ஒரு கவிஞனின் கதறல்,
என் மழலைப் பருவத்தில், என் தாய் என்னை அரவணைத்துக் கொண்டு “இவன் எனது பிள்ளை,” என்று சொல்லி அரவணைத்தாள். மழலை பருவம் முடித்து, பள்ளி பருவத்தில், என் அருகில் இருந்தவன், என்னை சுட்டி காட்டி, இவன் என் நண்பன் என்றான்.
கல்லூரியில் காலடி வைத்த நாள் முதல், இவன் எனது ஊரைச்சார்ந்தவன், மாவட்டத்தை சார்ந்தவன், ஜாதியை சார்ந்தவன், குலத்தை சார்ந்தவன், வழிமரபை சார்ந்தவன் என்று ஒவ்வொருவரும் என்னை கூறு போட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறு எங்கு பார்த்தாலும் நான், எனது, என்று சொல்லக்கூடிய சமுதாயத்திலிருந்து விரைந்து எழுந்து, தப்பி பிழைத்தவனாய் இறைவனடி அமர்ந்து “இறைவா, இனிமேல் நான் எங்கு செல்வேன்? என்று கேட்டேன். அதற்கு இறைவன், நீ மீண்டும் அவர்களிடமே சென்று, அவர்களை அன்பு செய்” என்றார்.
பிரியமான கிறிஸ்தவர்களே!
நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்கிறோம், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, “உன் முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரை அன்பு கூர்வாயாக, உன் மீது நீ அன்பு கூர்வது போல், உன் அயலான் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார்.
தந்தை இறைவனின் அன்பு எத்துனை உயர்ந்தது என்பதற்கு, பழைய ஏற்பாட்டை படிக்கின்ற போது, இஸ்ராயேல் மக்களை மீட்பதற்காக, அவர்களுடைய எதிரிகளை அடியோடு அழித்து விடுகின்றார். அவர்கள் மீது கொண்ட அளவிட முடியாத அன்பினால் அவர்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். புதிய ஏற்பாட்டிற்கு வருகின்ற போது, தந்தை இறைவன், அன்பின் பரிசாய் தன் மகனையே பலியாய் கொடுத்தார்.
பிரியமானவர்களே!
“அன்பு” என்ற வார்த்தை இன்றைய நவீன உலகில் உருகுலைந்து அதன் உட்பொருளை உணர முடியாத நிலையில் உள்ளது. அதன் உட்பொருள்தான் என்ன என்று ஆராய்வகற்காய், அடுக்கடுக்காய் அகராதிகளை புரட்டினேன், அவையெல்லாம் உண்மையான அர்த்தத்தை கொடுப்பவையாக இல்லை. படிப்பறிவு (அதாவது புத்தகங்களில் இருந்து அறிவை வளர்த்துக்கொள்வது) பட்டறிவு (தனது சொந்த அனுபவங்களில் இருந்து அறிவை வளர்த்துக் கொள்வது) என்று இருவகை உண்டு. அவற்றுள் எனது பட்டறவின்படி, “அன்பு என்பது, தன்னை மறந்து பிறருக்காய் தன்னையே இழப்பது.”
ஆம், நாம் நம்மை மறந்து, பிறருக்காய் வாழ்பவர்களாக, பிறரை, நான், எனது இனம், மொழி, ஜாதி, குலம் இவற்றையெல்லாம் கடந்து அன்பு செய்பவர்களாக இருக்கின்ற போது, நாம் உண்மையான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழ்கின்றோம்.
நமக்கெல்லாம் தெரியும், “மகாத்மா காந்தியடிகள் வக்கீல் படிப்பு முடித்து மாதம் ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர். இருப்பினும் அவற்றையெல்லாம் துறந்து, நாட்டு மக்களுக்காக போராட முன்வந்தார். ஒரு முறை சுதந்தர போராட்டத்தின் போது, தன் மனைவியிடம் இருந்த நகைகளை விற்பதற்காக கேட்டார். அவரது மனைவி தமக்கு கல்யாண வயதில் பிள்ளைகள் இருப்பதை அறிந்தவராய் அந்த நகைகளை தர மறுத்து விடுகின்றார். பின்னர் காந்தியடிகள், தனது குழந்தைகளை அழைத்து, அப்போதைய அவசிய தேவை என்ன என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் வழியாகவே மனைவியிடமிருந்து நகைகளை பெற்று, அதனை விற்று தன்னோடு பணியாற்றியோர்க்கு செலவு செய்ததாக ஆசிரியர் குறிப்பிடுக்கின்றார். அதே ஆசிரியர் காந்தியடிகளை பற்றி பின்வருமாறு கூறுகின்றார், “He is a man who walked in the way of self – denial.”
அன்று காந்தியடிகள் மட்டும் எனக்கு என்னுடைய பதவி முக்கியம், எனது பிள்ளைகள், மனைவிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால், இன்றுவரை நமது நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்திருக்க கூடும். ஆனால் அவர், தன்னை மறந்து, நமது நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்ததால்தான், தன் ஆடையை கூட இழந்து நிற்கின்றார் கல்வாரியில் நின்ற இயேசுவை போல.
அன்னை தெரசாவை பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றோம். அன்று அன்னை தெரசா, அவரை பற்றி நினைத்திருந்தால் தனது துறவற வாழ்க்கை, துறவற சபை, சபையின் பள்ளிக்கூடம் என இவற்றோடு அவரது வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் இவர் தன்னை பற்றியோ, உலகம் பேசும் வசைமொழிகளை பற்றியோ கவலைபடாமல், பிறர் மீது கொண்ட தெய்வீக அன்பால் பணியாற்றி நம் அனைவருக்கும் அன்னையாகவும், முன்மாதிரியாகவும் திகழ்கின்றார்.
ஆம், நம்முடைய அக கண்களை சற்று நமது அயலானின் மீது செலுத்துவோம். மற்றவர்கள் வறுமையில் வாடும் போது, நம்மோடு இருப்பதில் கொஞ்சம் பிறரோடு பகிர்ந்து வாழ்வோம். அடுத்திருப்பவர் வேதனையில் வாடும்போது, நமது நேரத்தை கருதாமல், ஆறுதலான வார்த்தைகளால் தேற்றுவோம். நாள் முழுதும் தனிமையில் வாடி, தன்னை மறந்து வாழும் முதிர்ந்த பெற்றோர்களுடன் எத்துனை நேரத்தை செலவழிக்கிறோம் என்று சிந்திப்போம்.
இறுதியாக எங்கேயோ படித்த இருவரிகள்
“Forget yourself for others and others will never forget you” – பிறருக்காக உன்னை மறக்கின்றபோது, அவர்கள் ஒருபோதும் உன்னை மறப்பதில்லை.” ஆமென்.
சகோ. சின்னப்பன் - மெய்யியல்