இறப்பு
பிறப்பு என்பது இறப்பின் ஆரம்பம்
இறப்பு இந்த வார்த்தை நம் காதுகளுக்கு எட்டியவுடனே ஏற்படும் பய உணர்வு இருக்கிறதல்லவா அது இரத்ததினூடே நாடி நரம்புகளில் பாய்ந்து, மூளையைத் தாக்கும் ஒரு கொடிய வி~மாக மாறுகிறது. காரணம் இறப்பு வந்து விட்டது என்ற எண்ணத்தினாலேயே தங்களுடைய வாழ்நாளை, பாதியிலேயே முடித்துக் கொள்ளும் மக்கள் கூட்டம் ஏராளம்! ஏராளம்! மாறாக இறப்பு என்பது பிறப்பைப் போலவே நம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்று என்பதை மானுடத்திற்கு அறியச் செய்வோம்.
இறப்பு ஒரு கொடை
நம்மில் பலருக்கு இறப்பு என்பது ஒரு துக்கச் சடங்காகவே இன்றளவும் இருந்து வருகிறது காரணம், நாம் அதை ஒரு பேரிழப்பாக கருதுவதேயாகும். மாறாக இறப்பு என்பதை ஒரு கொடையாக கருதும் பொழுது நாம் நம் இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற உதவும் ஒரு கருவியாக இது அமைகிறது. எவ்வாறெனில் இறைமகன் இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பாவிகளாகிய நம்மை மீட்க இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற காரணமாயிருந்தது அவருடைய இறப்பு என்றால் அது மிகையல்ல. தன்னுடைய வாழ்நாளில் பாவம் அதிகமாக செய்பவர்களே இறப்பை பற்றிய அச்சம் கொள்ள வேண்டும். ஏனெனில் இறப்பிற்குப் பிறகு தாம் செல்லப்போகும் மறுஉலக வாழ்வைப் பற்றிய அச்சம் நம்மில் பலருக்கு எழுகின்றது. இத்தகைய உணர்வோடு வாழும் நாம் இறப்பை ஒரு கொடையாக கருதுகின்ற போது பாவம், நம்மை தூய்மைப்படுத்தி மறு உலக வாழ்வைப் பற்றிய அச்சத்தைப் போக்கவல்லது என்பதில் ஐயமில்லை.
புனிதர்கள் வாழ்வில் இறப்பு
புனிதர்களின் வரலாற்றை நாம் சற்று அலசி ஆராயும் பொழுது இத்தகைய இறப்பை தாங்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட ஒரு வரமாகக் கருதியதை நம்மால் உணரமுடிகிறது. தங்களுடைய உயிரைத் துச்சமாகக் கருதி இறைவனுக்குத் தியாக காணிக்கையாக தங்களுடைய இறப்பை அர்ப்பணித்தனர் என்று கருதுவதே சாலச் சிறந்தது.
உதாரணமாக பல புனிதர்கள் மறைசாட்சியாக உயிர் நீத்தார்கள் என்பதை அவர்களின் வரலாறு நமக்கு அறிவுறுத்துகிறது. பல இன்னல்களுக்கு மத்தியிலும் இறப்பானது இறைவன் தமக்கு அளித்த வரம் எனக் கருதிய “புனித செபஸ்தியார், அருளானந்தர், இலாரன்ஸ்” போன்றோரும், புனிதைகளாகிய மரிய கொரற்றி, குழந்தை தெரசம்மாள்” போன்றோரும் நம்மிடையே புனிதர்களாக வாழக் காரணம் தங்களுடைய உயிரையே இறைவனுக்காக அர்பணித்ததே என்றால் அது மிகையல்ல.
திருவிலியத்தில் இறப்பு பற்றி நிகழ்வுகள்
இறப்பின் மேன்மையை, அதன் அவசியத்தை நாம் திருவிவிலியத்திலே பல இடங்களிலே காணமுடிகிறது. குறிப்பாக நூற்று முப்பத்தைந்து இடங்களிலே இறப்பு பற்றிய நிகழ்வுகளை நாம் விவிலியத்திலே வாசித்து அறிகிறோம். ஆகவே இறைத்திட்டத்தின் அச்சாணியாக இந்த இறப்பு விளங்குகிறது என்றால் அதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
- நாம் வாழ்வதும் நாவாலே சாவதும் நாவாலே என்று நீதிமொழிகள் 18:21ல் காண்கிறோம்.
- மனிதர் முதல் விலங்கு வரை சாவு நிச்சயம் என்பது பற்றி சீராக் 40:8ல் வாசித்து அறிகின்றோம்.
- வாழ்வதை விட சாவதே நல்லது என்பது பற்றி யோனா 4:3 ல் காண்கிறோம்
- பாவத்தின் விளைவாகவே சாவு இவ்வுலகில் நுழைந்தது என்பது பற்றி உரோமையர் 5:12ல் காண்கின்றோம்
- இறப்பினால் வரும் நன்மைகள் பற்றி உரோமையர் 8:11ல் வாசிக்கிறோம்
- வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார் என எபிரேயர் 2:13ல், வாசிக்கிறோம்.
- மனிதர் ஒரு முறை மட்டுமே இறப்புக்கு உட்படுகின்றனர் பினனர் இறுதி தீர்ப்பு வருகிறது என்று 9:27ல் காண்கிறோம்.
- வாழ்விலும் சாவிலும் கிறிஸ்துவை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பிலிப்பியர் 1:20ல் காண்கிறோம்
- இறப்பிற்காக நாம் ஏங்க வேண்டும் என்பது பற்றி 2 கொரிந்தியர் 4:11லும் இறப்பு என்பது நாம் விண்ணக வீட்டை அடைய உதவும் ஒரு அடையாளம் என்றும் 5:4லிலும் வாசிக்கிறோம்.
இவ்வாறாக ஏறக்குறைய நூற்று முப்பத்தைந்து இடங்களில் இறப்பு பற்றிய நிகழ்வுளையும் அதன் அவசியத்தையும் விவிலியத்தின வாயிலாக நாம் உணர முடிகிறது. எனவே தினமும் திருவிவிலியத்தை வாசித்தவர்களாய் விண்ணக வாழ்வின் பேரின்பத்தை அடைய நாம் முற்பட வேண்டும்.
மரணம் என்பது அழகானது, மரணம் என்றால் முடிவு என்கிறாய், அது தொடக்கமாக இருப்பதை நீ கவனித்ததில்லையா? ஒரு பூவின் மரணத்தில்தான் காய் பிறக்கிறது. கன்னிமையின் மரணத்தில்தான் தாய்மை பிறக்கிறது. விடியலை அழகு என்கிறாய் அது இரவின் மரணமல்லவா? புதுமையை வரவேற்பவனே பழமையின் மரணம் இல்லையென்றால் புதுமை ஏது? இவ்வாறாக “மரணம் என்பது அழகு” இதை பற்றி “ஆலாபனை” என்னும் நூலிலே கவிஞர் அப்துல் ரகுமான் கூறுகிறார்.
ஆகவே மானுட நண்பர்களே! இறப்பு என்பது இறைவன் நமக்கு அளித்துள்ள கொடையாகவும், வரமாகவும் கருதி திருவிவிலியத்தின் இறப்பு நிகழ்வுகளை சற்று ஆராய்ந்து புனிதர்களின் வாழ்க்கைப் பாதையிலே நம்மையும் இணைத்து நாம் இறப்பை எதிர்நோக்கும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ முற்பட வேண்டும்.
இறுதியாக,
பிறப்பு என்பது இறப்பின் ஆரம்பம்
பிறக்கும் நீ இறப்பது உறுதி
இறக்கும் நீ வாழ்வது உறுதி
புனிதனாய் மாறும் போது.