மன்னிப்பு
மன்னிக்கும் மனமே இறைவன் வாழும் இல்லிடம்
இறை இயேசுகிறிஸ்துவின் விலையேற பெற்ற இரத்ததால் விடுதலை பெற்றுள்ள என் இனிய இறை சகோதரமே!
கணிணியின் கண்ணாடி திரையில் கரைந்து போய் கொண்டிருக்கிறது மானுடம். எப்பக்கம் நோக்கினும் போட்டி, பொறாமை, சுயநலம், வெறுமை, வெறுப்பு….. இத்தகைய சூழலில் இன்றைய வார்த்தை வழிபாடானது “மன்னிப்பு” என்னும் மலரை தாங்கி வருகிறது.
மன்னிப்பு என்ன ஒரு அருமையான வார்த்தை….
உச்சரிக்கும்போதே உணர்ச்சிகள் சிலிர்த்தெழுகின்றன
உணர்கின்றபோது உறவுகள் உயிர்த்தெழுகின்றன
உணர்த்தும்போதோ உண்மைகள் விழித்தெழுகின்றன.
ஆம், இத்தகைய ஒரு இனிமையான இறை செயலை குறித்து சிந்திக்க, செயலாற்ற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. மனதோடு மனம் பேசிய காலம் போய் அறிவின் அந்தரங்கத்திலே ஆராய்ந்து பார்த்து வாழ பழகி விட்டோம். ஆனால் இன்று இறைவன் நம்மை பார்த்து “மனிதனே நீ அறிவோடு ஆராய்ந்தது போதும், இதயத்திற்குள் இறங்கி வா. இந்த மனுகுலமானது மண்ணில் ஆண்டுகள் ஆயிரம் வாழ வேண்டுமா? மன்னிக்க கற்றுக் கொள்!” என்று அழைப்புவிடுக்கிறார்.
“வம்பு சண்டைக்கு போக மாட்டேன், வந்த சண்டையை விடமாட்டேன்” என்ற பழமொழியை நாம் கேட்டதுண்டு. நான் நல்லவன். யாருக்கும் எந்த தீங்கும் மனதால் கூட செய்ததில்லை. பிறகு, ஏன் எனக்கு தீங்கிழைப்பவனை, எனக்கு இடையூறு செய்பவனை நான் ஏன் மன்னிக்க வேண்டும்? என்பதே நமது வாதம். ஆனால் இன்று வாசிக்க கேட்ட அனைத்து வாசகங்களும் நாம் ஏன் மன்னிக்க வேண்டும்? எதற்க்காக மன்னிக்க வேண்டும்? யாரை மன்னிக்க வேண்டும்? எப்படி மன்னிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.
1. ஏன் அல்லது எதற்காக மன்னிக்க வேண்டும்?
- ஏனெனில் நாம் அனைவரும் இறைசாயலில் படைக்கப் பட்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் அனைவரும் இறைமக்களாய் இணைக்கப்பட்டிருக்கிறோம். அயலாரில் ஆண்டவரை காண்கின்ற போது நம் குறை, நிறைகளை மன்னிப்பது நம் கடைமையல்லவா?
- மன்னிப்பதென்பது இறைவனின் இன்றியமையாத குணமாகும். தனக்கென ஒரு மக்களினத்தை தேர்ந்து, அவர்களை தனதாக்கி கொண்ட இறைவன், அவர்கள் வேற்று தெய்வங்களை நாடிச்செல்கையில் அவர்களை அழித்துவிட எண்ணுகிறார் ஆண்டவர். ஆனால் மோயிசனோ அம்மக்களுக்காக பரிந்து பேசுகிறார். எனவே இறைவன் அவர்களை மன்னித்து ஏற்று கொள்கிறார் என்று இன்றைய முதல் வாசகத்திலே வாசிக்க கேட்டோம். அந்த இறை சாயலை பெற்றுள்ள நாம் அவரின் குணநலன்களை கடைபிடிப்பது கட்டாயமல்லவா?
- மன்னிப்பு நம்மில் மகிழ்ச்சியை கொணர்ந்து உடைந்து, உருகுலைந்து போன உள்ளங்களை உருபெற செய்கிறது. கனமான இதயங்கள் கனிவுற்று காயங்கள் குணபடுத்தப்படுகின்றன. உருவிழந்து, உணர்விழந்து வரும் ஊதாரி மைந்தனை, ஓடோடிச் சென்று, அள்ளி அரவணைத்து முத்த மழை பொழிகையில் அந்த தந்தையின் அன்பு மட்டுமல்ல அங்கே அவரின் மன்னிப்பும் வெளிப்படுகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். கனமான இதயங்கள் இடம்மாறி அங்கே மகிழ்ச்சி மனங்களில் குடிக்கொள்ளச் செய்கிறது.
- ஆக மன்னிப்பதில் நமது கடமையும், கட்டாயமும் மட்டுமல்ல, நமது உடல் உள்ள நலமும் அடங்கியிருக்கிறதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
2. யாரை நாம் மன்னிக்க வேண்டும்?
- பல நேரங்களில் நம்மையறியாமலேயே சில, தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. எனவே தன்னை அறியாமல் நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தூய பவுல் அடிகளார் தன்னைப் பற்றி கூறுகையில், தான் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் என்று கூறுகிறார். ஏனெனில் தான் இயேசுவை பழித்துரைத்து, இழிவு படுத்தி, துன்புறுத்தியதாக கூறுகிறார். இருப்பினும் தான் அறியாமையில் அவ்வாறு செய்ததால், பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளவந்த இயேசு பாவிகளுள் முதல் பாவியாகிய தன்னை ஏற்றுக் கொண்டார் என்று தெளிவாக இன்றைய இரண்டாம் வாசகத்திலே கூறுகின்றார்.
- தன் தவறை உணர்ந்து உண்மையாக மனம் வருந்தும் யாரும் மன்னிப்பை பெறும் உரிமை பெற்றுள்ளனர். ஏனெனில் இறைவன் தன் தவறுகளுக்காக மனம் வருந்தும் உள்ளத்தைத்தான் எதிர்பார்கிறார். நமக்கெல்லாம் 1980 களில் பிரபலமாக பேசப்பட்ட திரு ஆட்டோ சங்கரைப் பற்றி தெரியும். ஆனால் அவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்த பின், இந்த சமுதாயம் மனம்திருந்திய அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. எங்குசென்றாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. யாரும் அவரை நம்ப வில்லை. “மனம் திருந்திய என்னை இந்த சமுதாயம் மனிதானாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்று அவரே தன் நிலையைப் பற்றி கூறுகிறார்.
3. எப்படி மன்னிக்க வேண்டும்?
- தன்னை விட்டு விலகிச் சென்ற தன் மக்களை மன்னிப்பதில் தன் சட்டத்திட்டங்களையெல்லாம் ஒரு பொருட்டாக ஆண்டவர் எண்ணவில்லை என்று எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார். எனவே மற்றவரை மன்னிப்பதில் ஏற்படுகின்ற துன்ப துயரங்களை ஏற்று கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பல நேரங்களில் நம்மோடு மனத்தாங்கலாய் இருக்கும் நபரின் முகமே அவர் நம்மிடம் மன்னிப்பை எதிர்பார்கிறார் என்று தெரிவித்து விடும். மற்றவர்கள் யாரும் தன் மகனை ஏதும் சொல்லி விட கூடாது என்றுதானே ஊதாரி மைந்தனின் தந்தை அவன் தூர வரும் போதே ஓடிச் சென்று அவனை அள்ளி அரவணைத்துக் கொள்கிறார். எனவே மற்றவர்கள் ஏளனமாக பார்ப்பதற்கு முன்பே நம் மன்னிப்பை அவர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
- அதுமட்டுமல்லாமல், ஏழு முறையல்ல எழுபது தடவை ஏழு முறை என்று (மத். 18:21) வாசிப்பது போல் நாம் செயல் பட வேண்டும்.
ஆக, மன்னிப்பதில் ஏற்படுகின்ற சிறு சிறு வருந்தங்களை ஏற்றுக் கொண்டால், அங்கே அளவில்லாத மகிழ்ச்சி பிறக்கும். மன்னிப்பின் இறைவன் வழி வாழ முற்படுகின்ற நாமும் அவரை பின்பற்ற வேண்டாமா? கர்த்தர் கற்பித்த ஜெபத்திலே நாம் தினமும் ஜெபிக்கிறோம், “எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல் எங்களையும் மன்னியும்,” என்று ஆனால் அதன்படி வாழ முற்படுகின்றோமா?
ஆம், என் அன்புகுறிய இறை சகோதரமே!
நம் ஜெபங்கள் வாழ்வாகாவிடில் அதனால் வரும் பயனென்ன? இத்தகைய மன நிலையில்தான் அந்த மூத்த சகோரனும் இருந்தான். தந்தைக்கு கீழ்படிதலுள்ளவனாய் இருந்தாலும், மனம் வருந்தி வீடுவரும் இளைய மகனை தானும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டானா? இல்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மனம்வருந்தி வீடு வரும் தன் சகோதரனை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறான். அதுமட்டுமல்லாது, கண்டும் காணாதது போன்ற மனநிலையை வெளிபடுத்துகிறான். இது இன்னும் கொடுமையானது.
இத்தகைய மனநிலையை நாம் தினமும் அனுபவிக்கிறோம். தவறு செய்த கணவனை ஏற்றுக் கொள்ளாத மனைவி, மனவருந்தும் மனைவியை கண்டுகொள்ளாத கணவன், தன்னை கைவிட்டு விட்ட பிள்ளைகளை கறித்துக் கொட்டும் பெற்றோர், என்னை ஓரங்கட்டும் உடன் பணியாளன் - என எத்தனையோ உருவங்களில் இந்த மூத்த மகன் உலாவருகிறான். இதற்கெல்லாம் காரணம் தான்தான் சரி என்று தன்னல வட்டத்திலே வாழ்வதுதான்.
இதோ இன்னும் சிறிது நேரத்தில் நற்கருணை வடிவில் வர இருக்கின்ற இயேசு நம்மை பார்த்து கேட்கிறார். “மகனே! மகளே! நீ என்னை ஏற்றுக்கொள். நான் உன்னில் வரும்போது நீ நானாகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் உன் பகைவரும் நானாகின்றனர். அவர்களில் நீ என்னை ஏன் காண மறுக்கிறாய்?
இறைவன் விடுக்கும் இந்த வினாவிற்கு நமது பதில் என்ன?
சகோ. போஸ்கோ
A wonderful idea about Forgiveness from the scripture. May the light of forgiveness and love spread all over the world.
பதிலளிநீக்குSuper messege very usefull God bless you
பதிலளிநீக்கு