பகிர்வு


உருப்படைத்து, உயிர்க்கொடுத்து நம்மை இம்மண்ணிலே உலவவிட்ட இறைவன், நம்மீது கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, மீட்பளித்து, தம் உண்மையான அன்பினை எண்பித்ததோடு நாம் எத்தகைய பகிர்வு வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறார். உறவுகள் மேன்மையடைய பகிர்தல் அவசியம். நம் உற்றத்துணையான இயேசுவை உற்று நோக்குகின்ற போது அவர் எத்தகைய பகிர்வு வாழ்வை மேற்கொண்டார் என்பதை நம்மால் நன்குணர முடியும். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதே தன் உணவாகக் கொண்டிருந்த இயேசு தன்னையே பிறரின் வாழ்விற்காய் அர்ப்பணித்தார். அத்தகைய அர்ப்பண வாழ்வை சிறப்புடன் ஆற்றக் காரணம் தன்னையே மறுத்து, பிறருக்காய் உயர் நோக்கில் வாழ்ந்ததே அவரின் சிறப்பு. நிறைவான மகிழ்ச்சியை நம்மால் எப்போது எய்த இயலும் தெரியுமா? பிறருக்காய் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து வாழ்கிறபோது மட்டுமே இத்துணை இனிமையளிக்கும், அர்த்தமுள்ள வாழ்வினை வாழ்ந்திடும்போதுதான் பரமனின் பரிசுத்த அன்பை சுவைத்தவர்கள் என்ற நற்பேறு பெறுவோம். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தார். (மத் 14:17-21) இப்புதுமை இயேசு கிறிஸ்துவின் பகிர்விற்கு நற்சான்றாய் விளங்குகின்றது.

வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நாமே சுவையாக மாற்றிக்கொள்ள முடியுமா? எப்படி? காயப்பட்ட இதயங்களைக் குணப்படுத்தும் போது! கறைபடிந்த ஆன்மாக்களை தூய்மையாக்கும்போது! வேதனையுறும் உள்ளங்களைத் தேற்றும் போது! சுமையாக இருக்கும் வாழ்க்கை சுகமாய் மாறும். விண்ணையும் மண்ணையும் இணைப்பதற்காக, விண்ணினின்று வந்தார் இயேசுகிறிஸ்து. சிதறிப்போன ஆடுகளை ஒன்றுபடுத்தவே, புத்துயிர் அளிக்கும் ஆவியாரால் பிறரோடு பகிர்ந்து வாழவே எம்பெருமான் மண்ணிற்கு வந்தார். இதன் பயனாகத்தான் குருடரும் செவிடரும் நலம் பெற்றனர். 

 “மனித வாழ்வு மாண்புற, குடும்ப வாழ்வு இன்புற,
சமூக வாழ்வு நலம்பெற, ஆன்ம வாழ்வு வளம்பெற
பகிர்வு வாழ்வு வாழும் பொழுதே, தொடர்பயணம், புனித பயணமாகும்…..
பயணிக்கப் புறப்படுவோம், பகிர்ந்து வாழ முற்படுவோம்!”

சகோ. சதீஸ் ஏசுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக