இயற்கை


ஓசோனில் ஓட்டை
ஓட்டையின் ஊடே புற்றுநோய்
செருக்குடன் கட்டிடங்கள்
செரிக்க வரும் நிலநடுக்கங்கள்
புகையாகிய பூங்காற்று
பூஜ்யமாக்குகிற புயல்
நலிந்த நன்னீர் நாகரீக நோய்கள்
மாண்டு போகும் மரங்கள்
மறந்து போகும் மழைகள்
சேர்கின்ற மணல்
நிலைக்கிற நிலச்சரிவு
ஆம்,
கருவறை இல்லாவிட்டால்
ஏது குழந்தை!
இயற்கையை பாதுகாக்காவிட்டால்
ஏது சுகமான வாழ்க்கை மனிதனுக்கு
சிதைக்க வேண்டாம் இயற்கையை
இயற்கையில் சிதைந்து போவோம்.

சகோ. L. செல்வகுமார்.

கிறிஸ்மஸ் செய்தி

மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
கடல் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மழையைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
இவையாவும் அழகான சந்திப்புகள்தான். ஆனால் இவற்றைவிட ஓர் அற்புதமான சந்திப்பு ஒன்று நம் நடுவே நிகழப்போகிறது. விண்ணகம் மண்ணகத்தை சந்திக்கப்போகிறது. பாசம் பகையைச் சந்திக்கப்போகிறது. ஆம்! கடவுள் மனிதனை சந்திக்கப் போகிறார். கிறிஸ்து பிறப்பிற்காக நம்மையே தயாரிக்கும் காலம் முடிந்து, காத்திருக்கும் கண்களுக்கு விருந்து படைக்க, இதோ மீட்பர் இயேசு பிறந்துவிட்டார்… வாருங்கள்.

மனித வாழ்விலே சந்திப்புகள் பலவிதம். சில சந்திப்புகள் சந்தோசத்தை கொடுக்கின்றன. சில சந்திப்புகள் சங்கடங்களை கொடுக்கின்றன. கண்களால் காண இயலாத கடவுள் கண்களால் காணும் வகையில் மனிதனாக, இயேசு பாலனாக மண்ணில் பிறந்த வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் விழா. 

இறைவன் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்?

ஆதியிலே இறைவன் உலகைப்படைத்தார்,உயிர்களைப் படைத்தார்.  அவற்றோடு உறவாட தன் சாயலாக மனிதனைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனை படைத்து, அவனுக்கு தன் சாயலைத் தந்து (ஆதி. 1:27) மற்றப் படைப்புகளிடம் இல்லாத அன்பு பாசம் பரிவு போன்றவற்றை தந்து உயர்த்தினார் கடவுள். ஆனால் மனிதனோ இறைஉறவில் நிறைவு பெறாமல், அழிவுக்குறிய உறவைத் தேடினான். தனி வாழ்விலிருந்து குழுவாழ்விற்கு மாறினான்.  கூடிவாழ்ந்தான் கோடி இன்பம் கண்டான். காயின் ஆபேலைக் கொன்றான். கடவுளின் அன்பை இழந்தான். கடவுளுக்கு இணையாக வேண்டுமென்று எண்ணி பாபேல் கோபுரம் கட்டினார்கள். நோவாவின் காலத்தில் மக்கள் கடவுளை மறந்து பாவத்தில் மூழ்கினர். இஸ்ராயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களோ திரும்ப திரும்ப பாவச்சேற்றிலேயே விழுந்தார்கள். பல இறைவாக்கினர்கள் வந்தும், அம்மக்கள் மனமாற்றம் அடையவில்லை. எனவே தான் கடவுள் தன் ஒரே பேரான மகனையே உலகிற்கு அனுப்பினார். கடவுள் மனிதனாக பிறந்து மனிதனை சந்திக்க வந்த நிகழ்வைதான் கிறிஸ்து பிறப்பு விழாவாக சிறப்பிக்கின்றோம். இறைவனுக்கு எதிராக மனிதன் இழைத்த குற்றத்தை இறைவன் ஒருவித பரிகாரம் செய்து அவனை மீட்கிறார். அவர் மனிதராகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அப்பரிகாரம் மனிதன் சார்பாக செலுத்தப்பட்டதாக இருக்கும்.  எனவேதான் கிறிஸ்து தம்மையே சிலுவையில் நமக்காக கையளித்தார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளோடும், சமுதாயத்;தால் ஒதுக்கப்பட்ட மக்களோடும் குழந்தைகளோடும் அன்பு கொண்டிருந்தார். இதன் மூலமாக மறைந்து போன மனிதத்தை மண்ணில் நிலைநாட்டினார். புதைக்கப்பட்டிருந்த மனிதத்தை இயேசு உயிர்ப்பித்தார்.  சிதைக்கப்பட்டிருந்த மனிதனை மாண்புறச் செய்தார். இயேசு இந்த மண்ணில் பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக மரியாளுக்குக் காட்சி கொடுத்த போது கபிரியேல் தூதர் “இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” (லூக். 1:30,31) என்று சொன்னார். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் அல்லது மீட்பர் என்று பொருள். அவர் நம்மை மீட்பதற்காகவே வந்தார்.  இரண்டாவதாக எசாயா இறைவாக்கினர் உரைத்தபடி, “இதோ கன்னி கருத்தாங்கி ஓர் ஆண்மகவை பெற்றெடுப்பார்.  அக்குழந்தைக்கு ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவர் என்று முன்னுரைத்தார். இம்மானுவேல் என்பதற்கு ‘கடவுள் நம்மோடு’ என்று அர்த்தமாகும். இந்த இரண்டு செய்தியும் நமக்கு சொல்லுவது இதுதான், இயேசு நம்மை இரட்சிக்க வந்தார்.  நம்மோடு குடியிருக்க வந்தார். 

இறைமகன் இயேசு அன்று மட்டும் பிறந்திருக்கவில்லை, இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார். எப்படி? ஏழை, எளியோர், அனாதைகள், நோயாளிகள், முதியோர் என ஒவ்வொருவரையும் அன்பு செய்யும் போது அங்கே இயேசு பிறக்கிறார்.

இன்று மனிதநேயமிக்க இதயங்களிலே இயேசு பிறக்கிறார். மனிதம் மதிக்கப்படுகிற இடமே இயேசு தங்குமிடம்.  வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை – அன்னை தெரசாள். 

வாழ்வது ஒருமுறைதான் அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம். மண் வேண்டாம், சுகம் வேண்டாம். மாந்தருக்கு உதவிட நல்மனதை தாரும் பாலன் இயேசுவே.  இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழுவோம்.  உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உறைய உறைவிடம் இன்றி வாடுவோருக்கு நம்மிடம் உள்ளதையும், உள்ளத்தையும் பகிர்வோம்.  பரமனின் அருள் பெறுவோம் எங்கே பகிர்வு உள்ளதோ அங்கே மகிழ்ச்சி பிறக்கிறது. எங்கே மகிழ்ச்சியுள்ளதோ அங்கே பாலன் இயேசு பிறக்கிறார்.  எனவே பகிர்வோம், மகிழ்வோம்.

பிறந்திருக்கும் பாலன் இயேசு உங்களையும், என்னையும் ஆசீரால் நிரப்பிட தொடரும் கல்வாரிப் பலியில் ஜெபிப்போம். 

சிந்தனைக்கு: 
ஆயிரம் முறை இயேசு பெத்லேகமில் பிறந்தாலும் நம் இதயத்தில் பிறக்காவிடில் என்ன பயன்? - ஏஞ்சலுஸ் சிஸ்லெசியுஸ்
திருத்தொண்டர் பர்னபாஸ்

திருவருகை காலம்


வரவிருக்கின்றவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?

இறையேசுவில் பிரியமானவர்களே!

திருமுழுக்கு யோவானின் இந்தக் கேள்விகள் நம்மை சிறிது சஞ்சலமடையச் செய்கிறது. “நானோ உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்.  ஆனால் எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் உங்களுக்கு தூய ஆவியாரால் திருமுழுக்கு கொடுப்பார்.  நான் அருடைய காலடி வாரை அவிழ்க்க கூட தகுதியற்றவன் என்று இயேசுவின் கடவுள் தன்மையை, இயேசுவே மெசியா என்பதை விசுவாச சத்தியமாக அறிக்கையிட்ட திருமுழுக்கு யோவான் இயேசுவிடம் இத்தகைய சந்தேகத்தை ஏன் எழுப்ப வேண்டும்?

“ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடாரி வைத்தாயிற்று, நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும்,” (மத் 3:10).  “அவர் உலக்கை தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார், கோதுமையை தன் களஞ்சியத்தில் சேர்ப்பார்.  ஆனால் பதரை அணையா நெருப்பில் சுட்டெரிப்பார்,” என்று மெசியாவின் செயல்பாடுகளை இறைவாக்காக முன்னறிவித்தவருக்கு இயேசுவின் போதனைகள், செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் யூதர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு, திருமுழுக்கு யோவானிடமும் இருந்தது.  மெசியாவானவர் பாவிகளை அழித்து, அநீதியும், அராஜகமும் நிறைந்த சமுதாயத்தை அழித்து ரோம இராஜ்ஜியத்தையும், யூதாவை சுற்றியுள்ள பகைவர்களையும் அழித்து ஒரு மாபெரும் இராஜ்ஜியத்தை உருவாக்குவார் என்று நினைத்தார்கள்.  திருமுழுக்கு யோவானும் இதே மனநிலையில்தான் மெசியாவை எதிர்பார்த்தார்.

ஆனால் இயேசுவின் போதனைகள், “உங்கள் வலக்கன்னத்தில் அறைபவனுக்கு இடக்கன்னத்தையும் காட்டுங்கள்.  உங்கள் அங்கியைக் கேட்பவனுக்கு மேலாடையையும் கொடுங்கள், உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள், உங்களை துன்புருத்துவோர்க்காக செபியுங்கள்” என்று, அவர்களின் எதிர்பார்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. எனவே அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.  பாவியாகிய மத்தேயுவை தனது சீடராக ஏற்படுத்திக் கொண்டதும் பாவிகளோடு அமர்ந்து உணவு உண்டதும், திருமுழுக்கு யோவானிடத்தில் சந்தேகத்தை எற்படுத்தி இருக்கலாம்.

இயேசு யோவானின் சீடர்களுக்கு அளிக்கும் பதிலில் தனது நிலையை, தான் மெசியா என்பதை தெளிவுபடுத்துகிறார் இயேசு.  “குருடர் பார்கின்றனர், செவிடர் கேட்கின்றனர், முடவர் நடக்கின்றனர், இறந்தோர் உயிப்பெற்று எழுகின்றனர் என்று நீங்கள் காண்பதையும், கேட்பதையும் யோவானிடம் சென்று கூறுங்கள்” என்று பதிலுரைக்கின்றார் நம் ஆண்டவர் இயேசு.  (லூக் 10:23-24) இந்த பதிலில் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.  ஆதியிலே எத்தனையோ அரசர்கள் இறைவனால் ஏற்படுத்தப்பட்டார்கள்.  சவுல் வந்தார், தவீது வந்தார், சாலமோன் வந்தார், எல்லோரும் ஆட்சி செய்தார்கள்.  ஆனால் இவர்கள் அற்புதங்களை, அருளடையாளங்களை செய்யவில்லை.  இறைவாக்கினர்கள் வந்தார்கள்.இறைவனுடைய வாக்கை அறிவித்தார்கள்.  ஆனால் ஒருவரும் கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், அற்புதங்களையும் சுகத்தையும் நற்செய்தியையும் மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் இயேசுவின் போதனைகளில், செயல்பாடுகளில் கடவுளின் எல்லையில்லா இரக்கமும் கருணையும் வெளிப்படுகிறது. 

ஆம்!  கடவுளின் எல்லையில்லா அன்பும் இரக்கமும், நீதியும் இறைமகன் இயேசுவில் வெளிப்படுகிறது.  கடவுளின் எல்லையில்லா இரக்கத்தை அன்பை மனிதன் பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை.  அவருடைய இரக்கத்தை நாடி வருவதில்லை. திருமுழுக்கு யோவான் நினைத்தது போல இறைவன் அல்லது மெசியாவானவர் பாவிகளை அழித்து தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதாக இருந்திருந்தால் பூவுலகில் ஒரு மனிதன் கூட தப்பி பிழைத்திருக்க முடியாது.  ஏனென்றால் எல்லா மனிதர்களும் தவறக் கூடியவர்கள் பாவிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  கடவுளுடைய இரக்கமும் மனிதனுடைய உண்மையான மனமாற்றமும் இணைகின்ற பொழுதுதான் அங்கு மீட்பு கிடைக்கின்றது.  பழைய ஏற்பாட்டில் பார்கிறோம், நினிவே அழிவுறும் என்று இறைவாக்கு உரைத்தார் யோனா.  ஆனால் அந்த நகரத்தின் அரசன் முதல் ஆண்டிவரை சாம்பலில் அமர்ந்து சாக்குடை உடுத்தி தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகின்றார்கள்.  இறைவனும் அவர்களை மன்னிக்கிறார்.  ஆனால் தன் இறைவாக்கு நிறைவேற வில்லையே என்று முணுமுணுக்கும் யோனாவிடம் தான் எவ்வளவு இரக்கம் மிகுந்த இறைவன் என்று தெளிவுபடுத்துவதை பார்கிறோம்.

திருமுழுக்கு யோவான் கடவுளுடைய நீதிதீர்ப்பையும் தண்டணையையும் மிக அழுத்தமாக ஆக்ரோசமாக வெளிப்படுத்தினாரே தவிர, கடவுளின் எல்லையில்லா இரக்கத்தையும், கருணையையும் வெளிப்படுத்தவில்லை.  அவர் ஒரு பழைய ஏற்பாட்டு மனிதராக கடவுளுக்கு உகந்த முறையில், கடவுளுடைய பார்வையில் பெரியவராக இறைவாக்கினரைவிட மேன்மையானவராக விளங்கினார்.  இறைமகன் இயேசுவின் மூலம் புதிய இறையாட்சி இவ்வுலகில் பிறப்பெடுக்கிறது.  இயேசுவின் வருகை பாவிகளுக்கு புறந்தள்ளப்பட்டவர்களுக்கு வாழ்வு கொடுக்க கூடியதாகவும் எளியோர்க்கு நற்செய்தியை அறிவிப்பதாகவும் அமைந்தது.  இயேவின் மூலம் கடவுள் நமக்கு புதியதொரு வாழ்வை கடவுள் மக்களாகும் உரிமையை கொடுத்திருக்கின்றார். அவருடைய இரக்கத்தை, கருணையை இறைவன் இயேசுவின் மூலம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று நம்மில் இருக்கும் இயேசுவை அவருடைய அன்பை, கருணையை, இரக்கத்தை நாம் முழுவதுமாக உணர்கின்றோமா, என்று சிந்திக்க இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கின்றது.  “ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்பதை சுவைத்துப் பாருங்கள்,” என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார்.  கடவுளுடைய அன்பை எல்லையில்லா இரக்கத்தை நாம் உண்மையிலேயே அனுபவித்தோமானால் நாமும் அந்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு கொடுக்க கூடியவர்களாக மாறுவோம் என்பதில் ஐயமில்லை. நமது குடும்பங்களில் வாழும் வயது முதிர்ந்த, அன்புக்காக ஏங்கும் பெற்றோர்களை நாம் எவ்வாறு அன்புசெய்கிறோம்? பெற்றோர்கள் நம்மில் காட்டிய அன்பில் நூறுக்கு பத்து சதவீதம் திரும்ப செலுத்தினாலே பல முதியோர் இல்லங்கள் மூடப்பட்டுவிடும். தவறு செய்கின்ற மனைவியோ, கணவனோ மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும்போது இறைவனின் மன்னிக்கும் குணமும், அன்பும் வெளிப்படுகிறது.  அவர்களின் வாழ்வு இறையன்பை உலகிற்கு பறைசாற்றக் கூடியதாக மாறும். இவ்வாறு இறையன்பை தங்கள் வாழ்வில் செயல்படுத்துபவர்கள்தான் புனிதர்களாகின்றனர். 

பலியை அல்ல, இரக்கத்தையே நம் இறைவன் நாடுகின்றார்.  நம்முடைய உள்ளத்தில் வர்மத்தையும் வைராக்கியத்யையும் வெறுப்பையும் வைத்துக் கொண்டு எத்தனை ஆலய படிகளை நாம் ஏறி இறங்கினாலும் இறைவனுடைய ஆசிரையும் அவரது அன்பையும் நாம் அடைவது கடினம்.  மாறாக அவர் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறைகளை நாம் வாழும் போது இறைவனுடைய இரக்கத்தை, அன்பை அனுபவித்து அதை உலகிற்கு பறைசாற்றக்கூடிய குன்றின் மேல் இட்ட தீபமாக நமது வாழ்வு மாறும்.  வாழ்வின் குறைகள் அழிந்து புது பொலிவு பெற இறைவனிடம் மன்றாடுவோம்.  ஆமென்.

சகோ. சின்னப்பன்

புனித தோமையார் - இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி - ஜீலை 3


இன்று நம் மக்கள் மனதில் தோமா என்றால் ஐயப்பேர்வழி, சந்தேகப்புனிதர் எனும் கருத்து நிலவி வருகிறது.  ஆனால் அவர் “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” (யோவான் 20:28) என விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல் வேறு யாரும் மனம் விட்டு அறிக்கையிடவில்லையே!  இதையேதான் நாம் விசுவாச அறிக்கை ஜெபமாக கூறுகின்றோம்.

தோமாவுக்கு ஆண்டவர் மேல் தனிப்பற்று.  அதனால்தான் இயேசு இலாசரை உயிர்பிக்க செல்லும் போது மற்ற அப்போஸ்தலர்கள் அவரது உயிர்க்கு ஆபத்து என்று தடுத்தபோது, தோமா, “நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தாயாராய் இருப்போம்” என்று (யோவான் 11:16); கூறியதை சிந்தித்து பார்க்கவேண்டும்.  இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.  தோமா மட்டும்தானா ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் என்றுச் சொன்னதை ஏற்றுக் கொள்ள வில்லை?  மற்றவர்கள் எல்லோரும் “உயிர்த்த ஆண்டவரை பார்த்தோம்” என்று பெண்கள் சொன்னதை நம்பினார்களா? இல்லையே.  “அவர் உயிரோடு இருக்கிறார், என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை” (மாற்கு 16:11) சீடர்கள் நம்பவில்லை (மாற்கு 16:13) “தம்மை கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் இறுகிய உள்ளத்தோடு இருந்தமையால் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்” (மாற்கு 16:13.)

தோமா, ஆண்டவரின் விண்ணேற்பிற்குப் பிறகு ‘சென்று போதியுங்கள்’ என்ற ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு இந்தியாவிற்கு வந்து மறைசாட்சியாக மரித்தார். அவரது கல்லறையை கி.பி 1522ல் போர்த்துகீசியர்கள் சென்னை வந்த போது கண்டுபிடிதிருக்கிறார்கள். 

ஒன்பதாம் வகுப்பில் முழு ஆண்டுத் தேர்வில் எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த ஒரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான்.  காரணம் கேட்டபோது, “என் பேப்பரை வாங்கி எட்டு மாணவர்கள் காப்பி அடித்தனர்.  அவர்களை நினைத்து சிரிக்கிறேன்” என்றான்.

தேர்விலே காப்பிஅடிப்பது முறைகேடான செயல்.  ஆனால் புனிதர்களை காப்பியடிப்பது வரவேற்கத்தக்கது.  திருத்தூதர் பவுல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்” (1கொரி 11:1) என்கிறார்.  புனிதர்கள் அனைவரும் கிறிஸ்துவை மிகவும் பின்பற்றினர்.  எனவே புனிதர்களுடைய வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.  அதிலும் புனித தோமாவின் வாழ்வு நம் விசுவாச வாழ்க்கையை ஆழப்படுத்த வழிகாட்டும் வாழ்வு என்றால் மிகையல்ல.  அன்னை மரியா “நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறவில்லை.  மாறாக “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்றுதான் சொன்னார்.  புனித தோமாவும் “வாருங்கள் அவரோடு செல்வோம்” என்று (யோவான் 11:16) ல் சொல்வதன் மூலம் ஆண்டவரைப் மையப் படுத்துகிறாரே தவிர தன்னை அல்ல. எனவே தோமாவின் வாழ்வை முன்மாதியாகக் கொண்டு ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடிப்போம். 

சகோ. அந்தோணி தாஸ்

புனித சவேரியார்த் திருவிழா - டிசம்பர் 3


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! 

அகிலமெல்லாம் ஆதாயாமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையோடிருந்தவர் ஆண்டவரை நம்பி தனது ஆன்மாவை ஆதாயாமாக்கிக் கொண்டதுமன்றி ஆண்டவருக்கு அநேக ஆன்மாக்களை ஆதாயாமாக்கினார்.

அவர்தான் நமது இந்திய நாட்டின் பாதுகாவலரான புனித பிரான்ஸிஸ் சவேரியார். அத்தகைய புனிதருக்கு விழா எடுக்கின்ற நாமும் நம்மை எவ்வாறு இறைவனுக்கு உகந்தவர்களாக மாற்ற வேண்டும் என்று சிந்திந்துப் பார்க்க வேண்டும்.   புனித சவேரியார் கி. பி 1506 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள நவாரே நகரில், செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.  தமது இளம் வயதில், பேரும் புகழும் பெற்று சந்தோஷ்மான வாழ்க்கையை அமைத்து, பாரிஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று, அப்பல்கலைக் கழகத்திலேயே பேராசியராக பணிபுரிந்த போது அவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர் புனித இஞ்ஞாசியார். 

சவேரியாரின் நண்பராக மாறிய இஞ்ஞாசியார், சவேரியாரின் எதிர்கால கனவுகளையெல்லாம் அறிந்திருந்தார்.  ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம், “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவசனத்தைக் கூறியதோடு, சவேரியார் இறைவனின் கைகளில் பயனுள்ள கருவியாக மாற வேண்டும் என்று இஞ்ஞாசியார் இடைவிடாது செபித்தார். அதன் விளைவாக இயேசுவுக்கு உகந்த வாழ்வு வாழ்பவராக மாறினார் சவேரியார்.  இயேசு சபையில் சேர்ந்தவர், குருவான பிறகு மறைபரப்புப் பணியில் இறைவார்த்தையை அறிவிப்பதில் தனியாத தாகம் கொண்டார்.  

இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் உள்ள “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்” என்ற இயேசுவின் கூற்றிற்கிணங்க, இயேசு சபையின் முதல் மறை போதகராக கீழ்திசை நாடுகளை நோக்கிப் புறப்பட்டவர், 1542ம் ஆண்டு 13 மாத கால கடுமையான கடல் பயணத்திற்கு பிறகு கோவாவை வந்தடைந்தர்.  இறைபணியாற்ற இந்தியா வந்த அவர் பல சோதனைகளை சந்தித்தார்.  இந்தியா பல மொழிகளுக்கும், இனங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் பெயர் பெற்ற நாடு,  இச்சூழ்நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் நற்செய்தி பணியாற்றுவது என்பது எளிதான காரியமல்ல. எனவேதான் அவரது பணிகளில் எண்ணிலடங்கா இன்னல்களையும் இடர்பாடுகளையும் அனுபவித்தார்.  தென்னிந்தியா, இலங்கை. மலேசியா, மலாக்கா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பணியாற்றியபோது, இந்நாடுகளின் தட்பவெப்ப நிலை, பல்வேறு மொழிகளை கற்க வேண்டிய கட்டாய நிலை, உடல் நோய், மக்களிடமிருந்து எதிர்ப்பு மற்றும் விலங்குகளிடமிருந்து ஆபத்து இவை எதுவும் நற்செய்தியை அறிவிப்பதிலிருந்து அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நாடுகளில் கிறிஸ்தவ சமூகங்களைக் கட்டியெழுப்பினார். 

1549 ஆம் ஆண்டு ஜப்பானிலிருந்த கோவா திரும்பிய சவேரியார். சீனாவில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று உந்தப்பட்டவராக சென்றவர், வழியில் சாங் சுவன் சான் என்ற தீவில் நோய் வாய்ப்பட்டு 1552 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.  அவரது உடல் 1553 ஆம் ஆண்டு கோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது அவரது அழியா, புனித உடல் இன்றும் அழியாமல் இறைவனின் மகிமையை பறைசாற்றிய வண்ணம் இறைவன் அவரை உயர்த்தியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்திலே இறைவன், இறைவாக்கினர் எரேமியாவை தேர்ந்தெடுத்ததை போல புனித சவேரியாரை நாம் கிறிஸ்துவை அறியும் பொருட்டு தேர்ந்துக் கொண்டார்.  அதோடு மட்டுமல்லாமல் “அவர்கள் முன் அஞ்சாதே ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்று எரேமியாவை தேற்றிய இறைவன் நம் புனிதரோடும் இருந்து அவர் எதிர்கொண்ட இடர்பாடுகளிலெல்லாம் அவரைத் தேற்றினார்.  

இரண்டாவது வாசகத்தில் புனித சின்னப்பர் குறிப்பிடுவதைப் போல நற்செய்தி அறிவிப்பதை தம்மீது சுமத்தப்பட்ட ஒரு கடமையாக ஏற்றுக் கொண்டு எப்படியாவது சிலரையேனும் மீட்கும் பொருட்டு எல்லோருக்கும் எல்லாம் ஆனார் புனித சவேரியார். கிறிஸ்துவின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை, நற்கருணை ஆண்டவர் மீது கொண்டிருந்த பக்தி அவரது பணியை எளிமையாக்கியது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த இறைமகன் இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்குத் தோன்றி அவர்களிடம் “உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று சொல்லி நற்செய்தியை அறிவிக்க அவர்களை அனுப்புகிறார்.  அதன் அடிப்படையில்தான் புனித தோமையார் இந்தியாவுக்கு இயேசுவை அறிவிக்க வந்தார்.  அவரைத் தொடர்ந்து ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித சவேரியார் இந்தியாவிற்கு வந்து நற்செய்தியை அறிவித்தார்.  இன்று கிறிஸ்தவர்களாய் இருக்கிற நாம் நற்செய்தியை அறிவிப்பது குருக்கள், கன்னியர்கள் மற்றும் துறவறத்தாரின் பணிதானே என்று சொல்லி நாம் சும்மா இருந்து விடக் கூடாது.  ஏனென்றால் “ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நற்செய்தியை போதிக்கும் கடமை உள்ளது” என்று தாய் திருச்சபை அறிவுறுத்துகிறது.

எப்படி நற்செய்தியை அறிவிப்பது என்று சிந்திப்போமானால் அதற்கு அநேக வழிகள் உண்டு.  முக்கியமான மூன்று வழிகளை குறிந்து சிந்திபோம்.
  • நமது பங்கிலுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களில் பலர் துறவறத்தை மேற்கொண்டு நற்செய்தியை அறிவிக்கலாம்.  அதற்கு நமது குழந்தைகளை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் பக்தியில் சிறந்தவர்களாகவும் வளர்க்க வேண்டியது நமது கடமை. 
  • செபம் செய்வதன் வழியாக நற்செய்தியை அறிவிக்கலாம்.  புனித சவேரியாருக்கு அடுத்தபடியாக வேதபோதக நாடுகளின் பாதுகாவலராக இருப்பவர் சிறுமலர் என்று அழைக்கப்படுகின்ற குழந்தை தெரசம்மாள்.  சவேரியாரைப் போன்று அவர் கடல் கடந்து நாடு நாடாக நற்செய்தியை அறிவிக்கவில்லை.  நான்கு சுவற்றிற்குள் இருந்து செபத்தின் வழியாக நற்செய்தி பணியாற்றினார்.  செபம் செய்வதன் வழியாக பலரை மனம்மாற்றினார்.  பலருக்கு சுகம் கிடைக்கச் செய்தார்.  அதே போல நாமும் உடல் நோயால் வருந்துவோர்காக ஜெபிக்கலாம்.  பாவிகள் மனம்மாற ஜெபிக்கலாம். நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஈடுபடுவோர்க்காய் ஜெபிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணிக்கு தடைக்கல்லாக செயல்படுவோர்க்காக ஜெபிக்கலாம்.  
  • இயேசுவின் வார்த்தைகளைக் கடைபிடித்து சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலம் நற்செய்தியை அறிவிக்கலாம்.  இயேசுவின் போதனைகளில் முக்கியமானது அன்பு செய்து வாழ வேண்டும் என்பதாகும்.   சிறுதுளி பெருவெள்ளம் என்பதை கேள்விப்பட்டிருப்போம்.  அதே போல நமது சகோதர சகோதரிகளுக்காக சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சாட்சியாக வாழலாம்.  
புனித சவேரியர் கடல் கடந்து நாடு நாடாகச் சென்று இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்.  அவரது பாதுகாவலில் நாமும் நற்செய்தியை அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.  
  • நமது பிள்ளைகளை துறவறத்துக்கு அனுப்புவது மூலமாகவும் 
  • நாம் மற்றவர்களுக்காக செபம் செய்யும் போதும் 
  • பிறரன்பு செயல்களில் ஈடுபட்டு சாட்சிய வாழ்வு வாழ்வதன் மூலமும்இறையரசை கட்டியெழுப்புவோம். 
சகோ. ஜெரோம் பால் ராஜ்

வார்த்தை

இயேசுவில் பிரியமானவர்களே!
“உன்னால் முடியும்” என்ற பெற்றோர்களின் வார்த்தைகள் கல்லூரித் தேர்வில் தோல்வி அடைந்திருந்த வைரமுத்துவை, கவியரசு வைரமுத்துவாக மாற்றியது. “உன்னை பாடச்சொன்னதற்கு ஒரு கழுதையை பாடச் சொல்லியிருக்கலாம்” என்று ஆசியர் அவரை திட்டியபோதும்,” “கண்ணா! நீ பாடு உன் அம்மா நான் கேட்கிறேன்” என்று சொன்ன தாயின் உற்சாக வார்த்தைகள் இன்று உலகிற்கு இசை ஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தியது. “உலகம் எப்போதும் இரண்டாவதாக வருபவனை ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை” என்ற மந்திர வார்த்தைகள் குத்துச் சண்டை போட்டியில் மயங்கி கிடந்த முகமது அலியை உலகின் நம்பர் ஒன் குத்து சன்டை வீரராக மாற்றியது. ஆம்! மானுட வார்த்தைகளால் வாழ்க்கை பலம் பெறுகிறது, அதே நேரம் பலவீனம் அடைகின்றது. ஆனால் கடவுளின் வார்த்தைகள், மனிதனில் எண்ணற்ற மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
  • ‘அப்படியே ஆகட்டும்’ (லூக். 1:38) என்று சொன்ன மரியாளின் வார்த்தைகள், இந்த மனுகுலத்திற்கு அவரை அன்னையாக, உயர்த்திக் காட்டியது.
  • “ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயன் என்ன?” என்ற இறைவார்த்தைகள் சவேரியாரை புனிதராக மாற்றியது.
  • “சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு செய்தபோதெல்லாம், எனக்கே செய்தீர்கள்” (மத். 25:40) என்ற கடவுளின் வார்த்தைகள் அகில உலகம் போற்றும் அன்னையாக அன்னை தெரசாவை உயர்த்தியது.
  • “பகலில் நடப்பது போல் எப்போதும் நடப்போம், குடிவெறி, சண்டை, காமவெறி, தீய நாட்டம் போன்றவற்றை தவிர்ப்போம்” (ரோமை. 13:13)என்ற வேத வார்த்தைகள் பாவியான அகுஸ்தினாரை புனிதராக உயர்த்தியது.
  • “உன்னிடம் உள்ளதை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடு” (மத். 19:21) என்ற இயேசுவின் வார்த்தை மக்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்தோணியாரை புனிதராக மாற்றியது.
  • ஆகவேதான் நாம், கடவுளின் வார்த்தை இரு பக்கம்; கூர்மையானது, எளிதில் வெட்டக் கூடியது என்று சொல்கின்றோம். யார் எல்லாம் கடவுளின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுகிறார்களோ அவர்களை ஆண்டவர் உயர்த்துகிறார். அவர்கள் கற்பாறையின் மீது வீடுகட்டியதற்கு சமமாக கருதப்படுகிறார்கள்.
  • ஆண்டவரின் வார்த்தையை கேட்டு, தன் ஒரே மகனை பலியிடச் சென்ற ஆபிரகாம், இன்று “விசுவாசத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். (தொ. நூல்.22:1-19)
  • கடவுளின் விருப்பத்திற்கு இணங்க, கட்டாந்தரையில் கப்பல் கட்டிய நோவா இன்றும் விவிலியத்தில் போற்றப்படுகிறார். அவரது குடும்பம் காப்பாற்றப்பட்டது. (தொ. நூல். 6:14-22)
  • இயேசுவின் “எஃபாத்தா’ (மாற். 7:34) என்ற வார்த்தை, குருடனை குணமாக்கியது. “தலீத்தாகூம்” (மாற். 5:41) என்ற வல்லமையான வார்த்தை இறந்த சிறுமியை உயிருடன் எழுப்பியது. இந்த இரண்டிற்கும் உறுதுணையாய் இருந்தது இவர்கள் கடவுளின் வார்த்தை மேல் கொண்ட நம்பிக்கை.
எனவே, மெட்டி ஒலி, கோலங்களுக்கு கொடுக்கும் மதிப்பை, SMS, Internet, அலைபேசி என்று செலவழிக்கும் நேரத்தை நாம் நம் விவிலிய வார்த்தைகளுக்கு செலவழிப்போம். அப்போது கடவுளின் வார்த்தை நம்மை மனிதனாக நல்லதொரு புனிதனாக மாற்றும்…. மாற்றம் அடைவோம்.

சகோ. ஆரோக்கிய தாஸ்

தொழிலாளரான புனித சூசையப்பர் - மே 1


ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!
  • இவ்வாறு வாழ்ந்தவர் யார் தெரியமா?  
அவரே நமது புனித சூசையப்பர்.

இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது.  ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள்.  இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று.  இந்த விழா எவ்வாறு தோன்றியது.  
உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ஆம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார்.  
யார் இந்த சூசையப்பர்? 
  • மரியாளின் கணவர் சூசையப்பர்.  அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான், அயராது உழைப்பவர். (மத். 1:19)
  • தாவீதின் வழிமரபினர்தான் புனித சூசையப்பர்.  (லூக் 2:4)
  • இயேசு யோசேப்பின் மகன்.  இவர் யேசுவின் வளர்ப்புத் தந்தையாக இருந்தார். (அருளப்பர் 1:45, 6:42)
கன்னி மரியாளின் கணவரும் இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான புனித சூசையப்பரைப் பற்றி விவிலியம் மிகச் சுருக்கமாகவே எடுத்தியம்புகிறது.  நீதிமான் என்ற வார்த்தை அவர் கடவுளுக்கு மிகவும் பணிந்து நடப்பவர் எனக் காட்டுகிறது.  தச்சுத் தொழில் செய்து, தந்தைக்குரிய பொறுப்பேற்று, கணவருக்குரிய கடமைகளை நிறைவேற்றி குடும்பத்தை நன் முறையில் நடத்தினார்.  கன்னிமரியின் பேறுகாலத்திற்கு சத்திரம் தேடி அலைந்த போதும், குழந்தையை கொடுங்கோலன் ஏரோதுவின் பிடியிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு ஓடிச் சென்ற போதும் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார்.  இதன் வழியாக யேசுவின் மீட்புப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
புனித சூசையப்பர் பழையஏற்பாட்டில் காணப்படும் சூசையோடு ஒப்பிடபடுகிறார்.


சூசை

பழைய ஏற்பாட்டில்

  புதிய ஏற்பாட்டில்
  • மக்களை பஞ்சத்திலிருந்து காத்தார்.
  • சூசையை எகிப்து மன்னன் எகிப்துக்கு அதிபராக்கினான்.
  • தேவை என்று வருவோரை சூசையிடம் அனுப்பினான்.
  • மன்னன் இயேசுவை ஏரோதுவிடமிருந்து காத்தார்
  • கடவுள் சூசையப்பரை விண்ணகவீட்டின் தலைவராக்கினார்
  • உதவி என்று வருவோரை புனித சூசையப்பரிடம் செல்ல கடவுள் பணிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் முதல் ஆறு நாட்களில் உலகைப் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்று வாசிக்கிறோம். மேலும் கடவுள் மனிதனை தமது சாயலாக படைத்தார்.  ஆணும் பெண்ணுமாக படைததார்.  ஆணும் பெண்ணும் இறைவனது படைப்பு பணியிலே சமமாக பங்கேற்கிறார்கள்.  இன்றைய சூழலில் ஆண்கள் அலுவலகத்தில் 8 மணிநேரம் வேலை செய்தாலும் பெண்கள் வீடுகளில் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.  உழைத்து, உழைத்து சோர்ந்து போகிறார்கள்.  இன்றைய சூழலில் நாம், அப்பா ஆசிரியராக இருந்தால் வாத்தியார் மகன் என்றும் அரசியல் வாதியாக இருந்தால் ஆடுயு மகன் என்றும் மருத்துவராக இருந்தால் டாக்டர் மகன் என்றும் அவர்கள் செய்யும் தொழிலை கொண்டு பிறரை நாம் இனம் கண்டு கொள்கிறோம்.
  
இன்றைய நற்செய்தியில் கூட இயேசுவை, அவரது வளர்ப்பு தந்தையாகிய சூசையின் தச்சுத் தொழிலை கொண்டே இனம் கண்ட மக்களைப் பற்றி மத்தேயு எழுதிய நற்செய்தி குறிப்பிடுகிறது.  சூசையப்பரின் தொழில் இன்றைய கம்பியூட்டர் உலகிலே மிகச் சாதரணமாகப் பார்க்கப்படும் தச்சுத்தொழில்.  அவர் ஒரு கூலித் தொழிலாளி’.  ஆனால் அன்று அது மேன்மையாக கருதப்பட்டது.  உடல் உழைப்புக்கு மாண்பும், மதிப்பும் இருந்தன.  ஆனால் இன்றோ சேற்றில் இறங்கி உழைப்பவனும், உலைகளத்தில் நெருப்பில் வெந்து சம்மட்டி அடிப்பவனும், சாக்கடையை சுத்தம் செய்பவனும், வேகாத வெயிலிலே பாரவண்டி இழுப்பவனும், யுஃஉ அறையில் வேலை செய்பவர்களுக்கு இழுக்கானவர்கள், மட்டமானவர்கள் என கருதுகின்றனர்.

மாறாக செய்யும் தொழிலே தெய்வம்.  அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும்.  தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மை, அதை செய்யும் நேர்த்தி மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும்.  மட்டமான தொழில்கள் எனப்படும் வேலைகளும் செய்யப்பட்டால்தான் படித்த, புத்தி கூர்மையுள்ள தொழில் செய்வோர்களால் முழுமையாக செயல்பட முடியும்.  உழவன் சேற்றிலே கால் வைத்தால்தான் நாம் சோற்றிலே கை வைக்கமுடியும்.  எனவே எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அது சமுதாயத்திற்கும், உலகிற்கும் பயன் அளிப்பதாக இருந்தால் அதைப்பற்றி மேன்மை படுத்துவோம்.  எனவே கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

இன்று நாம் விழா கொண்டாடும் புனிதராம் சூசையப்பரிடம் நாம் கற்றக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா பணிகளும் மதிக்கப்படவேண்டும்.  எல்லாப்பணியாளர்களும் இறைவனது படைப்பு பணியிலே ஒத்துழைப்பவர்களாவார்கள்.  எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.  சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்து பார்க்கும் மனநிலை மாற வேண்டும்.  உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும் மனைவிக்கும் சூசையப்பர் ஒரு சிறந்த முன் மாதிரியாவார்.

எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும்; தவறானதாகும். .  நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம்.  அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.  நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.        ஆமென்…..


திருத்தொண்டர் பர்னபாஸ்
(2007- 2008)