வியாகுலத் தாய்
அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவள் உம்முடனேஎன்று வானதூதர் சொல்லக்கேட்ட அந்த நிகழ்வு மட்டுமே அன்னைக்கு ஒருவேளை மகிழ்ச்சியான நேரமாக இருந்திருக்கும். மரியாளுக்கு மங்கள செய்தி கிடைத்தாலும் எல்லாமே மங்களகரமாக இருந்ததா என்று பார்க்கும்போது இல்லையென்றுதான் தெரிகிறது.
நிறைமாதக் கர்ப்பிiணியாய் பெத்லகேமுக்குக் கணவருடன் போன போது இடமில்லை என்று எல்லோரும் கதவைச் சாத்திய போதும் சரி,
உன் உள்ளத்தை ஒரு வாள் ஊருவும்என்று சிமியோன் முன்னுரைத்ததைக் கேட்ட போதும் சரி, ஒரு கொலைகார அரசனுக்குப் பயந்து, பச்சிளம் குழந்தையோடு அந்நிய நாட்டிற்கு அகதியாய் ஓடியபோதும் சரி, மரியாள் கலங்கிப்போய்விட்டாள். கோயிலில் காணாமல் போன சிறுவன் இயேசு ‘ஏன் என்னைத் தேடினீர்கள் என்று கேட்டபோதும் சரி, தன் மகன் மயக்கத்தில் இருக்கிறான், புத்திமாறிப்போனான் என்று ஊரார் பேசியபோதும் சரி தன் ஒரே மகனை உலகம் பழிகாரனாக கொலைகாரனாக தேசத்துரோகியாக பார்த்தபோதும் சரி துடித்துப்போனாள். தன் மகன் சிலுவை சுமந்துகொண்டு வந்ததைக் கண்ட தாய் கலங்கிப்போனாள்.அன்னை மரியின் இதயத்தை வாள் ஊடுருவியது: இரத்தம் உள்ளுக்குள் கசிந்தது.
ஆசீர்வதிக்கப்பட்டவள் அவல நிலை காண்கிறாள்.
செருக்குற்றோரை சிதறடித்தார், தாழ்ந்தோரை உயர்த்தினார்என்று ஆனந்த பள்ளு பாடிய மரியாள் நிஜமான போர்க்களத்தில் தன் மகனை சந்திக்கிறாள். சென்ற இடமெல்லாம் நன்மை தவிர வேறெதுவும் செய்யாத தன் மகனை – அன்பைத் தவிர வேறெதுவும் அறியாத தன் மகனை இந்நிலையில் காணும் இந்தத் தாய் எப்படிப் பரிதவித்திருப்பாள்
தாயும் சேயும் சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் பேசிக்கொண்டதாக எதுவுமே எழுதப்படவில்லை. பேசிக்கொள்ள என்ன இருக்கிறது? அவர்கள் கண்கள் கண்ணீரில் மறைந்து துயரத்தில் சந்திக்கின்றன. “மகனே, எங்களுக்கு ஏன் இவ்வாறு செய்துவிட்டாய்?” என்று ஆலயத்தில் கேட்ட அதே கேள்வியை அன்னை கேட்காமல் கேட்கின்றாள்.
அம்மா என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டுள்ளேனே தெரியவில்லையா?என்று அன்று சொன்ன பதிலை இயேசு சொல்லாமல் சொல்கிறார்”.
ஆனால் உலகில் எந்த தாய்க்கும் ஏற்படாத இதயத்தை பிளக்கும் கொடூரமான நிகழ்ச்சி சடலமான தனது மகனின் உடலை மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது: அத்தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்.
33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குளிர்ந்த இரவில் விரிந்த மொட்டு இப்போது வாடி வதங்கி உதிர்ந்து கிடப்பதைப்பார்த்து அன்னை கதறி அழுகிறாள். மடை திறந்தாற்போல பெருக்கெடுத்து வரும் தாயின் கண்ணீர் மகனின் உடலை நனைக்கிறது.
இறைவனின் வார்த்தையைக் கருத்தாய்த் தாங்கியவள், இறைமகனைக்கருவில் குழந்தையாய்த் தாங்கியவள், இப்போது அவரது உயிரற்ற உடலை மடியில் தாங்குகிறாள்.
இயேசுவின் பணி வாழ்வில் இனிதான பொழுதுகளில் இணைந்திருந்த சீடர்கள் இன்னல் வந்தபோது ஓடி விட்டார்கள். ஆனால் இயேசுவின் இனிய பொழுதுகளில் தன்னை வெளிக்காட்டி கொள்ளாத அன்னை மரியாள் இயேசுவின் கல்வாரி பாடுகளில் தன்னை முழுவதும் கரைத்துக்கொண்டார். சிக்கல்கள் வந்தபோது ஒதுங்கி கொள்ள வேண்டுமென்று மரியாள் நினைத்ததில்லை. கல்வாரிக் குன்றில் தன் கருணைமகன் காகிதத்துண்டுபோல் கிழிக்கப்பட்டபோது அந்த சிலுவையின் நிழலில் உடைந்த இதயத்தோடு மௌனமே வடிவமாய் மரியாள் நின்றார்.
தனது வியர்வைத் துளிகளாலும் உதிரத் துளிகளாலும், ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி உயர் நிலையில் உட்கார வைத்த தெய்வீகத்தின் மனித மொழிபெயர்ப்பாகிய அம்மாவை கண்கலங்க வைக்கும் மனிதர்களே கேளுங்கள். உங்களின் கொண்டாட்டங்களில் அவளை நீங்கள் சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் திண்டாடும்போது உங்கள் கண்ணீரைத் துடைக்கும் கருணை வடிவம் நீங்கள் ஓதுக்கித் தள்ளிய உங்கள் அம்மாதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவள் கண்விழித்த நாட்களை குழந்தைகள் அறியமாட்டார்கள். எனவேதான் முதுமைக் காலத்தில் அவளுக்காக குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. மனைவியைக் கண்ட மகிழ்ச்சியில் தூக்கி வளர்த்த அன்னையை தூர எறிகிற புதல்வர்கள், நாளைக்கு நடக்கப்போவதைப் பற்றி எண்ணுவதில்லை. வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்து ஒடாய்த்தேய்ந்துபோன பெற்றோர்கள் பிள்ளைகளாலேயே கைவிடப்பட்டு தெருக்களில் பிச்சையெடுப்பதை நாம் காண்பதில்லையா?
உறவுகளுக்கெல்லாம் முதன்மையான உறவு தொப்புள் கொடி உறவு. அதாவது தாய்-சேய் இரத்த உறவு. வீட்டிலும் தாலிக்கொடி உறவு வந்ததும் தொப்புள் கொடி உறவு தரையில் தள்ளப்பட்டு மிதிபடுகிறது. மனைவியின் பேச்சைக்கேட்டு ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை வீட்டை விட்டே விரட்டுகின்றனர். தங்களுடைய வீட்டுக்கு ‘அன்னை இல்லம்‘ என்று பெயர் சூட்டிவிட்டு தங்களுடைய அன்னையை அனாதை இல்லத்தக்கோ, முதியோர் இல்லத்துக்கோ விரட்டி விடுகின்றனர்.
ஒரு மாவட்ட ஆட்சியர் ஓர் அனாதை இல்லத்தைத் திறக்கச்சென்றபோது அங்கே தம் அப்பாவைக் கண்டு வெட்கத்தால் தலைகுனிந்தார். கொடுமையிலும் கொடுமை!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே. நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயின்றி வேறில்லை’ . காலையில் எழுந்ததும் கைதொழும் தேவதை அம்மா. அம்மாவின் அன்புக்கு முன் வானம் பூமி யாவும் சிறியதே…” இவை அனைத்தும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத வெறும் தத்துவப்பாடல்களாக நின்று விடுகின்றன.
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள் நீடிக்கும்படி உன் தந்தையையும் தாயையும் போற்று (விப 20:12)மகன் தன் அப்பாவை அடித்து வீட்டுக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனான். அப்போது அப்பா அழுதுகொண்டு “மகனே, என் அப்பாவை வீட்டுக்கதவு வரை தான் இழுத்துக்கொண்டு போனேன். ஆனால், நீயோ என்னை வீதிக்கே இழுத்துக்கொண்டு போகிறாயே” என்றார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் பிறருக்கு முற்பகல் செய்யும் தீமை பிற்பகல் நம்மை வந்தடையும்.
ஒரு மனைவி தன் கணவரின் கல்லறைக்குச் சென்று அவரை வானளாவப் புகழ்ந்து பல அடைமொழிகள் கூறி அழுதாள். கணவரின் ஆவி அவளிடம்,”நான் உயிரோடு இருந்தபோது இப்படி என்னைப்புகழ்ந்திருந்தால் நான் இறந்திருக்கவே மாட்டேன்” என்றதாம். பலர் தங்களுடைய பெற்றோர் இறந்தபின் அவர்களை மேளதாளத்துடன் வாண வேடிக்கையுடன் பூச்சொரிந்து ஊரார் மெச்சும் வண்ணம் அடக்கம் செய்கின்றனர். இறந்த பெற்றோரின் ஆன்ம சாந்திக்காக ‘கிரகோரியார் திருப்பலி’ (30 நாள்களுக்குத் தொடர்ந்து) ஒப்புக் கொடுக்கின்றனர். பளிங்குக் கல்லறைகளைக் கட்டுகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் உயிரோடு வாழ்ந்தபோது அவர்களை மதிக்கவோ பராமரிக்கவோ இல்லை. இரண்டு கண்ணும் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு?
ஒரு பாட்டிக்கு நான நோயில் பூசுதல் அருளடையாளம் வழங்கினேன். அப்போது அப்பாட்டி தன்னுடைய ஒட்டிப்போன வயிறைக்காட்டி “பத்துப்பிள்ளைகளைப்பெற்ற வயிறு பட்டினியாகக் கிடக்குது” என்று சொல்லி அழுதார். ஒரு தாய் பத்துப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க முடிந்தது. ஆனால் பத்துப் பிள்ளைகளும் சேர்ந்து அத்தாய்க்குச் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. தாய் தன்னுடைய பிள்ளைகளைச் சுமையாகக்கருதவில்லை. ஆனால் பிள்ளைகள் தங்களுடைய தாயைச் சுமையாகக் கருதுகின்றனர். காலத்தின் கோலம்.
உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட. உன் தாயின் பேறுகாலத்துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து (சீஞா 7:27-28)முதுமையில் பெற்றோர் அறிவுத்திறன் குறைந்து, குழந்தைகளைப்போல செயல்பட்டு எரிச்சல் ஊட்டும் வகையில் நடக்கின்றனர். அந்நிலையில் அவர்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்.
உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி. அவரை இகழாதே(சீஞா 3:12)பழைய ஏற்பாட்டில் நோவா என்பவர் குடிபோதையில் நினைவிழந்து ஆடையின்றி இருந்ததைக்கண்ட அவருடைய மகன் காம் என்பவன் தன்னுடைய இரண்டு சகோதர்களான சேம், எப்பேத்து என்பவர்களைக் கூப்பிட்டுத் தன் தந்தையின் நிர்வாணத்தைக்காட்டி ஏளனம் செய்தான். ஆனால், அவ்விரு சகோதரர்கள் தங்களுடைய தந்தையின் உடல்மேல் போர்வை ஒன்றைப் போர்த்தினர். நோவா நினைவு தெளிந்து, நடந்ததை அறிந்து, காம் என்பவனைச் சபித்தார். சேம், எப்பேத்து என்ற இருவரையும் ஆசீர்வதித்தார் (தொநூ 3:20-27). பெருந்தன்மை உடையவர்கள் மற்றவர்களுடைய குறைகளை மறைப்பர். ஆனால் சில்லறைப் புத்தியுள்ளவர்கள் பிறருடைய குறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக