சிறகை இழந்த பறவை சிறையிலிருந்து…


சொந்தங்கள் எனக்கு இல்லை – சில
பந்தங்களும் எனக்கு இல்லை – ஆனால்
பல நெஞ்சங்கள் மட்டும் என்னை
பலமாய் அன்பு செய்கின்றன – அவை
என்னை போல உறவை இழந்த சிட்டுக்கள்
உறவை மறந்த சிட்டுக்கள் - ஆனால்
அன்பை ஆழமாக அன்பு செய்பவர்கள் நாங்கள்….

சகோ. அருள் செபாஸ்டின்

அன்னை


நான் கருவாய் இருந்தேன்
கருப்பை ஆனாய்
உறங்க நினைத்தேன்
கட்டில் ஆனாய்
இசையை விரும்பினேன்
தாலாட்டு ஆனாய்
நடக்க முயற்சித்தேன்
நடைவண்டி ஆனாய்
நோய்வாய் பட்டிருந்தேன்
மருந்து ஆனாய்
இருட்டில் இருந்தேன்
ஒளி ஆனாய்
வெயிலில் காய்ந்தேன்
நிழல் ஆனாய்
மழையில் நனைந்தேன்
குடை ஆனாய்
சோற்றுடன் நிலவை ஊட்டி – உடல்
சேற்றைச் சேலையால் துடைத்து
பாலைவனச் சோலை ஆனாய்
உலகில் எல்லாம் ஆனாய்
என் உயிரினும் மேலானாய்
என்றும் அமிழ்தமானாய்….

சகோ.  ஜஸ்டின் பிரதீப்

மரியாள்


தந்தை இறைவனுக்கு
தயங்காமல், “ஆம்” என்று
தாயானார் இறைவன் இயேசுவுக்கு.

வார்த்தைகளால் வடிக்க இயலாது
விலைமதிப்பில்லா கற்பின் பெருமையை
தலைமகனைப் பெற்றதால்
கன்னிமை கறையா தாய் ‘மரியாள்.’

இறைவனால் எதுவும் இயலும் என்பதை
இதயத்தில் இருத்திய விசுவாசத் தாய்.
நாடி வருவோரை நலன்களால் நிரப்பி
நன்மைகளால் அரவணைக்கும் அடைக்கலத்தாய்
மன இருள், உடல் பிணி நீக்கி
மன வலிமை தரும் ஆரோக்கிய தாய்.
பாவ உலகை மீட்க,
மனிதன் மனமாற்றம் பெற,
மன்னவன் இயேசுவைத் தந்த மீட்பின் தாய்.
துன்புறுவோரின் துயர் நீக்கி
வாழ்வில் புது வசந்தம் தரும்
விண்ணகத் தாய் இவர் மறுமலர்ச்சியின் தாய்.

சகோ. அருள் செபாஸ்டின்.

உன் அயலானை அன்பு செய் - லூக் 10:27


ஒரு கவிஞனின் கதறல், 

என் மழலைப் பருவத்தில், என் தாய் என்னை அரவணைத்துக் கொண்டு “இவன் எனது பிள்ளை,” என்று சொல்லி அரவணைத்தாள். மழலை பருவம் முடித்து, பள்ளி பருவத்தில், என் அருகில் இருந்தவன், என்னை சுட்டி காட்டி, இவன் என் நண்பன் என்றான். 

கல்லூரியில் காலடி வைத்த நாள் முதல், இவன் எனது ஊரைச்சார்ந்தவன், மாவட்டத்தை சார்ந்தவன், ஜாதியை சார்ந்தவன், குலத்தை சார்ந்தவன், வழிமரபை சார்ந்தவன் என்று ஒவ்வொருவரும் என்னை கூறு போட்டுக் கொண்டார்கள். 

இவ்வாறு எங்கு பார்த்தாலும் நான், எனது, என்று சொல்லக்கூடிய சமுதாயத்திலிருந்து விரைந்து எழுந்து, தப்பி பிழைத்தவனாய் இறைவனடி அமர்ந்து “இறைவா, இனிமேல் நான் எங்கு செல்வேன்? என்று கேட்டேன். அதற்கு இறைவன், நீ மீண்டும் அவர்களிடமே சென்று, அவர்களை அன்பு செய்” என்றார்.

பிரியமான கிறிஸ்தவர்களே!

நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்கிறோம், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, “உன் முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரை அன்பு கூர்வாயாக, உன் மீது நீ அன்பு கூர்வது போல், உன் அயலான் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார். 

தந்தை இறைவனின் அன்பு எத்துனை உயர்ந்தது என்பதற்கு, பழைய ஏற்பாட்டை படிக்கின்ற போது, இஸ்ராயேல் மக்களை மீட்பதற்காக, அவர்களுடைய எதிரிகளை அடியோடு அழித்து விடுகின்றார். அவர்கள் மீது கொண்ட அளவிட முடியாத அன்பினால் அவர்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். புதிய ஏற்பாட்டிற்கு வருகின்ற போது, தந்தை இறைவன், அன்பின் பரிசாய் தன் மகனையே பலியாய் கொடுத்தார். 

பிரியமானவர்களே! 
“அன்பு” என்ற வார்த்தை இன்றைய நவீன உலகில் உருகுலைந்து அதன் உட்பொருளை உணர முடியாத நிலையில் உள்ளது. அதன் உட்பொருள்தான் என்ன என்று ஆராய்வகற்காய், அடுக்கடுக்காய் அகராதிகளை புரட்டினேன், அவையெல்லாம் உண்மையான அர்த்தத்தை கொடுப்பவையாக இல்லை. படிப்பறிவு (அதாவது புத்தகங்களில் இருந்து அறிவை வளர்த்துக்கொள்வது) பட்டறிவு (தனது சொந்த அனுபவங்களில் இருந்து அறிவை வளர்த்துக் கொள்வது) என்று இருவகை உண்டு. அவற்றுள் எனது பட்டறவின்படி, “அன்பு என்பது, தன்னை மறந்து பிறருக்காய் தன்னையே இழப்பது.” 
ஆம், நாம் நம்மை மறந்து, பிறருக்காய் வாழ்பவர்களாக, பிறரை, நான், எனது இனம், மொழி, ஜாதி, குலம் இவற்றையெல்லாம் கடந்து அன்பு செய்பவர்களாக இருக்கின்ற போது, நாம் உண்மையான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழ்கின்றோம். 

நமக்கெல்லாம் தெரியும், “மகாத்மா காந்தியடிகள் வக்கீல் படிப்பு முடித்து மாதம் ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர். இருப்பினும் அவற்றையெல்லாம் துறந்து, நாட்டு மக்களுக்காக போராட முன்வந்தார். ஒரு முறை சுதந்தர போராட்டத்தின் போது, தன் மனைவியிடம் இருந்த நகைகளை விற்பதற்காக கேட்டார். அவரது மனைவி தமக்கு கல்யாண வயதில் பிள்ளைகள் இருப்பதை அறிந்தவராய் அந்த நகைகளை தர மறுத்து விடுகின்றார். பின்னர் காந்தியடிகள், தனது குழந்தைகளை அழைத்து, அப்போதைய அவசிய தேவை என்ன என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் வழியாகவே மனைவியிடமிருந்து நகைகளை பெற்று, அதனை விற்று தன்னோடு பணியாற்றியோர்க்கு செலவு செய்ததாக ஆசிரியர் குறிப்பிடுக்கின்றார். அதே ஆசிரியர் காந்தியடிகளை பற்றி பின்வருமாறு கூறுகின்றார், “He is a man who walked in the way of self – denial.”

அன்று காந்தியடிகள் மட்டும் எனக்கு என்னுடைய பதவி முக்கியம், எனது பிள்ளைகள், மனைவிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால், இன்றுவரை நமது நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்திருக்க கூடும். ஆனால் அவர், தன்னை மறந்து, நமது நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்ததால்தான், தன் ஆடையை கூட இழந்து நிற்கின்றார் கல்வாரியில் நின்ற இயேசுவை போல.
அன்னை தெரசாவை பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றோம். அன்று அன்னை தெரசா, அவரை பற்றி நினைத்திருந்தால் தனது துறவற வாழ்க்கை, துறவற சபை, சபையின் பள்ளிக்கூடம் என இவற்றோடு அவரது வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் இவர் தன்னை பற்றியோ, உலகம் பேசும் வசைமொழிகளை பற்றியோ கவலைபடாமல், பிறர் மீது கொண்ட தெய்வீக அன்பால் பணியாற்றி நம் அனைவருக்கும் அன்னையாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கின்றார். 

ஆம், நம்முடைய அக கண்களை சற்று நமது அயலானின் மீது செலுத்துவோம். மற்றவர்கள் வறுமையில் வாடும் போது, நம்மோடு இருப்பதில் கொஞ்சம் பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். அடுத்திருப்பவர் வேதனையில் வாடும்போது, நமது நேரத்தை கருதாமல், ஆறுதலான வார்த்தைகளால் தேற்றுவோம். நாள் முழுதும் தனிமையில் வாடி, தன்னை மறந்து வாழும் முதிர்ந்த பெற்றோர்களுடன் எத்துனை நேரத்தை செலவழிக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறுதியாக எங்கேயோ படித்த இருவரிகள்
Forget yourself for others and others will never forget you” – பிறருக்காக உன்னை மறக்கின்றபோது, அவர்கள் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை.” ஆமென்.

சகோ. சின்னப்பன் - மெய்யியல்

மன்னிப்பு


மன்னிக்கும் மனமே இறைவன் வாழும் இல்லிடம்
இறை இயேசுகிறிஸ்துவின் விலையேற பெற்ற இரத்ததால் விடுதலை பெற்றுள்ள என் இனிய இறை சகோதரமே!

கணிணியின் கண்ணாடி திரையில் கரைந்து போய் கொண்டிருக்கிறது மானுடம். எப்பக்கம் நோக்கினும் போட்டி, பொறாமை, சுயநலம், வெறுமை, வெறுப்பு….. இத்தகைய சூழலில் இன்றைய வார்த்தை வழிபாடானது “மன்னிப்பு” என்னும் மலரை தாங்கி வருகிறது.

மன்னிப்பு என்ன ஒரு அருமையான வார்த்தை….
உச்சரிக்கும்போதே உணர்ச்சிகள் சிலிர்த்தெழுகின்றன
உணர்கின்றபோது உறவுகள் உயிர்த்தெழுகின்றன
உணர்த்தும்போதோ உண்மைகள் விழித்தெழுகின்றன. 
ஆம், இத்தகைய ஒரு இனிமையான இறை செயலை குறித்து சிந்திக்க, செயலாற்ற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனதோடு மனம் பேசிய காலம் போய் அறிவின் அந்தரங்கத்திலே ஆராய்ந்து பார்த்து வாழ பழகி விட்டோம். ஆனால் இன்று இறைவன் நம்மை பார்த்து “மனிதனே நீ அறிவோடு ஆராய்ந்தது போதும், இதயத்திற்குள் இறங்கி வா. இந்த மனுகுலமானது மண்ணில் ஆண்டுகள் ஆயிரம் வாழ வேண்டுமா? மன்னிக்க கற்றுக் கொள்!” என்று அழைப்புவிடுக்கிறார். 

“வம்பு சண்டைக்கு போக மாட்டேன், வந்த சண்டையை விடமாட்டேன்” என்ற பழமொழியை நாம் கேட்டதுண்டு. நான் நல்லவன். யாருக்கும் எந்த தீங்கும் மனதால் கூட செய்ததில்லை. பிறகு, ஏன் எனக்கு தீங்கிழைப்பவனை, எனக்கு இடையூறு செய்பவனை நான் ஏன் மன்னிக்க வேண்டும்? என்பதே நமது வாதம். ஆனால் இன்று வாசிக்க கேட்ட அனைத்து வாசகங்களும் நாம் ஏன் மன்னிக்க வேண்டும்? எதற்க்காக மன்னிக்க வேண்டும்? யாரை மன்னிக்க வேண்டும்? எப்படி மன்னிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. 

1. ஏன் அல்லது எதற்காக மன்னிக்க வேண்டும்?
  • ஏனெனில் நாம் அனைவரும் இறைசாயலில் படைக்கப் பட்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் அனைவரும் இறைமக்களாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். அயலாரில் ஆண்டவரை காண்கின்ற போது நம் குறை, நிறைகளை மன்னிப்பது நம் கடைமையல்லவா? 
  • மன்னிப்பதென்பது இறைவனின் இன்றியமையாத குணமாகும். தனக்கென ஒரு மக்களினத்தை தேர்ந்து, அவர்களை தனதாக்கி கொண்ட இறைவன், அவர்கள் வேற்று தெய்வங்களை நாடிச்செல்கையில் அவர்களை அழித்துவிட எண்ணுகிறார் ஆண்டவர். ஆனால் மோயிசனோ அம்மக்களுக்காக பரிந்து பேசுகிறார். எனவே இறைவன் அவர்களை மன்னித்து ஏற்று கொள்கிறார் என்று இன்றைய முதல் வாசகத்திலே வாசிக்க கேட்டோம். அந்த இறை சாயலை பெற்றுள்ள நாம் அவரின் குணநலன்களை கடைபிடிப்பது கட்டாயமல்லவா?
  • மன்னிப்பு நம்மில் மகிழ்ச்சியை கொணர்ந்து உடைந்து, உருகுலைந்து போன உள்ளங்களை உருபெற செய்கிறது. கனமான இதயங்கள் கனிவுற்று காயங்கள் குணபடுத்தப்படுகின்றன. உருவிழந்து, உணர்விழந்து வரும் ஊதாரி மைந்தனை, ஓடோடிச் சென்று, அள்ளி அரவணைத்து முத்த மழை பொழிகையில் அந்த தந்தையின் அன்பு மட்டுமல்ல அங்கே அவரின் மன்னிப்பும் வெளிப்படுகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். கனமான இதயங்கள் இடம்மாறி அங்கே மகிழ்ச்சி மனங்களில் குடிக்கொள்ளச் செய்கிறது. 
  • ஆக மன்னிப்பதில் நமது கடமையும், கட்டாயமும் மட்டுமல்ல, நமது உடல் உள்ள நலமும் அடங்கியிருக்கிறதென்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

2. யாரை நாம் மன்னிக்க வேண்டும்?
  • பல நேரங்களில் நம்மையறியாமலேயே சில, தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. எனவே தன்னை அறியாமல் நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய பவுல் அடிகளார் தன்னைப் பற்றி கூறுகையில், தான் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் என்று கூறுகிறார். ஏனெனில் தான் இயேசுவை பழித்துரைத்து, இழிவு படுத்தி, துன்புறுத்தியதாக கூறுகிறார். இருப்பினும் தான் அறியாமையில் அவ்வாறு செய்ததால், பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளவந்த இயேசு பாவிகளுள் முதல் பாவியாகிய தன்னை ஏற்றுக் கொண்டார் என்று தெளிவாக இன்றைய இரண்டாம் வாசகத்திலே கூறுகின்றார். 
  • தன் தவறை உணர்ந்து உண்மையாக மனம் வருந்தும் யாரும் மன்னிப்பை பெறும் உரிமை பெற்றுள்ளனர். ஏனெனில் இறைவன் தன் தவறுகளுக்காக மனம் வருந்தும் உள்ளத்தைத்தான் எதிர்பார்கிறார். நமக்கெல்லாம் 1980 களில் பிரபலமாக பேசப்பட்ட திரு ஆட்டோ சங்கரைப் பற்றி தெரியும். ஆனால் அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்த பின், இந்த சமுதாயம் மனம்திருந்திய அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எங்குசென்றாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. யாரும் அவரை நம்ப வில்லை. “மனம் திருந்திய என்னை இந்த சமுதாயம் மனிதானாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்று அவரே தன் நிலையைப் பற்றி கூறுகிறார். 

3. எப்படி மன்னிக்க வேண்டும்?
  • தன்னை விட்டு விலகிச் சென்ற தன் மக்களை மன்னிப்பதில் தன் சட்டத்திட்டங்களையெல்லாம் ஒரு பொருட்டாக ஆண்டவர் எண்ணவில்லை என்று எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார். எனவே மற்றவரை மன்னிப்பதில் ஏற்படுகின்ற துன்ப துயரங்களை ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பல நேரங்களில் நம்மோடு மனத்தாங்கலாய் இருக்கும் நபரின் முகமே அவர் நம்மிடம் மன்னிப்பை எதிர்பார்கிறார் என்று தெரிவித்து விடும். மற்றவர்கள் யாரும் தன் மகனை ஏதும் சொல்லி விட கூடாது என்றுதானே ஊதாரி மைந்தனின் தந்தை அவன் தூர வரும் போதே ஓடிச் சென்று அவனை அள்ளி அரவணைத்துக் கொள்கிறார். எனவே மற்றவர்கள் ஏளனமாக பார்ப்பதற்கு முன்பே நம் மன்னிப்பை அவர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது. 
  • அதுமட்டுமல்லாமல், ஏழு முறையல்ல எழுபது தடவை ஏழு முறை என்று (மத். 18:21) வாசிப்பது போல் நாம் செயல் பட வேண்டும். 
ஆதி. 33:10 நாம் வாசிக்கின்றோம், “மன்னிப்போரின் முகம் கடவுளின் முகம் போன்றது.” தன்னை ஏமாற்றி தனக்குறிய ஆசிரை தந்தையிடமிருந்து பறித்துக்கொண்ட யாக்கோபை, ஏசா முன்வந்து மன்னிக்கிறார். அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. உறவுகள் புதுபிக்கப்படுகின்றன.
ஆக, மன்னிப்பதில் ஏற்படுகின்ற சிறு சிறு வருந்தங்களை ஏற்றுக் கொண்டால், அங்கே அளவில்லாத மகிழ்ச்சி பிறக்கும். மன்னிப்பின் இறைவன் வழி வாழ முற்படுகின்ற நாமும் அவரை பின்பற்ற வேண்டாமா? கர்த்தர் கற்பித்த ஜெபத்திலே நாம் தினமும் ஜெபிக்கிறோம், “எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல் எங்களையும் மன்னியும்,” என்று ஆனால் அதன்படி வாழ முற்படுகின்றோமா?

ஆம், என் அன்புகுறிய இறை சகோதரமே!
நம் ஜெபங்கள் வாழ்வாகாவிடில் அதனால் வரும் பயனென்ன? இத்தகைய மன நிலையில்தான் அந்த மூத்த சகோரனும் இருந்தான். தந்தைக்கு கீழ்படிதலுள்ளவனாய் இருந்தாலும், மனம் வருந்தி வீடுவரும் இளைய மகனை தானும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டானா? இல்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மனம்வருந்தி வீடு வரும் தன் சகோதரனை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறான். அதுமட்டுமல்லாது, கண்டும் காணாதது போன்ற மனநிலையை வெளிபடுத்துகிறான். இது இன்னும் கொடுமையானது. 

இத்தகைய மனநிலையை நாம் தினமும் அனுபவிக்கிறோம். தவறு செய்த கணவனை ஏற்றுக் கொள்ளாத மனைவி, மனவருந்தும் மனைவியை கண்டுகொள்ளாத கணவன், தன்னை கைவிட்டு விட்ட பிள்ளைகளை கறித்துக் கொட்டும் பெற்றோர், என்னை ஓரங்கட்டும் உடன் பணியாளன் - என எத்தனையோ உருவங்களில் இந்த மூத்த மகன் உலாவருகிறான். இதற்கெல்லாம் காரணம் தான்தான் சரி என்று தன்னல வட்டத்திலே வாழ்வதுதான். 

இதோ இன்னும் சிறிது நேரத்தில் நற்கருணை வடிவில் வர இருக்கின்ற இயேசு நம்மை பார்த்து கேட்கிறார். “மகனே! மகளே! நீ என்னை ஏற்றுக்கொள். நான் உன்னில் வரும்போது நீ நானாகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் உன் பகைவரும் நானாகின்றனர். அவர்களில் நீ என்னை ஏன் காண மறுக்கிறாய்? 
இறைவன் விடுக்கும் இந்த வினாவிற்கு நமது பதில் என்ன?

சகோ. போஸ்கோ

நம்பிக்கையே நல்லது


இன்று நீ பார்ப்பவர்கள் எல்லாம்
உன்னை ஏமாற்றலாம்!
நாளை
உன்னை ஏமாற்றியவர்கள் எல்லாம்
உன்னை எதிர்பார்க்கலாம்
இன்று
நீ இரைப்பதெல்லாம்
உளறல்கள் ஆகலாம்
ஒரு நாள்
உன் உளறல் கூட
தலைப்புச் செய்தியாகும்
இளைஞனே
எப்போதும் நம்பிக்கையே நல்லது
காத்திரு தோழா!
காலம் வெல்லும்!


சகோ. செபஸ்தியான்

பகிர்வு


உருப்படைத்து, உயிர்க்கொடுத்து நம்மை இம்மண்ணிலே உலவவிட்ட இறைவன், நம்மீது கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, மீட்பளித்து, தம் உண்மையான அன்பினை எண்பித்ததோடு நாம் எத்தகைய பகிர்வு வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறார். உறவுகள் மேன்மையடைய பகிர்தல் அவசியம். நம் உற்றத்துணையான இயேசுவை உற்று நோக்குகின்ற போது அவர் எத்தகைய பகிர்வு வாழ்வை மேற்கொண்டார் என்பதை நம்மால் நன்குணர முடியும். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதே தன் உணவாகக் கொண்டிருந்த இயேசு தன்னையே பிறரின் வாழ்விற்காய் அர்ப்பணித்தார். அத்தகைய அர்ப்பண வாழ்வை சிறப்புடன் ஆற்றக் காரணம் தன்னையே மறுத்து, பிறருக்காய் உயர் நோக்கில் வாழ்ந்ததே அவரின் சிறப்பு. நிறைவான மகிழ்ச்சியை நம்மால் எப்போது எய்த இயலும் தெரியுமா? பிறருக்காய் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து வாழ்கிறபோது மட்டுமே இத்துணை இனிமையளிக்கும், அர்த்தமுள்ள வாழ்வினை வாழ்ந்திடும்போதுதான் பரமனின் பரிசுத்த அன்பை சுவைத்தவர்கள் என்ற நற்பேறு பெறுவோம். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தார். (மத் 14:17-21) இப்புதுமை இயேசு கிறிஸ்துவின் பகிர்விற்கு நற்சான்றாய் விளங்குகின்றது.

வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நாமே சுவையாக மாற்றிக்கொள்ள முடியுமா? எப்படி? காயப்பட்ட இதயங்களைக் குணப்படுத்தும் போது! கறைபடிந்த ஆன்மாக்களை தூய்மையாக்கும்போது! வேதனையுறும் உள்ளங்களைத் தேற்றும் போது! சுமையாக இருக்கும் வாழ்க்கை சுகமாய் மாறும். விண்ணையும் மண்ணையும் இணைப்பதற்காக, விண்ணினின்று வந்தார் இயேசுகிறிஸ்து. சிதறிப்போன ஆடுகளை ஒன்றுபடுத்தவே, புத்துயிர் அளிக்கும் ஆவியாரால் பிறரோடு பகிர்ந்து வாழவே எம்பெருமான் மண்ணிற்கு வந்தார். இதன் பயனாகத்தான் குருடரும் செவிடரும் நலம் பெற்றனர். 

 “மனித வாழ்வு மாண்புற, குடும்ப வாழ்வு இன்புற,
சமூக வாழ்வு நலம்பெற, ஆன்ம வாழ்வு வளம்பெற
பகிர்வு வாழ்வு வாழும் பொழுதே, தொடர்பயணம், புனித பயணமாகும்…..
பயணிக்கப் புறப்படுவோம், பகிர்ந்து வாழ முற்படுவோம்!”

சகோ. சதீஸ் ஏசுதாஸ்