Parents Meeting at Poondi - 13 February 2010

பூண்டி மாதா திருத்தலத்தில் குருமாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல்

உலகின் மாபெரும் மனிதரை, தலைசிறந்த தலைவரை, இறைவாக்கினரை, பெரிய குருவை உருவாக்கிய அன்னை மரியாவின் வழிகாட்டுதலில், பூண்டி அன்னையின் திருத்தலத்தில் குடந்தை பொதுநிலையினர் பணிக்குழுவுடன் இணைந்து திரு இருதய குருமடத்தின் சார்பாக பிப்ரவரி 13 – 14 நாள்களில் குருமாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடந்தை மறைமாவட்டத்திற்காக குருக்களாக பயிற்சி பெறும் 54 குருமாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தோர்கள் என 80 பேர் ஆர்வமுடன் பூண்டி அன்னையின் திருத்தலத்திற்கு வருகை தந்து இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்நாளில், இறுதியாண்டு குருத்துவ பயிற்சியிலுள்ள திருத்தொண்டர்கள் பெற்றோர்களை வரவேற்று பெயர்களை பதிவு செய்தனர். வந்தோரை வரவேற்ற பின் குடந்தை பல்நோக்கு சமூக சங்கத்தின் உதவி செயலர், அருட்பணியாளர் எஸ். அல்போன்ஸ் அவர்கள் சமூக பகுப்பாய்வு பற்றிய கருத்துரைகளை வழங்கினார். தற்போதைய சமய, சமூக, பொருளாதார, அரசியல், குடும்ப சூழல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கோடிட்டு காட்டினார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் தமிழக பொதுநிலையினர் பணிக்குழு செயலர், அருட்பணியாளர் இரட்சண்யதாஸ் அவர்கள் திருச்சபையில் பொதுநிலையினரின் பங்கேற்பைப் பற்றி விவரித்தார். குறிப்பாக புனித்தப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி, இறைவாக்கு உரைக்கும் பணி ஆகிய முப்பணிகளில் குருமாணவர்களின் பெற்றோர்களும் ஈடுபட வேண்டுமென அறிவுறித்தினர்.

மதிய அமர்வில் தமிழக இறையழைத்தல் பணிக்குழு செயலர், அருட்பணியாளர் சகாய ஜான் அவர்கள் குருமாணவர்களின் இறையழைத்தலிலும் உருவாக்கத்திலும் பெற்றோர்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.

பின்னர் திரு இருதய குருமட அதிபர், அருட்பணியாளர் G. கிறிஸ்துராஜ் தற்காலத்தில் குருத்துவ பயிற்சியிலுள்ள சவால்கள் மற்றும் மாற்றங்களையும் குருத்துவ பயிற்சியின் ஒழுங்குமுறைகளையும் பகிர்ந்து கொண்டார். பின்னர் பெற்றோர்களும் அழைத்தல் மற்றும் மாணவர்களை உருவாக்குவதில் தங்களின் எடுத்துக்காட்டான கிறிஸ்தவ வாழ்வினால் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதி கூறினர்.

மாலை 5.15 மணியளவில் அன்னையின் திருத்தலதில் பக்தர்களுடன் இணைந்து பெற்றோர்கள் திருப்பலியில் பங்கெடுத்தனர். அதன் பின்
பூண்டி பேராலய பொருளாளர், அருட்பணி முனைவர் ச.இ. அருள்சாமி அவர்கள் பங்கு மேய்ப்புப் பணி மற்றும் குருத்துவ பயிற்சியில் தனது நீண்டகால அனுபவத்தை பகிர்ந்து கொண்டு பெற்றோர்களின் எளிய, சாட்சிய வாழ்விற்கான அறைகூவல் விடுத்தார்.

இரவு உணவிற்கு பின் திருத்தல வளாகத்தை சுற்றி பவனியாக வந்து அன்னையின் செபமாலையுடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.

14-2-2010 ஞாயிறு அன்று காலை அமர்வில் குடந்தை மறைமாவட்ட ஆவணக் காப்பாளர், அருட்பணியாளர் A. அருள் பிரகாசம் அவர்கள் ”தலைமைத்துவம் பற்றிய ஓர் பார்வை” என்ற தலைப்பில் இயேசுவின் வழியில் சிறந்த தலைவர்களை உருவாக்குதில் பெற்றோர்களின் தலைமைப் பொறுப்பைப் பற்றி எடுத்துரைத்தார்.

பின் பூண்டி பேராலய பங்குத்தந்தை, அருட்பணியாளர் P. சகாயராஜ் வழிகாட்டுதலில் ஒப்புரவு வழிபாடு நடந்த்து. மக்கள் அனைவரும் பங்கேற்று ஒப்புரவு அருள்சாதனத்தை பெற்றுக் கொண்டனர். 11.30 மணியளவில் அன்னையின் பேராலயத்தில் குடந்தை மறைமாவட்ட ஆயர், மேதகு F. அந்தோனிசாமி D.D., S.T.L. அவர்களின் தலைமையில் குருமாணவர்களின் பெற்றோர்களுக்கான சிறப்பு திருப்பலியில் அனைவரும் பங்கெடுத்தனர்.

குடந்தை மறைமாவட்ட பொதுநிலையினர் பணிக்குழு செயலர் மற்றம் பவனமங்கலம் பங்குத்தந்தை, அருட்பணியாளர் இயேசு ராஜ் அவர்கள் வடகிழக்கு இந்தியாவில் பழங்குடி இனமக்களிடையே தான் பணியாற்றிய அனுபவத்தையும் குருமாணவர்களின் பயிற்சி காலத்திலேயே இத்தகைய வேதபோதக ஆனுபவத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினர்ர்.

மதிய உணவிற்கு பின் ஆயர் அவர்கள் பெற்றோர்களை சந்தித்து பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் முக்கிய பங்கை உணர்த்தினர். மாணவர்கள் நல்ல குருவாக இருந்தாலும் அல்லது வழிமாறினாலும் பெற்றோர்கள்தான் முழுப்பொறுப்பு என்பதையும் சுட்டிக் காண்பித்தார்.

ஒவ்வொரு நிகழ்விலும் பெற்றோர்கள் ஈடுபாட்டுடன் பங்கெடுத்தனர். சிலர் எழுப்பிய வினாக்களுக்கும் விளக்கம் தரப்பட்டது.

குருமாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து திருப்பலி ஆற்றி ஆசியுரை வழங்கிய குடந்தை மறைமாவட்ட ஆயர், மேதகு F. அந்தோனிசாமி D.D., S.T.L. அவர்களும், தாயுள்ளத்துடன் இரண்டு நாள்கள் பெற்றோர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் ஆன்ம தேவைகளுக்கும் உதவிய பேராலய தந்தையர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த நிகழ்வுக்கு செயல் வடிவம் கொடுத்து இனிது நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்த குடந்தை மறைமாவட்ட பொதுநிலையினர் பணிக்குழு செயலர் மற்றம் பவனமங்கலம் பங்குத்தந்தை, அருட்பணியாளர் இயேசு ராஜ் அவர்களும், பெற்றோருடன் எந்நேரமும் உடனிருந்து உதவிய குடந்தை மறைமாவட்ட திருத்தொண்டர்களுக்கும், பேராலய பணியாளர்களுக்கும் நன்றி கூறி அன்னைக்கு புகழ்பாடல் பாடி இரண்டு நாள்கள் குருமாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிறைவுப் பெற்றது.

இறையசீருடன், அன்னையின் பாதுகாவலும், பக்தர்களின் பரவசமும், பெற்றோர்களிடைய புதிய நட்புறவும், கருத்துரையாளர்களின் சிந்தனைகளையும், பேராலய தந்தையர்களின் விருந்தேபலையும் மனதில் தாங்கியவர்களாய் தங்கள் ஊர் திரும்பினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக