ஜெபம்


ஜெபிக்க ஜெபிக்க இறையன்பில் நாளும் வளர்கின்றோம்
கொடுக்க கொடுக்க பிறரன்பில் நாளும் மகிழ்கின்றோம் 
ஆம் எத்துணை அழகான இறையியல் செறிந்த வார்த்தைகள். ஜெபம் கிறிஸ்துவத்தின் அடிப்படையான ஆணிவேர் போன்றது. ஆலமரத்தின் விதை சிறியதாக தன்னுடைய வேர்களை பரப்பி வலிமையடைந்த மரமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. பல்வேறு பறவைகள் தங்கும் சரணாலயமாக தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நம்முடைய ஜெபமும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே ஆழ்மனதில் உறைந்து நமக்கும் நம்மை சுற்றி வாழ்வோர் அனைவருக்கும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஜெபத்தினால் நமக்கும் இறைவனுக்கும் இடையே உறவு ஆரம்பமாகிறது. மண்ணுலகில் தந்தைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. இறைவன்பால் நம்மையெல்லாம் கொண்டு சேர்க்க வல்லதே ஜெபம். நம்மையும் இறைவனையும் ஒன்றாக சேர்க்க வல்ல உடன்படிக்கை பெட்டகமாக ஜெபம் செயல்படுகிறது. காதலன் காதலியிடம் எவ்வளவு நெருக்கமான உறவு கொண்டு இருப்பானோ அதைப்போல ஜெபமானது நம்மை மூவொரு இறைவனோடு நெருக்கம் கொள்ளச் செய்கிறது. 

ஜெபம் வேண்டுதலும், கேட்க்கபடுதலும் 

பழைய ஏற்பாட்டில்
சாலமோன், தான் கட்டிய ஆலயத்தில் இறைவனை வந்து தங்கும்படி கெஞ்சி மன்றாடுகிறார். அதோடுமட்டுமல்லாது இந்த ஆலயத்தில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி இறைஞ்சும் பொழுது உம் மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும் என்று மன்றாடினார். சாலமோன் இவ்வாறாக மன்றாடிய பின் வானத்திலிருந்து நெருப்பு இறங்கி எரி பலியையும் மற்றப்பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சிமை கோவிலை நிரப்பியது. (2குறிப்பேடு 7:1) யூதாவின் வழிமரபினரான யாக்கோபு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி “கடவுளே மெய்யாகவே நீர் எனக்கு ஆசி வழங்கி என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னை துன்புறுத்தாது, நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். (1குறிப்பேடு 4:10) எல்கானாவின் மனைவி அன்னா மலடியாய் இருந்தார். அன்னா தனக்கு மகப்பேறு அருளுமாறு இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார் ( 1சாமுவேல் 1:19) இப்பையனுக்காகவே நான் வேண்டிக் கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை கேட்டருளினார். (1சாமுவேல் 1:27). 

இறைவாக்கினராகிய எலியா, ஆகாபு அரசிடம் “நான் பணிபுரியும் இஸ்ராயேலின் கடவுளான ‘வாழும் ஆண்டவர்’ மேல் ஆணை! என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்றார் (1அரசர்கள் 17:1). பல நாட்களுக்குப் பிறகு பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில் ஆண்டவர் எலியாவிடம் “அகாயு உன்னைக் காணுமாறு போய் நில், நான் நாட்டில் மழைப் பெய்யச் செய்வேன்” என்று கூறினார். (1அரசர்கள் 18:1) ஆகாபு உணவும் பாணமும் அருந்தச் சென்றபின் எலியா கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக் கொண்டார். (1அரசர்கள் 18:42). இதற்க்கிடையில் வானம் இருண்டது. கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது பெரும் மழைபெய்தது. (1அரசர்கள் 18:45) 

அமிதாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. நினிவே நகருக்கு சென்று அதற்கு அழிவு வரப்போகிறது என்ற அறிவிக்கச் சொன்னார். ஆனால் ஆண்டவரின் திருமுன்னின்று தப்பியோட தர்சீசுக்கு பயணப்பட்டார். ஆண்டவர் கடலில் கொடுங்காற்று வீசும்படி செய்தார். படகில் இருந்தவர்கள் யோனாவை கடலில் வீசி எறிந்தார்கள். பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கியது. யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறே தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடினார். (யோனா 2:1) ஆண்டவர் அந்த மீனுக்கு கட்டளையிட அது யோனாவை கரையிலே கக்கியது. (யோனா 2:10) யோபு வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே. துன்பங்கள், சாவுகள், பேரிழப்புகள் மத்தியிலே இறைவனைப்பற்றி அவதூராக பேசாமல் இறைவனைப் புகழ்ந்தேத்தினர். ஆனால் அவர் நண்பர்கள் இறைவனைப் பற்றி சரியாக பேசவில்லை, எனவே ஆண்டவர் யோபுவை அவர்களுக்காக மன்றாட செய்தார். யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடிய பிறகு ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுத்தார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார் (யோபு 42:10).

நாம் இறைவனிடம் இடையறாது ஜெபிக்கும் பொழுது நம் தேவைகளை நிறைவேற்றுபவராக, சோர்ந்துபோன தருணங்களில் அரவணைக்கும் அன்பு தெய்வமாக நம்மோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் தங்கி இருக்கிறார் நம் ஆண்டவராகிய இறைவன். 

புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே ஜெப வீரராய் திகழ்கிறார். ஜெபத்தில் தீராத ஆர்வம் கொண்டவராயிருகிறார். கிறிஸ்துவின் பிறப்பு, ஞானஸ்நானம், பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், இறப்பு, உயிர்ப்பு அனைத்துமே ஜெபத்தோடு இணைந்ததாக காணப்படுகிறது. கிறிஸ்து தன் தந்தைக்கு நன்றி கூறுவதும், பாடுகளின் மலைமேலும் இரவுநேரத்திலும் (லூக் 6:12) தனிமையிலும் (லூக் 9:18) பாலைவனத்திலும் (லூக் 5:16) இடையறாது ஜெபிக்கிறார். இறைமக்களாகிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே முன் உதாரணமாக திகழ்கிறார். 

புனித லூக்கா தன்னுடைய நற்செய்தியிலே “ஜெபம்” பற்றிய மூன்று உவமைகளை கூறுகிறார். 
  1. காலம் தாழ்ந்து வந்து உதவி கேட்கும் தன் நண்பனின் தொல்லையின் பொருட்டாவது அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார்” என்கிறார் கிறிஸ்து (லூக் 11:5-8) கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். இறைசமூகமாகிய நாமும் இறைவனிடம் கேட்க வேண்டும். (லூக் 11:9-10) 
  2. இரண்டாவதாக நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையிலே மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனறு இயேசு கூறுகிறார். தாம் தேர்ந்து கொண்ட மக்களின் மன்றாட்டை கேட்பாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் தேவன் நாம் கேட்பதற்கு முன்னமே நமக்கு என்ன தேவை என்பதை அறிந்தவராயிருக்கிறார். என்ன தேவை என்பதை அறிந்து தக்க காலத்தில் நமது மன்றாட்டுகளை நிறைவேற்ற காத்திருக்கிறார். (லூக் 18:1-8)
  3. மூன்றாவதாக பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையிலே நாம் எவ்வாறு தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.(லூக் 18:9-14).
நம் வாழ்வில் ஜெபம் 
கடவுளே உனக்கு கண் இல்லையா? காது இல்லையா? என்று புலம்புகிறோம். நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் தாழ்ச்சி, நேர்மை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். ஜெபமானது பயிற்சியாக இல்லாமல் நமது வாழ்வாக மாற வேண்டும். நமது தேவைகளான நல்ல வேலைக்கிடைக்கவும், வீடு வாங்கவும் குணம் பெறவும் மட்டுமல்லாது, இறைவனை நம் உள்ளத்திலே கொண்டுவரக் கூடிய கருவியாக செயல்பட வேண்டும். தாழ்ச்சி நிறைந்த மனதோடும் (2 குறிப்பேடு 7:14) திறந்த இதயத்தோடும் (எபி 29:13) ஆண்டவரிடம் நாம் மன்றாடும் போது விண்ணக மலையிலிருந்து நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார். ஜெபமானது இறைவனை வழிபடவும், மனம் திருந்தி வாழவும், பிறருக்காக ஜெபிக்க உதவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வரங்களுக்காக நாம் இத்திருப்பலியிலே மன்றாடுவோம். ஆமென்.

சகோ. ஜோசப் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக