துன்பம்


கி. மு: கிறிஸ்துவைப் பின்பற்றும் முன்
கி. பி: கிறிஸ்துவைப் பின்பற்றியப் பின்

கி . மு
துன்பமே எனக்கென்ன நீ நண்பனா?
என்னுடைய வாழ்வில் அடிக்கடி நீ.
துன்பமே எனக்கென்ன நீ
எதிரியா?
பழிவாங்கி பார்த்து சிரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ மழையா?
என்னை முழுவதும்
நனைத்து விடுகிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
தூரத்து உறவினரா?
அடிக்கடி எனக்கு போன் செய்கிறாய்!
துன்பமே என்கென்ன நீ தீவிரவாதியா?
சுட்டு சுட்டு மயானத்தில் எரிக்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
தினமும் வரும் பிறந்த நாளா?
தினமும் கைகொடுத்து
வாழ்த்து தெரிவிக்கிறாய்!
துன்பமே எனக்கென்ன நீ
கல்லூரி காதலியா?
கனவிலும் என்னை தொடருகிறாய்.

துன்பமே எனக்கென்ன நீ
சில் வண்டுகளா?
பூ போன்ற என்னில்
பூதமாக வந்து அமர்கிறாய்.
துன்பமே எனக்கென்ன நீ
life time recharge 
வாழ்நாள் முழுதும்
என்னுடன்……..

கி . பி
இயேசுவே!
எனக்கென்ன நீ
இறப்பினும் வாழ்வா?
நல்லவேளை உன்னை
பின்பற்றினேன்,.
இறப்பதற்கு முன் தெரிந்ததே!
இறந்தபின் தெரிந்திருந்தால்
முடிவில்லா வாழ்வு
முடியாமல் போயிருக்கும்.
முற்றிலும் துறந்து
முழுமையாய் பின்பற்றுவோம்
துன்பங்களும் துகள்களாய் மாறும்!..

சகோ. டேவிட் ரஜேஸ்

நல்ல சமாரியன்


அன்பு இதயத்தில் சுரக்கப்பட வேண்டும்! சுரண்டப்பட கூடாது!  இவ்வுலகில் இரு வகையான அன்பு உண்டு.  1. இறையன்பு, 2. பிறரன்பு. கடவுள் நம்மீது கொண்ட அன்பு அல்லது நாம் அவர் மீது கொள்ளும் அன்பு இறையன்பு எனப்படும். நம் சகோதர சகோதரரிகளோடு கொள்ளும் அன்பு அல்லது அவர்கள் நம்மீது கொள்ளும் அன்பு பிறரன்பு எனப்படும்.
பிறரன்பில் குறைகள் ஏற்பட காரணம் என்ன? நம்மிடம் இருக்கும் சுயநலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தியில் ஒரு மனிதன் ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோவுக்கு செல்கிறான் என வாசிக்க கேட்டோம். ஜெருசலேம் என்பது கடவுள் வாழக்கூடிய இடம். விவிலியத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் ஒளியின் இடமாக இருந்தது. ஜெரிக்கோ, பகைவர்கள் தங்கி வாழக் கூடிய இடமாக இருந்தது. பாவங்களை கட்டிக்கொண்டு, பிறரின் பொருட்களை கொள்ளையடித்து, சாபத்தை பெற்றவர்களாய் இருளில் வாழந்துக் கொண்டிருந்தனர். நற்செய்தியில் கூறப்பட்ட மனிதனோ ஒளிமிகுந்த ஜெருசலேத்மை விட்டு இருள் நிறைந்த ஜெரிக்கோவை நோக்கி செல்கிறான். பகைவர்களால் தாக்கப்பட்டு செல்வங்களை இழந்து குற்றுயிராய் விடப்படுகின்றான். “பழைய ஏற்பாட்டில் தொடக்க ஆகமத்தில் ஆதாம் ஏவாள் கடவுளின் பிரசன்னத்தில் வாழ்ந்து வந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் அவர்கள் ஒளியை விட்டு, எந்த மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னாரோ, அந்த இருளான பகுதியை நோக்கி சென்றார்கள். பாவம் என்னும் பாதள குழியில் விழுந்தனர். புதிய ஏற்பாட்டில் இந்த மனிதனும் அதே நிலைக்குதான் ஆளாகியிருக்கிறான். (அருளப்பர் 8: 34) பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை. (உரோமையர்) 

பாவத்தின் சம்பளம் மரணம்

முதலில் ஒரு குரு தற்செயலாய் செல்ல நேர்ந்தது. அடிப்பட்டுகிடந்தவனை காப்பாற்ற முன் வரவில்லை. காரணம் என்ன? யூதர்களின் சட்டப்படி குரு இறந்தவனையோ அல்லது நோயுற்றிருப்பவனையோ தொட்டால் அல்லது அவன் அருகில் சென்றால் அவர் 7 நாட்கள் கோயில் பணிகள் எதையும் செய்ய முடியாத வண்ணம் தீட்டு என்று ஒதுக்கி விடுவார்கள். எனவேதான் அவர் தன் வழியாய் போனார். இரண்டாவதாக ஒரு லேவியன் ஒருவன் வருகிறான். அவனும் உதவி செய்ய முன் வரவில்லை. ஏன்? நான் ஒரு வேளை அவனை காப்பாற்ற அருகில் செல்லும் போது கள்வர்கள் ஒளிந்திருந்து என்னையும் தாக்க முற்பட வாய்ப்புண்டு என்று யூகித்து பயத்துடன் ஒதுங்கி சென்றான். மூன்றாவதாக நல்ல சமாரியன் வருகிறார். அவனை பார்த்தவுடன் இரக்கம் கொண்டு, அருகில் வந்து அவனின் காயத்திற்கு கட்டுபோடுகிறார். (ஓசே 6:12) வாருங்கள் நாம் அவரிடம் செல்வோம். அவரே நம் காயங்களுக்கு கட்டுபோடுவார். 

ஆம் பாவத்தில் விழுந்து குற்றுயிராய் துடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர் மடியில் கிடத்தி பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். எண்ணெய் வார்த்து காயங்களை கட்டுவது, நம்மை மன்னித்து ஆவியாரின்  வல்லமையால் நிரப்புவதை குறிக்கின்றது. பிறகு அவனை ஒரு சாவடிக்கு கொண்டு சேர்க்கிறார். அந்த சாவடிதான் நம் கத்தோலிக்க தாய் திருச்சபை. இந்த திருச்சபையை நிறுவியவர் இயேசுக் கிறிஸ்து. அந்த நல்ல சமாரியனாகிய இயேசு அந்த சாவடிக்காரரிடம் இரண்டு தெனாரியத்தை கொடுக்கிறார். இரண்டு தெனாரியம் என்பது இயேசுவின் இரண்டு கட்டளைகளை குறிக்கிறார். (மாற்கு 12: 30-31) நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். எல்லாவற்றிகும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது, தன்னைதானே நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது.

இங்கு யேசு இறையன்பையும் பிறரன்பையும் முன்வைக்கிறார். இயேசு ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வுகளிலும், தந்தை இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகிறேன் என்று சொன்ன நிகழ்வுளிலுமிருந்து இயேசுவிடம் இருந்த இறையன்பு நமக்கு தெளிவாகிறது. இயேசு நோயாளர்கள், அடிமைகள், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்கும் புதுமைகள், அற்புதங்கள் செய்வதின் வழியாக அவரின் பிறரன்பு வெளிப்படுத்தபடுகின்றது. 

1அருளப்பர் 4:9 – தம் ஒரே பேரான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அவரை நாம் அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் புனித சின்னப்பர் கண்ணால் காணக்கூடிய சகோதர சகோதரியை அன்பு செய்யாதவன் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்யமுடியாது என்கிறார். எனவே அன்பு செய்வோம். அன்பில் வாழ்வோம். மகிழ்வில் திளைப்போம். அகற்கான அருளை வேண்டுவோம். 


திருத்தொண்டர் டோனி 

மரணம் ஒரு மணமகன்


“மனிதன் நினைக்கிறான்
வாழ்வு நிலைக்குமென்று
கடவுள் நினைக்கிறான்
பாவம் மனிதனென்று”
மனிதா மரணத்தை கண்டு அழுகிறாயா? அது
உன் அறியாமையை கண்டு சிரிக்கிறது
மரணம் உனக்கு விருப்பமானவற்றை
பிரித்து விடுகிறது
என்று ஏசுகிறாய் - ஆனால்
மரணம் ஒரு பிறப்பு
மரணம் ஒரு வளர்ச்சி
மரணம் ஒரு மணமகன்
என்பதை நீ அறிந்ததில்லையா?
மரணம் ஒரு பிறப்பு:
இருளின் மரணம் ஒளியின் பிறப்பு
மலர்களின் மரணம் காய்களின் பிறப்பு
அறியாமையின் மரணம் அறிவின் பிறப்பு
சாதியத்தின் மரணம் சமத்துவத்தின் பிறப்பு
உறக்கத்தின் மரணம் தானே விழிப்பு!
மரணம் ஒரு வளர்ச்சி
இலைகளின் மரணம்தான்
கிளைகளின் வளர்ச்சி
இளமையின் மரணம் முதிர்ச்சி
பழமையின் மரணம்
புதியவற்றின் எழுச்சி
கன்னிமையின் மரணம்
தாய்மையின் பிறப்பு
மரணம் ஒரு மணமகன்
மரணம் என்னும் மணமகன்
வாழ்க்கை என்னும் மணமகளை
அழைத்து செல்கிறது
விண்ணகத்தில் நிலைவாழ்வு பெற
ஆம் - “மரணம் ஒரு மணமகன்”


E. எடிசன் ராஜ்

அமைதி


இறையேசுவில் அன்பான சகோதரர்களே, சகோதரிகளே 

எங்கே நிம்மதி என்று மனிதன் தேடி பார்த்து இறுதியில் தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக் கொள்கிறான். 6000 ஆண்டுகள் முன்பு மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை வரலாற்று ஏட்டில் வடிவமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த 6000 ஆண்டுகளில் 5700 ஆண்டுகள் ஏதாவது ஒரு மூலையில் அடுத்த நாட்டின் மீது போர்த்தொடுத்து அமைதியில்லா நிலையில் நாட்களை கழித்திருக்கின்றனர். மீதம் உள்ள 300 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. அந்த 5700 ஆண்டுகள் எப்படி சண்டை போடலாம் என்று யோசித்து, ஆயுதங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற நடிகை தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் சாகும்முன் தான் கைபட எழுதிய வாசகம்: என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் வாழ்வில் நிம்மதியில்லாததால் நிம்மதியை தேடி செல்கிறேன்”. 

இன்று மனிதன் அமைதியை தேடி அலைமோதிக்கொண்டிருக்கிறான். என் குடும்பம் கடனில் மூழ்கியிருக்கின்றது. இந்த கடன்களையெல்லாம் நான் எப்போது அடைக்கப்போகிறேன் என்று ஏங்கும் கூட்டம் ஒருபுறம், பிரிந்த என்குடும்பம் ஒன்று சேரும் நாள் வராதா? நோயினால் பிடிக்கப்பட்ட நான் சுகம் பெற மாட்டேனா? என் குடும்பத்தில் உள்ள சொத்துப் பிரச்சினை தீராதா? என் குடும்பத்திற்கு எதிராக பிறர் ஏவிவிட்ட பில்லிசு10ன்யம் போன்ற கட்டுகளை உடைத்தெறிய முடியாதா? இப்படி பல கேள்விகளோடு வாழும் நமக்கு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கடவுள் சொல்கிறார், நான் என் சமாதானத்தை உங்கள் குடும்பங்களில் ஆறுபோல் பாய்ந்தோட செய்வேன்…. சமாதானம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது “பிரிந்தவர்கள் சமரசம் செய்துக்கொண்டு ஒன்று சேர்வது மட்டும் இதன் பொருள் அன்று, கடவுள் சொல்லும் சமாதானம் பல அர்த்தங்களைக் கொண்டது. 

எபிரேய மொழியில் சலோம் (shalom) என்று கூறுவர். சலோம் என்றால் ‘அமைதி’ என்று பொருள். இவ்வார்த்தைக்கு புகழ், செல்வம், நல்வாழ்வு என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது என்று பொருள் கொள்ளலாம். கடவுள் சொல்லும் சமாதானமும் மேலே கூறப்பட்டுள்ள பல அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகத்தான் இருக்கின்றது. அந்த சாமாதானத்தைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடர்களை அனுப்பிய நிகழ்விலும் பார்கிறோம். “நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் சமாதானம் என்று சொல்லுங்கள்” என்கிறார். 

இயேசு இவ்வுலகிற்கு வந்தது அந்த சமாதானத்தை அகிலம் முழுவதும் கொடுக்கவே. இயேசு பிறக்கும் போது, வானதூதர்கள், “உன்னதத்தில் மகிமையும், மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் ஆகுக” என்று பாடினார்கள். பலர் இயேசுவை தேடிவந்தபோது, அவர், அவர்களை குணப்படுத்தி, “சமாதானமாய் போ” என்றுதான் சொல்கின்றார். இயேசு பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு அச்சத்தில் சீடர்கள் கதவுகளை தாழிட்டு, கலக்கத்தில் என்ன நேருமோ என்று குழம்பியிருந்த போது இயேசு திடீரென்று உள்ளே தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்று சொல்கிறார். 

இன்று அந்த சீடர்களைப்போல், நம்முடைய இதயக் கதவுகளை பூட்டி வைத்துக்கொண்டு நடந்ததையும், நடப்பவற்றையும், நடக்கப் போவதைபற்றியம் பலவாறு சிந்தித்து, கலக்கத்தில் துவலும் வேளையில், ஆண்டவர் சொல்வது “உங்களுக்கு சமாதானம்.” இந்த சமாதானம் ஒருவருக்கு மட்டுமன்று, மாறாக உலகுக்கே உரித்தாக வேண்டும் என்று விரும்புகிறார். 
ஆதி ஆகமம் 10ஆம் அதிகாரத்தில் நோவா பெட்டகத்திலிருந்து வெளிவந்த பிறகு அவரின் சந்ததியர்கள் 72 நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர் என விவிலிய அறிஞர்கள் சொல்கின்றார்கள். பழைய ஏற்பாட்டின் கணக்குப்படி உலகில் 72 நாடுகள் இருந்தன. புதிய ஏற்பாட்டின் கணக்குபடி 72 சீடர்களை அனுப்புவது உலகம் முழுவதும் அமைதியை கொண்டுபோய் சேர்க்கவே என்று சொன்னால் அது மிகையாகாது. 

எனவே இயேசு இவ்வுலகிற்கு கொண்டுவந்த அமைதி, முதலில் கடவுள் தரும் சமாதானம் நம்மில் குடி கொள்ள ஒத்துழைப்பை தரவேண்டும். புனித அகுஸ்தினார் “என் நெஞ்சம் உம்மை அடையும் வரை இறைவா நிம்மதி இல்லை” என்று கூறுகிறார் . இந்த உலக செல்வங்கள் நிம்மதியை தருவதில்லை. உயிருள்ள தேவனாகிய ஆண்டவர் இயேசுவை தேடும் போதுதான் அமைதி என்பதை இனம் கண்டு கொள்ள முடியும். அதற்கு வேண்டிய அருள் வரத்தை இத்திருப்பலியில் கேட்டு ஜெபிப்போம்! ஆமென்…..

திருத்தொண்டர் டோனி 

ஜெபம்


ஜெபிக்க ஜெபிக்க இறையன்பில் நாளும் வளர்கின்றோம்
கொடுக்க கொடுக்க பிறரன்பில் நாளும் மகிழ்கின்றோம் 
ஆம் எத்துணை அழகான இறையியல் செறிந்த வார்த்தைகள். ஜெபம் கிறிஸ்துவத்தின் அடிப்படையான ஆணிவேர் போன்றது. ஆலமரத்தின் விதை சிறியதாக தன்னுடைய வேர்களை பரப்பி வலிமையடைந்த மரமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. பல்வேறு பறவைகள் தங்கும் சரணாலயமாக தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நம்முடைய ஜெபமும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே ஆழ்மனதில் உறைந்து நமக்கும் நம்மை சுற்றி வாழ்வோர் அனைவருக்கும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஜெபத்தினால் நமக்கும் இறைவனுக்கும் இடையே உறவு ஆரம்பமாகிறது. மண்ணுலகில் தந்தைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. இறைவன்பால் நம்மையெல்லாம் கொண்டு சேர்க்க வல்லதே ஜெபம். நம்மையும் இறைவனையும் ஒன்றாக சேர்க்க வல்ல உடன்படிக்கை பெட்டகமாக ஜெபம் செயல்படுகிறது. காதலன் காதலியிடம் எவ்வளவு நெருக்கமான உறவு கொண்டு இருப்பானோ அதைப்போல ஜெபமானது நம்மை மூவொரு இறைவனோடு நெருக்கம் கொள்ளச் செய்கிறது. 

ஜெபம் வேண்டுதலும், கேட்க்கபடுதலும் 

பழைய ஏற்பாட்டில்
சாலமோன், தான் கட்டிய ஆலயத்தில் இறைவனை வந்து தங்கும்படி கெஞ்சி மன்றாடுகிறார். அதோடுமட்டுமல்லாது இந்த ஆலயத்தில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி இறைஞ்சும் பொழுது உம் மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும் என்று மன்றாடினார். சாலமோன் இவ்வாறாக மன்றாடிய பின் வானத்திலிருந்து நெருப்பு இறங்கி எரி பலியையும் மற்றப்பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சிமை கோவிலை நிரப்பியது. (2குறிப்பேடு 7:1) யூதாவின் வழிமரபினரான யாக்கோபு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி “கடவுளே மெய்யாகவே நீர் எனக்கு ஆசி வழங்கி என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னை துன்புறுத்தாது, நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். (1குறிப்பேடு 4:10) எல்கானாவின் மனைவி அன்னா மலடியாய் இருந்தார். அன்னா தனக்கு மகப்பேறு அருளுமாறு இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார் ( 1சாமுவேல் 1:19) இப்பையனுக்காகவே நான் வேண்டிக் கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை கேட்டருளினார். (1சாமுவேல் 1:27). 

இறைவாக்கினராகிய எலியா, ஆகாபு அரசிடம் “நான் பணிபுரியும் இஸ்ராயேலின் கடவுளான ‘வாழும் ஆண்டவர்’ மேல் ஆணை! என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்றார் (1அரசர்கள் 17:1). பல நாட்களுக்குப் பிறகு பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில் ஆண்டவர் எலியாவிடம் “அகாயு உன்னைக் காணுமாறு போய் நில், நான் நாட்டில் மழைப் பெய்யச் செய்வேன்” என்று கூறினார். (1அரசர்கள் 18:1) ஆகாபு உணவும் பாணமும் அருந்தச் சென்றபின் எலியா கார்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக் கொண்டார். (1அரசர்கள் 18:42). இதற்க்கிடையில் வானம் இருண்டது. கார்மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது பெரும் மழைபெய்தது. (1அரசர்கள் 18:45) 

அமிதாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. நினிவே நகருக்கு சென்று அதற்கு அழிவு வரப்போகிறது என்ற அறிவிக்கச் சொன்னார். ஆனால் ஆண்டவரின் திருமுன்னின்று தப்பியோட தர்சீசுக்கு பயணப்பட்டார். ஆண்டவர் கடலில் கொடுங்காற்று வீசும்படி செய்தார். படகில் இருந்தவர்கள் யோனாவை கடலில் வீசி எறிந்தார்கள். பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கியது. யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறே தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடினார். (யோனா 2:1) ஆண்டவர் அந்த மீனுக்கு கட்டளையிட அது யோனாவை கரையிலே கக்கியது. (யோனா 2:10) யோபு வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்றே. துன்பங்கள், சாவுகள், பேரிழப்புகள் மத்தியிலே இறைவனைப்பற்றி அவதூராக பேசாமல் இறைவனைப் புகழ்ந்தேத்தினர். ஆனால் அவர் நண்பர்கள் இறைவனைப் பற்றி சரியாக பேசவில்லை, எனவே ஆண்டவர் யோபுவை அவர்களுக்காக மன்றாட செய்தார். யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடிய பிறகு ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுத்தார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார் (யோபு 42:10).

நாம் இறைவனிடம் இடையறாது ஜெபிக்கும் பொழுது நம் தேவைகளை நிறைவேற்றுபவராக, சோர்ந்துபோன தருணங்களில் அரவணைக்கும் அன்பு தெய்வமாக நம்மோடு ஒவ்வொரு நொடிப்பொழுதும் தங்கி இருக்கிறார் நம் ஆண்டவராகிய இறைவன். 

புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே ஜெப வீரராய் திகழ்கிறார். ஜெபத்தில் தீராத ஆர்வம் கொண்டவராயிருகிறார். கிறிஸ்துவின் பிறப்பு, ஞானஸ்நானம், பணிவாழ்வு, போதனைகள், புதுமைகள், இறப்பு, உயிர்ப்பு அனைத்துமே ஜெபத்தோடு இணைந்ததாக காணப்படுகிறது. கிறிஸ்து தன் தந்தைக்கு நன்றி கூறுவதும், பாடுகளின் மலைமேலும் இரவுநேரத்திலும் (லூக் 6:12) தனிமையிலும் (லூக் 9:18) பாலைவனத்திலும் (லூக் 5:16) இடையறாது ஜெபிக்கிறார். இறைமக்களாகிய நம் அனைவருக்கும் கிறிஸ்துவே முன் உதாரணமாக திகழ்கிறார். 

புனித லூக்கா தன்னுடைய நற்செய்தியிலே “ஜெபம்” பற்றிய மூன்று உவமைகளை கூறுகிறார். 
  1. காலம் தாழ்ந்து வந்து உதவி கேட்கும் தன் நண்பனின் தொல்லையின் பொருட்டாவது அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார்” என்கிறார் கிறிஸ்து (லூக் 11:5-8) கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். இறைசமூகமாகிய நாமும் இறைவனிடம் கேட்க வேண்டும். (லூக் 11:9-10) 
  2. இரண்டாவதாக நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையிலே மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனறு இயேசு கூறுகிறார். தாம் தேர்ந்து கொண்ட மக்களின் மன்றாட்டை கேட்பாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம் தேவன் நாம் கேட்பதற்கு முன்னமே நமக்கு என்ன தேவை என்பதை அறிந்தவராயிருக்கிறார். என்ன தேவை என்பதை அறிந்து தக்க காலத்தில் நமது மன்றாட்டுகளை நிறைவேற்ற காத்திருக்கிறார். (லூக் 18:1-8)
  3. மூன்றாவதாக பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையிலே நாம் எவ்வாறு தாழ்மையோடு ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.(லூக் 18:9-14).
நம் வாழ்வில் ஜெபம் 
கடவுளே உனக்கு கண் இல்லையா? காது இல்லையா? என்று புலம்புகிறோம். நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால் தாழ்ச்சி, நேர்மை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். ஜெபமானது பயிற்சியாக இல்லாமல் நமது வாழ்வாக மாற வேண்டும். நமது தேவைகளான நல்ல வேலைக்கிடைக்கவும், வீடு வாங்கவும் குணம் பெறவும் மட்டுமல்லாது, இறைவனை நம் உள்ளத்திலே கொண்டுவரக் கூடிய கருவியாக செயல்பட வேண்டும். தாழ்ச்சி நிறைந்த மனதோடும் (2 குறிப்பேடு 7:14) திறந்த இதயத்தோடும் (எபி 29:13) ஆண்டவரிடம் நாம் மன்றாடும் போது விண்ணக மலையிலிருந்து நமக்கு நிச்சயம் செவிசாய்ப்பார். ஜெபமானது இறைவனை வழிபடவும், மனம் திருந்தி வாழவும், பிறருக்காக ஜெபிக்க உதவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வரங்களுக்காக நாம் இத்திருப்பலியிலே மன்றாடுவோம். ஆமென்.

சகோ. ஜோசப் 

துன்பம்


‘துன்பம்’ என்ற பெயரைக் கேட்டாலே ‘சும்மா அதிருதுல்ல.’ இதற்கு காரணம் துன்பம் இல்லாமல் இன்பமில்லை (ழே pயin ழெ பயin) என்பதை ஏற்றுக் கொள்ளாத மனமே காரணம். ஒருவர், “வாழ்வில் இன்பம்” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அதன் விலை ரூபாய் 500. அந்த நூல் சரியாக விற்பனை ஆகவில்லை. அவரது வாழ்வில் இன்பம் இல்லாமல் துன்பத்தை ஏற்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். இவ்வாறு இல்லாமல் துன்பத்தை சரியாக புரிந்துக் கொண்டோம் என்றால் அவற்றிலிருந்து ஒரு திடமான, தெளிவான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.

வாழ்வியலில் துன்பம்
“நாங்கள் எல்லாம் தூங்கும் போது தலையாணிக்கு பதிலாக ‘துன்பத்தை’ வைத்து தூங்குறவுங்க என்று கூறுபவர் ஒருவரும் கிடையாது. தன் வாழ்நாள் முழுவதும் ‘இன்பமே’ என்று கூறுபவரும் கிடையாது. “துன்பம் நிரந்தரம் அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரைப் போல ஓடிவிடும்”. சாலை என்று ஒன்று இருந்தால் அதில் மேடு, பள்ளம் இருக்கத் தான் செய்யும். அது போல ‘வாழ்க்கை’ என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். ஒருவனுக்கு துன்பம் வந்தால் அவன் வாழ்வில் முன்னேறிக் கொண்டு உள்ளான் என்று அர்த்தம்.

என்னை பொறுத்தவரை, ஒருவன் துன்பத்தின் வழியாகத்தான் வாழ்வில் பல வி~யம் கற்றுக் கொள்ள முடியும். இன்பம் ‘ஒருமுறை’ வந்தால் துன்பம் ‘பத்துமுறை’ வர வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டுவேன். ஏனென்றால் அப்போதுதான் நான் வாழ்விலும் சரி, இறைவனிடமும் சரி நெருங்கி இருப்பதாக உணர்கிறேன். 

வாழ்க்கையில் துன்பமே வேண்டாம், இன்பம் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர்கள். “வெந்ததைத் தின்று விட்டு – விதி வந்தால் சாவோம்” என்ற அடிப்படையில் வாழ்பவராகி விடுவோம். ஒருவன் இமயமலை ஏற வேண்டும் என்றால் வெயில், குளிர், காயம், மழை, பசி, தாகம், சோர்வு, என்று துன்பம் வந்தாலும் இவற்றையெல்லாம் கடந்தால்தான் ‘இன்பமான’ இமயமலையின் உச்சியை அடையமுடியும். இறைவனால் உண்டாக்கப்பட்ட இந்த மலையில் ஏற இவ்வளவு துன்பம் தேவைப்படுகிறது என்றால் நம் இயேசு கிறிஸ்துவையே அடைய ‘எவ்வளவு துன்பம்’ சந்திக்க வேண்டிவரும் என்பதை சற்று சிந்திப்போம்.

துன்பத்தில் ‘கின்னஸ் சாதனை’ படைத்தவர் இயேசு கிறிஸ்துதான் என்று கூறலாம். இவரை விட எவரும் அதிகமான சோதனையும், துன்பத்தையும் அடைந்திருக்க மாட்டார்கள். இவருக்கு அடுத்து ‘அப்போஸ்தலர்கள்’ துன்பத்தில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் என்றுக் கூறலாம். அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு வரும் ‘துன்பம்’ எல்லாம் தென்றல் வந்து உரசுவது போலத்தான். ஆகவே வாழ்வு என்னும் பயணத்தில் துன்பத்தை கருவியாக கொண்டு வெற்றியடைவோம். 

“பத்தோடு பதினொன்று, அத்தோடு நானொன்று” என்று வாழாமல் இந்த இறையரசு பணியில் ஈடுபட்ட நாம் அவரது சொற்களை எடுத்துக் கொண்டு உலகமெங்கும் அறிவிக்க செல்வோம். அவ்வாறு வாழ்ந்திட துன்பத்தை துரும்பாக்கி, இன்பத்தை இறும்பாக்கிக் கொள்ளவேண்டிய மனநிலையை ஆண்டவரிடம் கேட்போம். 

சகோ. செ. அருண்

என் வழி சிலுவை வழி

என்னை பின்பற்ற விரும்புகிறவர் எவரும்
தன்னலம் துறந்து தம் சிலுவையைத் சுமந்து
கொண்டு என்னை பின்பற்றட்டும் (மத் 16:24)
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட உணவு ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு பகல் பாராமல் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் வாழ்வு ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு இரவு ஓர் சிலுவை. ஆயிரம், இலட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோருக்கு எதிர்காலம் ஓர் சிலுவை. திருமண தம்பதியர்களுக்கு வயதான பெற்றோர்கள் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று ஆன்மீகவாதிகள் சிலுவை, உனக்கு நான் சிலுவை, எனக்கு நீ சிலுவை….. என்று இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகின்றோம். இதுவா இயேசு நம்மை சுமந்து கொண்டு பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை… இல்லவே இல்லை…

உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மையை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம், இன்பம் என்பது இல்லாமல் போகலாம், துன்பம் மட்டுமே துணையாகலாம், சொத்துக்கள் பறிபோகலாம், சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம் ஏன்? இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளைதான் ஏற்றுக் கொண்டு இயேசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். 

இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் இயேசுவும் வாழ்ந்து காட்டினார். தன் வழி பின்பற்ற விரும்புகிறவர்களையும் அதனால் கிடைக்கும் பாடுகளின் பயனையும் மூன்று முறை மலைமேல் தோன்றி இயேசு அறிவித்தார். தன்னை பின்பற்ற விரும்புகிறவர்கள் கடை பிடிக்க வேண்டிய தெய்வீக போதனைகளை மலைப் பொழிவாக கலிலேயா மலைமீது அறிவித்தார். நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றேர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. (மத் 5:10.). தன்னுடைய இறுதி காலத்தில் கல்வாரியில் தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களின் துன்ப துயரத்தையும், வேதனை சோதனைகளையும் விளக்கி காட்டினார். தன்னை பின்பற்ற விரும்புபவனிடம் “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக் கூட இடமில்லை.” (மத் 8:20). இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாபோர் மலையில் தோன்றி நீதிக்காக, உண்மைக்காக துணிவோடு வாழ்கின்றவர்கள் உயிர்த்த யேசுவில் மகிமை அடைவார்கள் என்பதை வெளிப்படுத்தினார். “ஆண்டவரே நாம் இங்கே இருப்பது எத்துனை நல்லது” (லூக் 9:33). இத்தகைய அறிவிப்புகளை, அறிவித்ததோடு நின்றுவிடாமல் அதனை செயல் வடிவமாக மாற்றினார் இயேசு. இயேசுவின் காலத்தில் யூத மக்கள் உரோமை நாட்டினராலும், சதுசேயர்களாலும், பரிசேயர்களாலும் அடிமைப்பட்டு கிடந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இயேசு பரிசேயர்களுக்கு பாடம் புகட்டினார். தன்னை தூய்மையானவர்கள், சட்டங்களையும், மரபுகளையும் நுணுக்கமாய் கடைபிடிக்கும் கடவுள் பக்தர்கள் என்று சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி, கடவுளின் கட்டளைகளை நாங்கள் மீறலாம் என்று நியாயப்படுத்தி வாழ்ந்தவர்களை இயேசு "வெளிவேடகாரர்களே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று கூறினார். மறுபுறம் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சட்டங்களை வளைத்து, தங்களை உயர் வகுப்பினராக காட்டி, உரோமையோடு நல்லுறவு வளர்த்து, மக்களை ஏமாற்றி வாழ்ந்த சதுசேயர்களை “உங்களுக்கு ஐயோ கேடு, ஏன் என்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகின்றீர்கள், நீங்களோ அந்த சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள் (லூக் 11:46) என்று வசைப்பாடினார். இவைகள் எல்லாம் ஒரு விதத்தில் இயேசு ஏழைகளின் நீதிக்காக போராடிய போராட்டங்களே. இத்தகைய போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் முத்தாய்ப்பான மூன்று ஆணிகள், இந்த மூன்று ஆணிகளை தொடராக மாற்ற இயேசு நம்மை நோக்கி “தன்னலம் துறந்து பாடுகளின் சிலுவைகளை சுமந்து” வருவதற்கு ஆசைப்படுகின்றார். நாமும் பலவித சுமைகளை சுமக்கின்றோம். ஆனால் அவைகள் எல்லாம் இயேசு விரும்பும் சிலுவைகளா? என்பதை தெரியாமல் சுமக்கின்றோம். 

கற்பனைச் சிலுவை
இவர்கள் நிஜத்தை விட நிழலை நேசிப்பவர்கள். எதார்த்தத்தை விரும்பாமல், கற்பனையில் கோட்டை கட்டி கஸ்டப்படுபவர்கள். துன்பப்படும் மனிதனைப் பார்த்து துயரம் கொள்வார்கள், அந்த துயரத்தை மனதளவில் நிறுத்தி “அந்தோ, அய்யோ பாவம்” என்று கற்பனையிலே சிலுவையை சுமந்து கொள்வார்கள். நல்ல சமாரியனின், லேவியராக, குருவாக அடிப்பட்டவரை, அல்லல் படுவோரை, அநீதியைப் பார்த்து கற்பனையிலே சிலுவை சுமந்து கொண்டு சென்றுவிடுவார்கள். 

காற்றுச் சிலுவை
“கடவுளே உனக்கு கண் இல்லையா, காது இல்லையா?” என்று தானே உருவாக்கி கொள்ளும் சிலுவைக்கு கடவுளை பழித்துரைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் வானுயர கட்டிடம் கட்டுவார்கள், பூமிக்கு அடியில் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள், தன் சொந்தம் வளர வேண்டும் என்று தன் உறவிலே பிள்ளைக்கு திருமணம் செய்வார்கள். இப்படி போன்ற விதைகளை விதைத்துவிட்டு சுனாமி, பூகம்பம் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அறுவடை செய்வார்கள். இத்தகைய சிலுவைகளைத் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வார்கள். 

மரச்சிலுவை
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறுவார்கள். இதுதான் யேசு விரும்பிய மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைபடுத்தி வாழும் பணக்கார முதலைகளிடமும் போராடுபவர்கள். கொத்தடிமை, இலஞ்சம், ஊழல் வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள்…… போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து “ஐயோ பாவம்” என்று நினைத்து விடாமல் அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் மனித சிலுவையாக, நல்ல சமாரியனாக மாற்றம் அடைய முடியும். இதைத்தான் இயேசு “நீதியை நிலை நாட்ட வேட்கைக் கொண்டோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்” (மத் 5:6) என்றார். 

எனவே சாவுக்கு சாவுமணி அடித்துவிட்டு, துன்ப துயரங்களையும் இயேசுவின் போதனைகளையும் ஏற்று, துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி பிறருக்காய் படும் வேதனைகளை, துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் நம்மால் ஒரு இயேசுவை உருவாக்க முடியவில்லையே? உருவாக்குவோம், நாளைய வரலாறு நமது பெயரை வாழ்த்த வைப்போம்….
சிலுவை வழி…… ஓர் சுகமான வழி…..

சகோ. ஆரோக்கிய தாஸ்