்தில் ஆதாமையும், ஏவாளையும் படைத்து, படைப்பு பொருட்கள் அனைத்தையும் அவர்களுக்கு அளித்து எக்குறையும் இன்றி வாழவைத்தார் இறைவன். மனிதனோ கீழ்படியாமை என்னும் சாவியால் பாவ வாழ்வின் கதவுகளை திறந்து வைத்தான். பாவத்தின் பலனாக சாவுக்குள் நுழைகிறோமே என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல், அன்று ஆதிப் பொற்றோர் செய்த பாவம் மனித இனத்தின் சாபமாக மாறி அவனை இன்றளவும் தொடந்து வருகின்றது. கனியை உண்டு ஆதாமால் தொடங்கபட்ட பாவ வாழ்விற்கு, தன் தம்பியை கொன்று காயின் உரமூட்டினான். இவ்வாறு படிப்படியாக பாவம் மனிதனை ஆட்கொள்ள கடவுள் அதற்கு தண்டணையாக நீரால் (நோவா காலத்தில்) அழிவைக் கொடுத்தார். பின் மக்களுக்காக மனமிறங்கிய இறைவன், அன்பால் அரவணைத்து சென்றார். தன்னுடைய அன்பின் மக்களாகிய இஸ்ராயேலரை அடிமைதனத்திலிருந்து மீட்க மோயிசனை தேர்ந்து கொண்டு வாக்களிக்கப்பட்ட நாட்டை அவர்களின் உரிமைச் சொத்தாக்கினார். அதை மறந்த மக்கள் பொய் தெய்வங்களையும் பாவ வாழ்வையும் நாடிச் சென்ற பொழுதெல்லாம் வெவ்வேறு இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களை நெறிபடுத்தியதோடு, மனித சமுதாயத்தின் மீட்புதிட்டத்தையும் முன்னுரைக்கின்றார். இவ்வாறு பழைய ஏற்பாட்டில் பாவிகளை நெறிபடுத்திய இறைவன், இதோ தன்னுடைய ஒரே மகனை உலகிற்க்கு அனுப்பினார். இந்த இறைமகனின் வருகையை குறித்து நற்செய்தியாளர் புனித மத்தேயு “ மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார்” (மத் 18: 11) என வெள்ளிடை மலைப்போல் நமக்கு தெளிவு படுத்துகின்றார். இறைமகன் இயேசுவின் வருகையைப் பற்றி “மருத்துவன் நோயற்றவனுக்கு அன்று, நோயுற்றவனுக்கே. நீதிமான்களை அல்ல, பாவிகளையே மீட்க வந்தேன்” (மத் 9:12-13) என பாவிகளை குறித்த தன் மீட்புதிட்டத்தையும் இவ்வாறாக உரைக்கின்றார். மீட்பு திட்டத்தின் பரிணாமத்தை “நேர்மையாளரை குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய பாவிகளை குறித்து விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” (லூக் 15:7) என்றுரைத்த இறைமகன் இயேசு கிறிஸ்து பாவிகளோடும், நோயுற்றவர்களோடும் தன் பணிகாலத்தை கழித்ததோடு மட்டும் இல்லாமல், அவர்களுக்காக உயிரையே கொடுத்துள்ளார். உலகின் பாவங்களை தன்னுடைய இரத்தக் கரையால் துடைக்கின்றார். இந்த இறைமகனின் ஈடு இணையற்ற இந்த அன்பை தூய பவுல் கூறும் போது “ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டணை தீர்ப்பாய் அமைந்தது போல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதனின் கீழ்படியாமையால் பலர் பாவியானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள். (உரோ 5:18-19) இவ்வாறு இறைமகனின் சாவின் மூலம் மனித சமுதாயம் எவ்வாறு மீட்பு அடைந்தது என்று தௌளத்தெளிவாக குறிப்பிடுகின்றார். மேலும் சாவின் வழியாய் இறையருளை நாம் எவ்வாறு பெற்றோம் என்பதை மீண்டும் புனித பவுல் தன்னுடைய கடிதத்திலே “சாவின் வழியால் பாவம் ஆட்சி செய்தது போல் ஆண்டவர் இயேசுவின் வழியாய் இருள் ஆட்சி செய்கின்றது. அந்த அருள் கடவுளின் நிலைவாழ்வை பெற வழி வகுக்கின்றது. (உரோ 5:21) இவ்வாறு மனிதனுடைய பாவ வாழ்வு இறைமகனின் இணையற்ற இரத்தத்தால் நிறைவு பெற்று நமக்கு புதியதொரு வாழ்வை கொடுக்கலாயிற்று.

எனவே இறைசமூகமே! இறைவனின் அருள் கிடைக்கின்றது என்பதற்காக பழைய பாவ வாழ்வில் நிலைத்திருக்கலாமா? என்றால் அது இயேசுவின் தியாக பலிக்கு அர்த்தத்தை கொடுக்காது. இதை தூய சின்னப்பர் இவ்வாறு சுட்டிகாட்டுவார், “ஒருபோதும் பாவ வாழ்வில் நிலைத்திருக்கக் கூடாது. திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாம் அவரோடு சாவிலும் இணைந்திருக்கிறோம். அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்தது போல் நாமும் அவரோடு உயிர் பெறுவோம். நம்முடைய பாவமாகிய பழைய மனித இயல்பை அவரோடு சிலுவையில் அறைந்துவிட்டு புதுவாழ்வில் உயிர்தெழுவோம்”. (உரோ 6:3) எனவே சகோதரமே சீராக் ஆகமம் (21:1-2) கூறுவது போல் “பாவம் செய்து விட்டாயா இனிமேல் செய்யாதே. உன்னுடைய பழைய பாவங்களுக்காய் மன்னிப்புக்கேள். பாம்பை கண்டு ஒடுவதை போல் பாவத்தை விட்டு ஓடி விடு.” (சீராக் 21:1-2) நம்முடைய பாவ வாழ்வை விட்டு விலக உறுதி கொண்டவர்களாய் “நொறுங்கிய உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோம், அவர் என்றுமே நம்மை கைவிடுவதில்லை.” 

சகோ. ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக