அடக்கச் சடங்குமுறை


இறந்தவர் இல்லத்தில்

குரு: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவரர் இயேசுகிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம்.

(தீர்த்தம் தெளித்தபின், 130-ம் திருப்பாடல்)
குரு: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

1.ஒருவர்: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
2.ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பவர்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
3.ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன், என் நெஞ்சம் காத்திருக்கின்றது, அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4.விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம்,விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞசம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
5. இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலை மீட்பவர் அவரே.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: செபிப்போமாக.
ஆண்டவரே, உமது இரக்கத்தை கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டகன்ற உம் அடியார் (பெயர்) உடைய ஆன்மாவை அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதருடைய தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

ஆலயத்துக்குப் பவனி

(இத்திருப்பலியில் பங்கேற்பவர் ஏற்கெனவே வேறொரு திருப்பலியில் நன்மை வாங்கிருப்பினும், மறுமுறையும் இத்திருப்பலியில் நன்மை உட்கொள்ளலாம். நன்றி மன்றாட்டு முடிந்ததும், தொடர்ந்து குருவும் பணியாளரும் சவப் பெட்டி அருகே சென்று மக்களை நோக்கி நிற்கின்றனர்.)

குரு: விசுவாசிகளின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்றக் கூடியிருக்கும் நாம், இறைவனைப் பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலுவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்வதாலும், புனிதரின் வரிசையில் இது வல்லமையுள்ளதாக உயிர்த்தெழச்செய்வாராக. இவரது ஆன்ம புனிதரின் கூட்டத்திலே இடம்பெறக் கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும்போது இறைவன் இவருக்கு இரக்கம் காட்டுவதால் சாவே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. பிதாவிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் என்றென்றும் வாழும் மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும் புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.

பிரியாவிடை எதிர் பாடல்....
இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க.
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

(அல்லது கீழ்கண்ட பாடல்)

சென்று வா கிறிஸ்தவனே உலகை
வென்றுவிட்டாய் நீ விசுவாசத்தால்!
சரணங்கள்
உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப,
உற்ற துன்பத்தில் ஆறுதலாய்,
உதவும் திருச்சபை அருகிருக்க!
இறைவனின் புனிதரே துணைவருவீர்!
தேவனின் தூதரே வந்தழைப்பீர்!
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்!
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்!
படைத்த தந்தை உனை ஏற்பார்!
மீட்ட திருமகன் உனைக் காப்பார்!
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்!
அனைத்து புனிதரும் உனைச் சேர்வார்!
(பாடல் முடிந்ததும் குரு தொடர்ந்து செபிப்பார்.)

குரு: கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும் இவரும் இறுதி நாளில் உயிர்த் தெழுவார் என்னும் உறுதியான நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே, உம்முடைய கைகளில் எம் சகோதரரின் (சகோதரியின்) ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.
எனவே, ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்குத் தயவாய் செவி சாய்த்து, உம் அடியாருக்குப் பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்தருளும். மேலும், இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் கிறிஸ்துவை சந்தித்து, உம்மோடும் உம் சகோதரரோடும் (சகோதரியோடும்) எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்குமட்டும் விசுவாசம் நிறைந்த சொற்களால் ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(பிரியாவிடைச் சடங்கு முடித்து இறந்தவர் உடலைக் கல்லறைத் தோட்டத்திற்குத் தூக்கி செல்கையில் கீழ்வரும் பாடல் இடம்பெறலாம்.) 



இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)
தீயவை யாவும் விலகிடுக - 2 - அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)
புனிதர் வான தூதருடன் - 2 - உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி

இறைவா இவரது திருப்பயணம் 
இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம்!
சரணங்கள்
பாஸ்காப் பயணம் இதுவே தான்.
கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான்,
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு,
இசைந்து செல்லும் வழி இது தான்.
அடிமைத் தலையை அறுத்தெரிந்து,
ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள்,
உரிமை நாடு கடந்து சென்றார்,
உண்மை இங்கு நடப்பது தான்!
சிலுவை சுமந்த வழியினிலே,
சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே!
சிலுவை பதித்த சுவடுகளில்
சீடர் இருவரும் செல்கின்றார்!
துன்பத்தின் வழியாய் திருச்சபையும்,
தூரப் பயணம் போவது போல்,
பயணத்தின் முடிவில் இவ்வடியார்
பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!
விண்ணக விருந்து உண்டிடவே,
விரைந்து செல்லும் இவ்வடியார்,
திருமகன் வந்து பார்க்கையிலே,
திருமண உடையுடன் திகழ்ந்திடவே!
ஆண்டவர் அழைத்த நேரத்திலே,
அணையா விளக்குடன் ஆயத்தமாய்,
உடனே செல்லும் ஊழியராம்,
உண்மையில் பேறுபெற்றவரே!
அந்நிய நாட்டின் எல்லைதனை,
அடியார் இவரும் கடந்துவிட்டார்.
தாயகம் திரும்பும் பயணியிவர்,
தவறாது தன்வீடு சேர்ந்திடவே!
எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்!
என்றும் அவரோ டிருப்பதுதான்!
இழப்பு அனைத்தும் அவரின்றி
இறப்பு ஆதலின் ஆதாயம்!

கல்லறைத் தோட்டத்தில்

குரு: செபிப்போமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சிக்கின்றீர். எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும் உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே. உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(குரு கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம்காட்டுவார்) 

குரு: நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்றும் தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும் படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.

விசுவாசிகள் மன்றாட்டு

உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் என்று உரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுகிறோம். 
- இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே, எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- இறந்தோர் உயிர் பெற்றெழச் செய்தீரே, எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- மனந்திரும்பிய கள்ளனுக்கு நீர் வானகம் தருவதாய் உறுதியளித்தீரே, எங்கள் சகோதரரையும் (சகோதரியையும்) வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எங்கள் சகோதர ( சகோதரியை ) ஞானஸ்நான நீரினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திரு விருந்தாக அளித்தீரே, வானரவின் விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரரின் (சகோதரியின்) பிரிவாற்றமையால் துயருரும் நாங்கள் விசுவாசத்திலும், நித்திய வாழ்வின் நம்பிக்கையினாலும் ஆறுதல் பெற உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(அனைவரும் சேர்ந்து கர்த்தர் கற்பித்த செபம் சொல்ல, குரு இறந்தவரின் உடல்மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுகிறார்.)

செபிப்போமாக
ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீய செயல்களுக்குத் தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான விசுவாசம் இவ்வுலகில் இவருக்கு விசுவாசிகளின் கூட்டத்தில் இடம் அளித்தது போல், உமது இரக்கம் இவரை மறுவுலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

முதல்: ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
துணை: முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.
(இறந்தவரின் உடலை கல்லறையில் வைக்கும் போது அல்லது குழியை மூடும் போது கீழ்வரும் பாடல் பாடலாம்)

இறுதிப் பாடல்

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு ஓயாத்
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2

1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னை
துதித்திட அருள் செய்வாய் புரிந்து

2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்

3 கருத்துகள்: