நல்ல சமாரியன்


அன்பு இதயத்தில் சுரக்கப்பட வேண்டும்! சுரண்டப்பட கூடாது!  இவ்வுலகில் இரு வகையான அன்பு உண்டு.  1. இறையன்பு, 2. பிறரன்பு. கடவுள் நம்மீது கொண்ட அன்பு அல்லது நாம் அவர் மீது கொள்ளும் அன்பு இறையன்பு எனப்படும். நம் சகோதர சகோதரரிகளோடு கொள்ளும் அன்பு அல்லது அவர்கள் நம்மீது கொள்ளும் அன்பு பிறரன்பு எனப்படும்.
பிறரன்பில் குறைகள் ஏற்பட காரணம் என்ன? நம்மிடம் இருக்கும் சுயநலம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய நற்செய்தியில் ஒரு மனிதன் ஜெருசலேமிலிருந்து ஜெரிக்கோவுக்கு செல்கிறான் என வாசிக்க கேட்டோம். ஜெருசலேம் என்பது கடவுள் வாழக்கூடிய இடம். விவிலியத்தில் ஜெருசலேம் தேவாலயத்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் ஒளியின் இடமாக இருந்தது. ஜெரிக்கோ, பகைவர்கள் தங்கி வாழக் கூடிய இடமாக இருந்தது. பாவங்களை கட்டிக்கொண்டு, பிறரின் பொருட்களை கொள்ளையடித்து, சாபத்தை பெற்றவர்களாய் இருளில் வாழந்துக் கொண்டிருந்தனர். நற்செய்தியில் கூறப்பட்ட மனிதனோ ஒளிமிகுந்த ஜெருசலேத்மை விட்டு இருள் நிறைந்த ஜெரிக்கோவை நோக்கி செல்கிறான். பகைவர்களால் தாக்கப்பட்டு செல்வங்களை இழந்து குற்றுயிராய் விடப்படுகின்றான். “பழைய ஏற்பாட்டில் தொடக்க ஆகமத்தில் ஆதாம் ஏவாள் கடவுளின் பிரசன்னத்தில் வாழ்ந்து வந்தார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளையில் அவர்கள் ஒளியை விட்டு, எந்த மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னாரோ, அந்த இருளான பகுதியை நோக்கி சென்றார்கள். பாவம் என்னும் பாதள குழியில் விழுந்தனர். புதிய ஏற்பாட்டில் இந்த மனிதனும் அதே நிலைக்குதான் ஆளாகியிருக்கிறான். (அருளப்பர் 8: 34) பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை. (உரோமையர்) 

பாவத்தின் சம்பளம் மரணம்

முதலில் ஒரு குரு தற்செயலாய் செல்ல நேர்ந்தது. அடிப்பட்டுகிடந்தவனை காப்பாற்ற முன் வரவில்லை. காரணம் என்ன? யூதர்களின் சட்டப்படி குரு இறந்தவனையோ அல்லது நோயுற்றிருப்பவனையோ தொட்டால் அல்லது அவன் அருகில் சென்றால் அவர் 7 நாட்கள் கோயில் பணிகள் எதையும் செய்ய முடியாத வண்ணம் தீட்டு என்று ஒதுக்கி விடுவார்கள். எனவேதான் அவர் தன் வழியாய் போனார். இரண்டாவதாக ஒரு லேவியன் ஒருவன் வருகிறான். அவனும் உதவி செய்ய முன் வரவில்லை. ஏன்? நான் ஒரு வேளை அவனை காப்பாற்ற அருகில் செல்லும் போது கள்வர்கள் ஒளிந்திருந்து என்னையும் தாக்க முற்பட வாய்ப்புண்டு என்று யூகித்து பயத்துடன் ஒதுங்கி சென்றான். மூன்றாவதாக நல்ல சமாரியன் வருகிறார். அவனை பார்த்தவுடன் இரக்கம் கொண்டு, அருகில் வந்து அவனின் காயத்திற்கு கட்டுபோடுகிறார். (ஓசே 6:12) வாருங்கள் நாம் அவரிடம் செல்வோம். அவரே நம் காயங்களுக்கு கட்டுபோடுவார். 

ஆம் பாவத்தில் விழுந்து குற்றுயிராய் துடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர் மடியில் கிடத்தி பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். எண்ணெய் வார்த்து காயங்களை கட்டுவது, நம்மை மன்னித்து ஆவியாரின்  வல்லமையால் நிரப்புவதை குறிக்கின்றது. பிறகு அவனை ஒரு சாவடிக்கு கொண்டு சேர்க்கிறார். அந்த சாவடிதான் நம் கத்தோலிக்க தாய் திருச்சபை. இந்த திருச்சபையை நிறுவியவர் இயேசுக் கிறிஸ்து. அந்த நல்ல சமாரியனாகிய இயேசு அந்த சாவடிக்காரரிடம் இரண்டு தெனாரியத்தை கொடுக்கிறார். இரண்டு தெனாரியம் என்பது இயேசுவின் இரண்டு கட்டளைகளை குறிக்கிறார். (மாற்கு 12: 30-31) நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். எல்லாவற்றிகும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது, தன்னைதானே நேசிப்பது போல் பிறரையும் நேசிப்பது.

இங்கு யேசு இறையன்பையும் பிறரன்பையும் முன்வைக்கிறார். இயேசு ஜெபிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வுகளிலும், தந்தை இவரே என் அன்பார்ந்த மகன் இவரிடம் நான் பூரிப்படைகிறேன் என்று சொன்ன நிகழ்வுளிலுமிருந்து இயேசுவிடம் இருந்த இறையன்பு நமக்கு தெளிவாகிறது. இயேசு நோயாளர்கள், அடிமைகள், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்கும் புதுமைகள், அற்புதங்கள் செய்வதின் வழியாக அவரின் பிறரன்பு வெளிப்படுத்தபடுகின்றது. 

1அருளப்பர் 4:9 – தம் ஒரே பேரான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது. இறைவன் நம்மை அன்பு செய்கிறார். அவரை நாம் அன்பு செய்ய வேண்டும். ஏனெனில் புனித சின்னப்பர் கண்ணால் காணக்கூடிய சகோதர சகோதரியை அன்பு செய்யாதவன் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்யமுடியாது என்கிறார். எனவே அன்பு செய்வோம். அன்பில் வாழ்வோம். மகிழ்வில் திளைப்போம். அகற்கான அருளை வேண்டுவோம். 


திருத்தொண்டர் டோனி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக