நற்கருணை - மனுகுலத்தின் மீதான அன்பின் அடையாளம்
கி.பி எட்டாம் நூற்றாண்டு, இத்தாலி நாட்டில் ஓர்த்தோனா பகுதியில் லான்சியானா என்ற இடத்தில் பைசாரியன் துறவிகள் வாழ்ந்து வந்தார்கள். கி. பி 730 முதல் 750 களுக்குள்ளாக நடந்த நிகழ்வு இது. ஒரு குறிப்பிட்ட குருவானவர் இதயத்திலே முள்ளைப்போல் தைத்துக் கொண்டிருந்த சந்தேகத்தோடு ஒவ்வாருநாளும் திருப்பலியை நிறைவேற்றினார். அவரின் சந்தேகம் இதுதான். பலிப்பீடத்தில் இருக்கும் அப்பமும், இரசமும் திருப்பலியில் உண்மையாகவே இயேசுவின் தசையாக, இரத்தமாக மாறுகின்றதா? நாட்கள் நகர்கின்றன. அன்றும் அவருக்கு அதே சந்தேகம்.
திருப்பலியை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார். எழுந்தேற்றவேளையில் அர்ச்சிப்பு செபத்தை செபித்து, “இது என் உடல், இது என் இரத்தம்” என்கிற வசீகர ஜெபத்தை முடிக்கிறார். தலைதாழ்த்தி வணங்கி நிமிர்ந்தால் அவருக்கு அதிர்ச்சி! அப்பமும், இரசமும் காணவில்லை. ஆனால் அங்கே மனித தசைத் துண்டும், இரத்தமும் உள்ளது…. அதிசயம்! ஆனால் உண்மை! விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள், இது மனித தசையா என்று? கத்தோலிக்கர் மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. மனித தசையே என்று உறுதி செய்தது.
மீண்டும் 1971ல் சியன்னா பரிசோனைக்கூடத்திலே ஆராய்ச்சித் தொடர்ந்தது. தசை மனிதரின் தசை என்றும், இரத்தம் மனிதரின் இரத்தம் என்றும், அத்தசை மனித இதயத்தின் ஒருபகுதி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மீண்டும் எண்டோக்கார்டியாக் என்கிற நவீன பரிசோதனை செய்யப்பட்டது. இதயத்தின் சதையே என்று அவர்களும் சான்றளித்தார்கள். Standard Method of Electro – Analysis of Blood என்ற அதி நவீன இரத்தப் பரிசோதனைச் செய்யப்பட்டது. AB இரத்த குடும்பத்தை சார்ந்த தசை என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் நற்கருணையில் தன் பிரசன்னத்தை உண்மைப் படுத்துகின்றார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆராதனைச் செய்கின்றனர். 1300 ஆண்டுகளாக இன்று வரை இது தொடர்ந்து கொண்டே உள்ளது.
நற்கருணை - இறையன்பின் மறைபொருள்
தன் நண்பனுக்காக உயிரைக்கொடுப்பதை விட மேலான அன்பு வேறில்லை என்றவர், நற்கருணையில் அதைச் செயல்படுத்துகிறார். “எனது தசை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” (யோவான் 6:55-56) என்றவர் நற்கருணையில் தன் அன்பையும், உடனிருத்தலையும் பாடமாக்குகிறார். 1999 ஆம் ஆண்டு லான்சியாவில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டிலே திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் “நற்கருணை நாதரின் நிரந்தர அர்பணிப்பு, பரிவு, தியாகம், மற்றும் அன்பு அன்றாடம் வாழ்வில் மறு நிகழ்வாக்கப்படவேண்டும்” என்பதை மையப்படுத்தினார். நற்கருணை இறையன்பின் வெளிப்பாடு. இயேசுவின் முழுவாழ்வையும், குறிப்பாக பாடுகள், மரணம், உயிர்ப்பை உணர்த்துகின்றது.
நற்கருணை – ஆண்டவரின் திருவிருந்து – அன்பின் அருமருந்து.
தூய பவுலடியாரின் 1கொரி. 11:17-34ல், அர்பண வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கின்றது. குழுமங்களில் உள்ள பிளவு, கட்சி மனப்பான்மை, பாகுபாடு, பிரிவிணை பேதம்… கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி… வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களை பாராட்டுவதா? (எசா. 22) “ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்ற பவுலடியாரின் வார்த்தைகளை நானும் பயன்படுத்துகிறேன். நற்கருணையைப் பற்றிக் கொள்வோம்! இனம், மொழி, சாதி, பண்பாடு கடந்து, நற்கருணை மனுக்குலத்தை அன்பினால் குடும்பமாக்குகின்றது. அன்பே நற்கருணையின் உயிர் நாதம்.
ஆண்டவரின் திருவிருந்திலே தகுதியுடன் பங்கேற்க, நிறையருள் பெற நாம் நம்மை விட்டு வெளியே வருவோம். தகுதியின்றி பங்கேற்பது ஆண்டவரின் உடலுக்கும், இரத்தத்திற்கும் எதிரான பாவம் (எசா 27). சோதித்தறிந்தே பங்கேற்க வேண்டும் (எசா 28). இல்லையெனில் தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்வீர்கள் (எசா 29). ஆனால் நம்மை நாமே சோதித்தறிந்தோமானால் நாம் தீர்ப்புக் குள்ளாக மாட்டோம்(எசா 30). நற்கருணை ஆண்டு நம் ஆன்மீக வாழ்வில் திருப்புமுனையாக அமையட்டும்.
நற்கருணை – அர்ப்பண வாழ்வின் ஊற்றும், உச்சமும்.
நாம் அழைக்கப்பட்டதே அவரோடு உடனிருக்க! நற்கருணை இறைவனின் உடனிருப்பு. உமது உடனிருப்பு சீடத்துவ வாழ்வின் அடிப்படைத் தேவை. அவரோடு, அவர் பிரசன்னத்தில் இருப்பதே நம் முதல் கடமை….. சீடத்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமும் இதுவே…. தூய ஜான் மரிய வியான்னி தினமும் 16 முதல் 18 மணிநேரம் நற்கருணை நாதர் பிரசன்னத்தில் தன்னையே கரைத்துக் கொண்டார். திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், மடாதிபதிகள், அரசர்கள் என ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை ஆண்டவருக்குள் இணைத்தார். அருளாளர் அன்னைத் தெரசா… பணிவாழ்வுக்கு ஆற்றலை, சக்தியைத் தருபவர் நற்கருணை நாதரே என்று உலகிற்கு பறைசாற்றியவர். சபை சகோதரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நற்கருணை நாதரோடு ஐக்கியமாகின்றார்கள். நமக்கு உயிர் பிச்சை போடுகின்ற இறைவனுக்கு நேரம் ஒதுக்க தயங்க வேண்டாம். தனிமையில் நற்கருணை நாதரிடம் உரையாடுவோம். ஆராதனைச் செய்வோம். அருள்வரங்களை நிறைவாகப் பெறுவோம்….
நற்கருணை – விடுதலை இறையியலின் உயிர்நாதம்
விடுதலை இறையியல் அடிப்படைப் பண்பு பேசுவது அல்ல, மாறாக செயல்படுவது. அடுத்தவர்களுக்காக, தேவையில் இருப்போர்க்காக, இலக்கு மக்களுக்காக சுவாசிப்பது, சிந்திப்பது, செயல்படுவதுதான் விடுதலை இறையியல். பேசாமலேயே இதற்கு இலக்கணம் வகுத்தவர் நற்கருணைநாதர் இயேசு. பாவம், சாவு, சமூக, பொருளாதார, அரசியல் அடிமைத்தனங்களுக்கு சவால் விடுப்பவரும், சவுக்கடி கொடுப்பவரும் நற்கருணை நாதரே. அவரின் வழி தற்கையளிப்பு. இறைவாக்குப்பணி. உருமாற்றப்பணி, உருவாக்கப்பணி. அனைத்தும் முழுமை பெறுவது தன்னையே பலியாக்குவதில். தியாகமில்லாத விடுதலை இறையியல் ஒரு கானல் நீர். நடமாடும் நற்கருணையாவோம்.
திருத்தொண்டர் அடைக்கலசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக