மரியாளும் நற்கருணையும்

திருமண ஓலை எழுத வந்த மணமகனிடம் பங்கு தந்தை “நற்கருணையில் இருப்பது யார்?” என்று கேட்டதற்கு அவர், “பதுவை அந்தோணியார்” என்றார். பங்கு தந்தை அவருடைய அப்பாவைக் கூப்பிட்டு “என்ன, உங்க மகன் நற்கருணையில் பதுவை அந்தோணியார் இருப்பதாகச் சொல்றான்” என்றார். அப்பா மகனிடம் “ஏண்டா அறிவு கெட்ட முண்டம், நற்கருணையில் சகாய மாதா இருப்பது கூட உனக்குத் தெரியாதா?” என்ற கேட்டுக் கன்னத்தில் அறைந்தார். அப்பா நிலை இப்படி என்றால் மகன் நிலை எப்படி இருக்கும்?
எல்லாம் வல்ல இறைவனுக்குத் தாயாகவும் அவருக்கு மகளாகவும், நம் எல்லாருக்கும் தாயாகவும் இருக்கின்ற நிலை இது யார் நற்கருணை இறைமகன் இயேசுவை உண்மையாக இதயக் குடிலில் வைத்து வளர்த்து அந்த அனுபவத்தைப் பகிர்கின்றார்களோ அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குத் தாயாக, மகனாக, மகளாக, எல்லாருக்கும் தாயாக இருக்கமுடியும்.
காலம் சென்ற நமது திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2004 அக்டோபர் முதல் 2005 அக்டோபர் வரை உலகத் திருச்சபையின் கவனத்தை நற்கருணையில் செலுத்தக்கேட்டுக்கொண்டு திருச்சபை என்ன செய்ய வே;ணடும் என்று ஆயநெ ழேடிளைஉரஅ னுழஅiநெ ஆண்டவரே எம்முடன் தங்குவீர் என்ற மடல் வழியாக நம்மை ஊக்குவிக்கின்றார்.
இயேசுகிறிஸ்து உயிர்த்த பிறகு திருத்தூதர்களுக்குத் தோன்றி தான் உண்மையிலேயே அவர்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்தி, தனது பிரசன்னத்தை அவர்களில் ஆழப்படுத்தியதை விவிலியத்தில் நாம் காணுகின்றோம். எம்மாவுசுக்குச் செல்லும் வழியில் சீடர்களுக்குத் தோன்றி இறைவார்த்தையை ஒரு வழிப்போக்கன் போல அவர்களுக்கு எடுத்தியம்பி அவர்களின் இதயத்தை உருக்கியதையும் அப்பம் பிடுதலில் அவர்களின் கண்கள் திறக்கப்பட்டு இயேசுகிறிஸ்துவை ஆண்டவர் என்று ஏற்று அதை மற்றச் சீடர்களுக்கு அறிவித்ததையும் விவிலியத்தில் வாசிக்கிறோம்.
நற்கருணை அருட்சாதனம் மற்ற அருட்சாதனங்களிலிருந்து வேறுபட்டது. மற்ற அருட்சாதனங்களில் அதாவது திருமுழுக்கு, பாவமன்னிப்பு, நோயில் பூசுதல், குருத்துவம் இவைகள் இந்த நேரத்தில் அந்த வசீகர வார்த்தையை உச்சரிக்கும்போதுதான் அருள் வழங்குகிறது. கிறிஸ்துவின் பிரசன்னம் கொண்டுவரப் படுகின்றது. ஆனால் அவர் நற்கருணையில் உன்னதமான முறையில் எப்பொழுதும் நின்று பிரசன்னத்தை நிரந்தரமாக்குபவராக இருக்கின்றார். எப்போது அருட்பொழிவுப்பெற்ற குரு வசீகர வார்த்தைகளைச் சொல்லி அப்பத்தையும் இரசத்தையும் அர்ப்பணம் செய்கின்றாரோ அப்பொழுதிலிருந்தே அதில் உண்மையாகவே கிறிஸ்து பிரசன்னமாகியுள்ளார்’என்பது திருச்சபை நமக்குக் கற்பிக்கின்ற சத்தியம்.
நற்கருணை திருச்சபையின் ஆதாரம், ஊற்று, மையம், நற்கருணையில் உண்மையாகவே கிறிஸ்து இருக்கிறார் என்பதைத் திருச்சபையின் ஆட்சிப்பீடம் திட்டவட்டமாகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. ஏனெனில் விவிலியத்தில் குறிப்பிடுவது போல் இயேசு கிறிஸ்துவே இதை நிறுவியுள்ளார்.
தூணிலும் துரும்பிலும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஏன் குறிப்பாக இந்த அப்ப வடிவில் இருக்கின்றார் என்பதை நம்ப வேண்டுமென்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனை ஏன் கோயில்களிலும் மற்றும் மதக்குருக்கள், பெரியவர்கள் சொல்கின்ற இடங்களிலும் தரிசிக்கின்றோம் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பே. இதற்கு நமது இந்திய தமிழகச் சூழலில் ஒரு கதை சொல்வார்கள். பசுவின் இரத்தம் தான் பாலாகிறது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. இவ்வாறு பாலாகின்ற இரத்தம் பசுவின் உடல் முழுவதும் இருந்தாலும், பால் என்று வரும் போது பசுவின் கன்றோ அல்லது அதை வளர்க்கின்ற மனிதனோ, பாலைக் கறப்பது அல்லது பெறுவது பசுவின் உடலில் அவன் நினைக்கின்ற இடங்களிலெல்லாம் அல்ல. மாறாக பசுவின் மடியில் மட்டும்தான் பால் சுரக்கின்றது. அது பசுவின் மடியில் கை வைத்துக்கறக்கும்போது தான் அல்லது கன்று தன் தாய்ப்பசுவின் மடியை முட்டிச்சுவைக்கும்போது தான் பால் சுரக்கின்றது. கன்றுவின் பசி போகின்றது. இதே தான் மனிதனுக்கும் தாயின் மடியில் மட்டும்தான் பால், மற்ற இடமெல்லாம் இரத்தம்தான். அதேபோன்று இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நற்கருணையாக வசீகரிக்கப்பட்ட அப்பத்திலும் இரசத்திலும் உண்மையாகவே இருக்கிறார்.
அன்னை மரியாள் போன்று ஆண்டவரைத் தமது உடலில் வைத்து வளர்த்து ஆளாக்கி அந்த உலகம் வாழத்தம்மையே அர்ப்பணிக்கும் அவரின் கருவிகளாக நாம் வாழ்ந்தாலே நாமும் அன்னை மாயின் அன்புப் பிள்ளைகளாக இருந்து அகமகிழ்ந்து ஆர்ப்பரித்து ஆண்டவரின் அற்புதச்செயல்களை எடுத்துக்கூற முடியும். இதை இறை நற்கருணை அனுபவம் என்றும்; இயேசு அனுபவம் என்றும் கூறலாம். இந்த அனுபவம் பெற்றவர்கள் அன்னை மரியாளின் பக்தர்களாகத்தான் இருக்கமுடியும்.
இறைவனின் உண்மையான உருவை, உடலை, இரத்தத்தைத் தனது உடலில் வாங்கியவர் அன்னை மரியாள். எனவேதான் நற்கருணையின் முதல் அனுபவத்தைப் பெற்றவர் அன்னை மரியாள் என்று கூறமுடியும். தூய ஆவியின் நிழலால் இறைவனைத் தாங்கிய மரியாள் அகமகிழ்ந்து அக்களித்து ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு ஏற்றவாறு மலைநாடு சென்று அவரின் பிரசன்னத்தை மற்றவர்களுக்கு வெளிக்கொண்டு வருபவராகக் காட்சி தருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக