சாவான பாவம்…வாழ்வு தந்த வரம்


நிழல் இல்லா நிஜங்கள் இல்லை,
காற்று இல்லா ஒளி இல்லை,
முட்கள் இல்லா வழிகள் இல்லை,
முட்டுக் கட்டைகள் இல்லா வாழ்க்கை,
ஒரு வாழ்க்கையல்ல.
இறை யேசுவில் பிரியமானவர்களே!

பாவம் இல்லாத ஒரு வாழ்வு நம்மால் வாழ முடியாது. அதேசமயம் பாவத்திலிருந்து மீள முற்படாமல் வாழ்வது ஒரு பாவம் ஆகும். ஆதியிலே மனிதனை மிகவும் நல்லது என படைத்தார் இறைவன் ( ஆதி. ) மனிதனோ தனக்கு தானே பாவத்தை உருவாக்கினான். எனவேதான் ஆதியிலே பிறந்த பாவம் அகிலத்தை ஆண்டுவருகிறது. கடவுள் மனிதனுக்கு நல்லதை அறிவிக்க விரும்பி பல காலகட்டங்களில் பலவிதமான முயற்ச்சிகளால் மனிதனுக்கு பாவத்தின் பலத்தையும் அதன் விளைவையும், அழிவையும் அறிவுறுத்த முற்பட்டார். அக்கால இறைவாக்கினர் முதல் இக்கால கவிஞர்கள் வரை பாவத்தின் கணத்தை வெவ்வேறு விதத்தில் எடுத்துக் கூறுகின்றனர். 
  • பாவத்தை விட்டு விலக்கி இறைவனிடம் திரும்பி வாருங்கள் - எரேமியாஸ்
  • இம்மக்கள் உதட்டினால் என்னை புகழ்கின்றனர் ஆனால் இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் உள்ளது
  • பாவம் என்ற கல்லறைக்கு பலவழி அந்தக் கருணை தேவன் கோயிலுக்கு ஒருவழி – கண்ணதாசன் 
  • பாவம் என்றொரு விசத்தால் - உன் பாதத்தை பிடித்தேன் இறைவா – கிறிஸ்தவ பாடல் 
பாவத்தின் பரிநாமத்தை பலபேர் எடுத்து கூறினாலும், மனிதனிடத்திலே எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. இந்த கலியுகத்தில் மனிதன் வேகமாக முன்னேறினாலும், பாவம் பல கோணங்களில் விருச்சமாக பரந்து விரிந்து வளர்ந்து வருகிறதை எவராலும் மறுக்க முடியாது. பாவத்தினால் சாவு என்ற சவுக்கடி இந்த உலகில் தலைக்காட்டியது. நமது ஆண்டவர் பாவத்தை வென்று சாவை தூக்கியெறிந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். கடவுள் நம்மிடம் கூறுவது பாவத்தை விட்டு விலகுங்கள் என்று நமக்கு அறிவூட்டுகிறார். பாவம் செய்த எவருக்குமே விண்ணரசில் இடம் இல்லையென்று சொல்லவில்லை. பாவிகளுக்கும், ஏழைகளுக்கும் இறையரசு என்று கூறியதெல்லாம் யார் பாவத்திலிருந்து மன மாறுகின்றார்களோ அவர்களுக்கே வசந்தம் கிடைக்கும். ( எ. கா. நல்ல கள்வன்)

பாவம் எப்படிச் செய்கிறோம்? 

புனித அகுஸ்தினார் தன்னுடைய நூலில் இவ்வாறு கூறுகின்றார், “இறைவனை விட்டு விலகுவது பாவம்” இதற்கு விவிலியத்தில் சான்றுகளை தேடிபார்க்கும் போது விவிலியம் முழுவதுமே மனிதன் பாவம் எப்படி செய்கின்றான் என்றும், கடவுள் மனிதனை எவ்வாறு பாவத்திலிருந்து மீட்கிறார் என்றும் ஒவ்வொரு பக்கங்களும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள் முதல் புதிய ஏற்பாட்டு நூல்கள் வரை பாவத்தை பற்றி அருமையாக எடுத்து கூறுகின்றது. சான்றாக: 
  • ஆதிமனிதனின் பாவம் 
  • பாபேல் கோபுரம் கட்டி கடவுளை காண முற்படுகின்ற பாவம் 
  • இஸ்ராயேல் மக்கள் வேற்று தெய்வங்களை வழிபடுதல் மூலம் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தல், 
  • கடவுளை விட்டு வெகு தொலைவில் சென்ற பாவம். 
  • தேர்தெடுக்கப்பட்ட இஸ்ராயேல் குலத்தவர்கள், அரசர்கள் மற்றும் மதகுருக்கள் பாவம் செய்தனர்(தாவீது). 
  • பலி செலுத்தும் முறையில் பாவம் செய்தனர். 

இவ்வளவு தூரம் கடவுளுக்கு மனவருத்தம் கொடுத்தாலும் கடவுள் அவர்களை அந்த நிலையிலே விட்டு விட்டாரா? இல்லை, புதிய ஏற்பாட்டு நூல்களிலே பார்க்கின்றோம், கடவுள் தம் ஒரே மகனையே அனுப்பி மனிதனை பாவத்திலிருந்து மீட்கிறார். 

கடவுளின் வெளிபாடு

இறைமகன் இயேசு பாவிகளை நேசித்தார். அவர்களுடைய உள்ளத்து ஏக்கங்களை புரிந்து கொண்டார், ஆனால் பாவத்தை வெறுத்தார். இதையே இயேசு, சக்கேயுவை சந்திப்பதின் மூலமும், ஊதாரிமைந்தனின் உவமையிலும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணிடம் “நானும் தீர்பிடேன், இனி பாவம் செய்யாதே” என்று அறிவுறுத்தி சொன்னதிலும் கடவுளின் அன்பை வெளிப்படையாக காண்கின்றோம்.. 

கடவுளின் அன்பை உதரிச் சென்று, விவேகத்தை இழந்து, இருளை விரும்பி வாழ்ந்து கொண்டிருந்த கொரிந்து மக்களுக்கு தூய பவுல் தன்னுடைய கடிதத்தின் மூலம் கடவுளின் அன்பை கொடுக்க முயல்கின்றார். திருவிவிலியம் நமக்கு கற்றுத் தருவது எந்த ஒரு செயலிலும் கடவுளின் வெளிப்பாட்டை மறந்து, மனித புத்தியின் படி நடக்கும் போது பாவ சேற்றிலே விழுந்து நம்மை நாமே கரையாக்கி கொள்கின்றோம். சுருங்கக் கூறின், பாவம் என்பது நிழல் போன்றது தொடர்ந்து வரும். ஆனால் நாம் பாவத்தை தொட நினைத்தால் அது ஓட தொடங்கும் (நிழல்). 

திருநூலும், திருச்சபையும் கற்பிப்பது
  1. “Every sinner has a future” ஒவ்வொரு பாவியும் நல்ல எதிர் காலத்தை எதிர்நோக்கியுள்ளான். இன்று அடிபடாமல் படிக்கின்ற பிள்ளையை விட, அடிவாங்கி படிக்கின்ற பிள்ளையும், சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது விழுந்து விடாமல் பழகுகின்ற குழந்தையை விட, அடிப்பட்டு கற்றுகொள்கின்ற குழந்தை திறமை மிக்கதாக இருக்கும். எனவே நாம் பாவி என்பதை மனமாற முதலில் ஏற்றுக் கொள்வோம். 
  2. மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தன்னுடைய சுற்றுமடலில், “இருபதாம் நூற்றாண்டின் அவலநிலை பாவம் என்ற உணர்வு அற்ற நிலைதான்” என்று கூறுகின்றார். மனிதன் எதையுமே வயமந வை நயளல pழடiஉல என்று எடுத்து கொள்வதால் பாவம் என்ற பய உணர்வு இன்றி, வாழ்ந்து மடிகின்றான். 
  3. திருச்சபை நமக்கு ஒப்புரவு என்ற அருட்சாதனத்தை கொடுத்துள்ளது. அதன் மூலம் நாம் பாவ கரைகளை நீக்கி மீண்டும் இறைவனோடு கை கோர்த்துக் கொள்ள வழி வகுக்கின்றது. இன்று நம்மில் பலர் இந்த அருட்சாதனத்தை அலட்சிய படுத்தி வாழ்ந்து வருகின்றோம். 
  4. திருவிவிலியம்: நீங்கள் பாவம் செய்யாதீர்கள் என்று வெளிப்படையாக கூறுகின்றது. அதே போல் பாவத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று இயேசு ஒவ்வொரு பக்கத்திலும் கூறுவதை பார்க்கின்றோம். நாம் எவ்வாறு பாவம் செய்யாமல் இருப்பது என்பதற்கு இரண்டு கட்டளைகளை இயேசு கொடுக்கின்றார். 1 இறையன்பு 2 பிறரன்பு 
எப்படி நம்மால் பாவத்தை விலக்கி வாழ முடியுமா?

முடியும் என்று நினைப்பது தவறல்ல. ஒவ்வொரு ஆன்மாவிற்கும் போதிய பலத்தை தந்துள்ளர் நம் ஆண்டவர் இயேசு. ஆனால் நாம் அனைவரும் பயன் படுத்துவது கிடையாது. பாவத்தை விலக்கி புனித வாழ்வு வாழ்ந்து காட்டியவர் தூய பவுல் அடிகளார். இவர் கிறிஸ்தவர்களை கொன்று குவித்து வந்த காலகட்டத்தில் இறைவனின் உந்துதலினால் ஏவப்பட்டு எந்த கிறிஸ்தவர்களை வதைத்தாரோ, அதே மக்களுக்கு பணி செய்யப் புறப்படுகின்றார். இவருடைய மனமாற்றத்திற்கு இறைவன் ஒரு கருவியாக செயல்பட்டார். நம்முடைய வாழ்விழும் சில எதிர்பாராத நேரங்களில் இறைவன் நம்மையும் சந்தித்து பேசுகின்றார். நாம் அவருக்கு செவிசாய்க்க மறந்து விடுகின்றோம். நாம் செய்கின்ற ஒவ்வொரு பாவமும் ஏதாவது ஒரு வழியில் நம்மை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், நம் வாழ்வு அவமானத்திற்கும், கேளிப் பேச்சுக்கும் உள்ளாகும் என்பதை விவிலிய சுவடுகள் எடுத்து காட்டுகின்றன. (யூதாஸ், இறைவாக்கினர்கள் மற்றும் அரசர்கள்)

பாவத்தை விட்டு விலகுவதற்கு இறைவன் கொடுக்கும் மருந்து 

இவ்வுலகில் பாவம் சாபமாக உள்ளே நுழைந்தது. ஆனால் ஆண்டவர் அதை வரமாகப் பெற்று மீட்பு அளித்தார். எனவே துன்பத்தில் சாய்ந்து விடாமல் துணிந்து அதை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கும் அருமருந்து. ஒவ்வொரு மருந்தையும் அதை அருந்தும் முன் அதன் முத்திரையை (சீல்) உடைக்க வேண்டும். அதேபோல் அன்பு என்ற கனிரசம் நம்மிலே உடைப்பட்டு ஊற்றாக வேண்டும். அப்போது இறைவன் கொடுக்கும் மருந்து பூரண சுகமளிக்கும். 
மனிதன் எடுக்கும் முயற்சி

கடவுளை விட மனிதன் எடுக்கும் முயற்சி மிக மிக சொர்பமாணவை. பாவத்திற்கு கருவியாக கோவில் உண்டியலில் தான் கொள்ளையடித்த பணத்தின் மீதி பாதியை போட்டு விட்டு, வருகின்ற துன்பத்திலிருந்து காக்கும்படி மன்றாடுகின்றான். ஏழைகளுக்கு உதவியை நாடி வருபவருக்கு தன்னால் இயன்ற அளவு உதவி செய்கின்றான். தன்னலம், சுயநலம் இல்லா மன்னிப்பை பெற அவனுடைய மனமும் அவன் செய்கின்ற செயல்களும் அவனுக்கு பல நேரங்களில் தடையாய் இருக்கின்றன. எனவே பாவத்தை விட்டு விலக்கி அன்புடனும் இயேசு கொடுத்த மருந்துடனும் வாழ முற்படுவோம் 

வாங்க எல்லோரும் பாவத்தை விட்டு விலகுவோமே, என்பதை விட, பாவத்தை வாழ்க்கையில் இருந்து விரட்டுவோம் என்ற உறுதிமொழியுடன் இறைவனை வேண்டுவோம். ஆமென்.

சகோ. அருண் பெல்லார்மின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக