ஆண்டவரின் திருமுழுக்கு விழா


இறை இயேசுவில் எனக்கு பிரியமானவர்களே!

இறைவார்த்தையை பின்பற்றுவதில் மூன்று விதமான மக்களை நாம் காணலாம்.
  1. முதலாவது நபர் இறைவார்த்தையை வாசிப்பதோடு அல்லது கேட்பதோடு மட்டும் தனது கவனத்தை செலுத்துகிறார். 
  2. இரண்டாவது நபர் இறைவார்த்தையை வாசித்து இறைவார்த்தையின் பொருளை உணர்ந்து கொள்கிறார். 
  3. மூன்றாவது நபர் இருவரையும் விட ஒரு படி மேலே சென்று இறைவார்த்தைக்கு செவிகொடுத்து பொருள் உணர்ந்து, இறைவார்த்தையை தங்கள் வாழ்வில் நடைமுறை படுத்துகிறார். இவர்களே முழுபயனை அடைகின்றனர். 
ஆகவே இந்த மூன்று நிலைகளிலிலும் இன்றைய வழிபாட்டில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியுடன் இணைத்து, ஆண்டவர் அருளும் செய்தியையும், அதை நாம் எப்படி நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தி இறையருளை பெறமுடியும் என்று பார்போம்.
1. முதல் நிலை: இயேசு திருமுழுக்குப் பெற்று தண்ணீரை விட்டு வெளியே வரும் போது மூன்று அதிசய நிகழ்ச்சிகளை பார்க்கின்றோம். 
  • வானம் திறந்தது. 
  • தூய ஆவியார் புறா வடிவில் இயேசுவிடம் வருகிறார். 
  • “இவரே என் அன்பார்ந்த மகன்” என்று தந்தையாகிய கடவுள் தனது மகனை உலகிற்கு வெளிப்படுதுகிறார். 
2. இரண்டாம் நிலை: இன்றைய நற்செய்தியின் மூன்று முக்கிய நிகழ்வுகளின் பொருள் என்னவென்று பார்ப்போம்.

1. முதல் நிகழ்ச்சி: வானம் திறந்தது – ஓர் புதிய சகாப்தம்
யூதர்களின் மரபுப்படி கடவுள் விண்ணுலகில் வாழ்பவர், மனிதன் மண்ணுலகில் வாழ்பவன். இவர்களின் உறவுக்கு தடையாக இருப்பது வானம். மனிதர்கள் இறைவனை விட்டு பிரிந்து துன்பங்கள் அனுபவிக்கும் போது அவர்கள் மனம்திரும்பி இறைவனின் ஆசீருக்காக மன்றாடும் போது இறைவன் மக்களின் விண்ணப்பத்தை ஏற்று வானத்தை பிளந்து கொண்டு வருவார் என்பது அவர்களின் நம்பிக்கை. இதைதான் எசாயா 64:1 ல் “இந்த உலகை பாவத்திலிருந்து மீட்க ஆண்டவரே வானங்களை பிளந்து வரமாட்டீரா?” என்று எசாயா இறைவாக்கினர் மன்றாடுகின்றார். இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடினர். அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்பட்டது. இறைவன் தனது மகனை உலகிற்கு அனுப்பினார். அவரை எல்லோருக்கும் வெளிப்படுத்த இறைவன் அவரின் திருமுழுக்கின் போது வானத்தை திறக்கின்றார். இந்நிகழ்வின் மூலம் கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க மண்ணுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறார். 

2. தூய ஆவியார் புறா வடிவில் இறங்கி வருதல் - ஓர் புதிய படைப்பு: 
தொடக்க நூலில் இறைவன் உலகை படைத்த பொழுது கடவுளின் ஆவியார் நீர்த்திரளின் மீது அசைந்தாடிக்கொண்டிருந்தது. (தொ. நூ. 1:2) அதே தூய ஆவி யார் இயேசுவின் திருமுழுக்கின் போது புறா வடிவில் வருகின்றார். அத்தூய ஆவியார் புதிய சகாப்தத்தின் புதுப்படைப்பாக நாம் இந்நிகழ்ச்சியில் காண்கின்றோம். 

3. தந்தையின் வாக்கு: - புதிய ஆதாம்
“இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகிறேன்” என்று கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க தனது ஒரே மகனை புதிய ஆதாமாக அறிமுகப்படுத்துகிறார். இதைத்தான் புனித பவுல் அடியார் (1கொரி. 15:45-49) வரையிலான வசனங்களில் விளக்குகிறார். 
  • பழைய ஆதாம் மனித இயல்பில் இறைவனால் படைக்கப்பட்டவன் ஆனால் புதிய ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியாராக இருப்பவர்.
  • பழைய ஆதாம் மண்ணிலிருந்து வந்தவன், ஆனால் புதிய ஆதாமோ விண்ணிலிருந்து வந்தவர்.
  • ஆகவே நாம் மண்ணை சார்ந்தவரின் சாயலை கொண்டிருப்பது போல, விண்ணை சார்ந்தவரின் சாயலை கொண்டிருப்போம் என்று கூறுகின்றார். 
சுருக்கமாக பார்த்தால் இயேசு கிறிஸ்து யோர்தானில் பெற்ற திருமுழுக்கு, கடவுள் மக்களை பாவத்திலிருந்து மீட்க மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்பட வழிவகை செய்கிறது. இந்த புதிய சகாப்தமே புதிய படைப்பு. மேலும் யேசுக்கிறிஸ்துவின் திருமுழுக்கில் மூவொரு இறைவனின் பிரசன்னத்தையும் நாம் உணரலாம்.

3. மூன்றாம் நிலை: இறைவார்த்தையின் உள்ளார்ந்த செய்தியை உணர்ந்த நாம் நமது வாழ்வில் இறைவார்த்தையை வாழ்வாக்க வேண்டும்.   நம்மில் பலர் பல நேரங்களில் நாம் பெற்ற திருமுழுக்கின் பொருளை அறியாமல் பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மேலும் சிலர் திருமுழுக்கின் சக்தியை தெரிந்தும் செயல்படாதவராக, மற்றவருக்கு மட்டும் போதிப்பவராக வாழ்ந்து வருகிறோம். 
  • இந்த சூழ்நிலையில் இன்றைய வழிபாடு நமக்கு தரும் செய்தியை எப்படி நம் வாழ்வில் பின்பற்றுவது? 
  • நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின் போது ஆண்டவர் மனித சமுதாயத்தை மீட்க புதிய சகாப்தத்தின் புதியபடைப்பின் புதிய கிறிஸ்து அவனாக அல்லது அவளாக மாற்றப்படுகின்றோம். திருமுழுக்கின் போது மூவொரு இறைவன் நம்முடன் உறவுகொள்கிறார். அப்போது நாம் பழைய ஆதாமின் மூலம் வந்த ஜென்ம பாவத்திலிருந்து புதிய ஆதாமாகிய கிறிஸ்துவால் மீட்கப்பட்டு ஒரு புதிய கிறிஸ்துவனாக அல்லது அவளாக மாற்றப்படுகின்றோம். ஆகவே நாம் அனைவரும் கிறிஸ்துவை மையமாக கொண்ட வாழ்வு வாழ வேண்டும். 
  1. திருமுழுக்கின் போது திருமுழுக்கு பெறுபவர் தூய ஆவியால் அபிசேகம் செய்யப்படுகிறார். ஆக நாம் அனைவரும் தூய ஆவியாரால் அபிசேகம் செய்யப்பட்டவர்கள். தூய ஆவியாரால்  அபிசேகம் செய்யப்பட்ட நாம் எப்படி வாழ வேண்டும்? இதற்கு பதிலை புனித பவுல் அடிகளார், தூய ஆவியாரைப் பெற்ற இயேசு, கடவுளின் வல்லமையால் அலகையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அனைவரையும் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். ஆகவே திருமுழுக்கு பெற்ற நாம் இயேசுவைப் போல மற்றவருக்கு நன்மை செய்து வாழ வேண்டும். பிறர்க்கு நன்மை செய்வதன் மூலம் நாம் நற்செய்தியை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தலாம்.
  2. திருமுழுக்குப் பெற்றவர் அனைவரும் ஆண்டவரின் ஊழியர். ஆண்டவரின் ஊழியராகிய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? இதற்கு பதிலை எசாயா இறைவாக்கினர் சொல்கிறார். “எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், அதாவது இறைவனே எல்லாம் எனத் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள மக்களை அழைக்கவும், நோயின் சிறையிலும், பாவத்தின் சிறையிலும், அக்கிரமத்தின் சிறையிலும் அல்லல் படுவோரை விடுவிக்கவும், பல வகையான ஜாதி, மத, இனம் போன்றவற்றில் அல்லல்படுவோரை விடுவிக்கவும், பல வகையான பாவங்களினால் தங்களையே குருடாக்கிக் கொண்டவர்களின் மனக்கண்களை திறக்கவும், அநீதியாலும், அறியாமையாலும் ஒடுக்கப்படுவோர்க்கு உரிமை வழங்கவும், ஆண்டவர் அருள் தருவார் என்ற நம்பிக்கை விதையினை மக்கள் மனத்தில் விதைப்பதும், ஆண்டவரின் ஊழியர் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் ஆகும்.” திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்கும் இந்த கடமை உண்டு. அப்படி செய்யவில்லை எனில், நாம் பெற்றுக் கொண்ட திருமுழுக்கின் பயன் என்ன? சிந்திப்போம்…. ஆமென்.
திருத்தொண்டர் அடைக்கலசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக