அமைதி


இறையேசுவில் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே 

எங்கே நிம்மதி என்று மனிதன் தேடி பார்த்து இறுதியில் தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறான். 6000 ஆண்டுகள் முன்பு மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்று ஏட்டில் வடிவமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த 6000 ஆண்டுகளில் 5700 ஆண்டுகள் ஏதாவது ஒரு மூலையில் அடுத்த நாட்டின் மீது போர்த்தொடுத்து அமைதியில்லா நிலையில் நாட்களை கழித்திருக்கின்றனர். மீதம் உள்ள 300 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. அந்த 5700 ஆண்டுகள் எப்படி சண்டை போடலாம் என்று யோசித்து, ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற நடிகை தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் சாகும்முன் தான் கைபட எழுதிய வாசகம்: என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் வாழ்வில் நிம்மதியில்லாததால் நிம்மதியை தேடி செல்கிறேன்”. 

இன்று மனிதன் அமைதியை தேடி அலைமோதிக்கொண்டிருக்கிறான். என் குடும்பம் கடனில் மூழ்கியிருக்கின்றது. இந்த கடன்களையெல்லாம் நான் எப்போது அடைக்கப்போகிறேன் என்று ஏங்கும் கூட்டம் ஒருபுறம், பிரிந்த என்குடும்பம் ஒன்று சேரும் நாள் வராதா? நோயினால் பிடிக்கப்பட்ட நான் சுகம் பெற மாட்டேனா? என் குடும்பத்தில் உள்ள சொத்துப் பிரச்சினை தீராதா? என் குடும்பத்திற்கு எதிராக பிறர் ஏவிவிட்ட பில்லிசு10ன்யம் போன்ற கட்டுகளை உடைத்தெறிய முடியாதா? இப்படி பல கேள்விகளோடு வாழும் நமக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கடவுள் சொல்கிறார், நான் என் சமாதானத்தை உங்கள் குடும்பங்களில் ஆறுபோல் பாய்ந்தோட செய்வேன்…. சமாதானம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது “பிரிந்தவர்கள் சமரசம் செய்துக்கொண்டு ஒன்று சேர்வது மட்டும் இதன் பொருள் அன்று, கடவுள் சொல்லும் சமாதானம் பல அர்த்தங்களைக் கொண்டது. 

எபிரேய மொழியில் சலோம் (shalom) என்று கூறுவர். சலோம் என்றால் ‘அமைதி’ என்று பொருள். இவ்வார்த்தைக்கு புகழ், செல்வம், நல்வாழ்வு என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது என்று பொருள் கொள்ளலாம். கடவுள் சொல்லும் சமாதானமும் மேலே கூறப்பட்டுள்ள பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகத்தான் இருக்கின்றது. அந்த சாமாதானத்தைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களை அனுப்பிய நிகழ்விலும் பார்கிறோம். “நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் சமாதானம் என்று சொல்லுங்கள்” என்கிறார். 

இயேசு இவ்வுலகிற்கு வந்தது அந்த சமாதானத்தை அகிலம் முழுவதும் கொடுக்கவே. இயேசு பிறக்கும் போது, வானதூதர்கள், “உன்னதத்தில் மகிமையும், மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் ஆகுக” என்று பாடினார்கள். பலர் இயேசுவை தேடிவந்தபோது, அவர், அவர்களை குணப்படுத்தி, “சமாதானமாய் போ” என்றுதான் சொல்கின்றார். இயேசு பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு அச்சத்தில் சீடர்கள் கதவுகளை தாழிட்டு, கலக்கத்தில் என்ன நேருமோ என்று குழம்பியிருந்த போது இயேசு திடீரென்று உள்ளே தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்று சொல்கிறார். 

இன்று அந்த சீடர்களைப்போல், நம்முடைய இதயக் கதவுகளை பூட்டி வைத்துக்கொண்டு நடந்ததையும், நடப்பவற்றையும், நடக்கப் போவதைபற்றியம் பலவாறு சிந்தித்து, கலக்கத்தில் துவலும் வேளையில், ஆண்டவர் சொல்வது “உங்களுக்கு சமாதானம்.” இந்த சமாதானம் ஒருவருக்கு மட்டுமன்று, மாறாக உலகுக்கே உரித்தாக வேண்டும் என்று விரும்புகிறார். 
ஆதி ஆகமம் 10ஆம் அதிகாரத்தில் நோவா பெட்டகத்திலிருந்து வெளிவந்த பிறகு அவரின் சந்ததியர்கள் 72 நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர் என விவிலிய அறிஞர்கள் சொல்கின்றார்கள். பழைய ஏற்பாட்டின் கணக்குப்படி உலகில் 72 நாடுகள் இருந்தன. புதிய ஏற்பாட்டின் கணக்குபடி 72 சீடர்களை அனுப்புவது உலகம் முழுவதும் அமைதியை கொண்டுபோய் சேர்க்கவே என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே இயேசு இவ்வுலகிற்கு கொண்டுவந்த அமைதி, முதலில் கடவுள் தரும் சமாதானம் நம்மில் குடி கொள்ள ஒத்துழைப்பை தரவேண்டும். புனித அகுஸ்தினார் “என் நெஞ்சம் உம்மை அடையும் வரை இறைவா நிம்மதி இல்லை” என்று கூறுகிறார் . இந்த உலக செல்வங்கள் நிம்மதியை தருவதில்லை. உயிருள்ள தேவனாகிய ஆண்டவர் இயேசுவை தேடும் போதுதான் அமைதி என்பதை இனம் கண்டு கொள்ள முடியும். அதற்கு வேண்டிய அருள் வரத்தை இத்திருப்பலியில் கேட்டு ஜெபிப்போம்! ஆமென்…..

திருத்தொண்டர் டோனி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக