எங்கே மனிதம்?


மனிதன் மனிதனாய் இருந்தான்.
மறைந்திட்ட மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதன் வாழ்கிறான் என்று...!
மனிதன் மிருகமாய் உருமாறினான்
காட்சிதந்த மனிதம் சொல்லிக்கொண்டது
மனிதனா வாழ்கிறான்? என்று....!
வாழக்கற்றவன்
பிறரை வாழ்விக்க கற்கவில்லை
மனதால் மதி கற்றவன்
மதியின்றி மனிதம் மறந்தான்
வசதிகளால் வறுமை பழித்தான்
மதிப்பினால் 
மரியாதையும் மறந்தான்.
மனிதம்! 
துணைஉயிர் தோன்றியவுடன் 
மலர்ந்திருக்க வேண்டியது
துயரால் உயிர் பிரிந்தும் 
மலர மறுக்கிறது
கல்லுக்குள் ஈரம் கண்டவன் 
மனிதனில் மனிதம் காணவில்லை
கூட்டுக் குடும்பத்தில் 
குடியேற தெரிவதில்லை மனிதனுக்கு 
மனிதம் காக்கும் மண்டபங்களாய் 
மலிந்து காணப்படுகிறது
முதியோர் இல்லங்கள்!
கட்டாயக் கல்வி 
புகட்டிய பெற்றோர்கள்
கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
முதியோர் இல்லங்களுக்கு….!
மந்தைகளில் சில 
கவர்ச்சி மனிதங்கள்
மலிவாய் விற்கப்பட்டனர். 
சில கருப்பு மனிதங்கள்
அதையும் கவர்ந்து சென்றன 
முந்துவோர்க்கு சிறப்பு 
சலுகையும் உண்டாம்!
அரசியலில் மனிதமா?
ஆண்டவா! 
அறியா மக்களிடம் 
நோட்டை வாங்கி 
துண்டுக்களாக்கி கொடுப்பதுதான்…
காந்தி படத்திற்கு பின்னாலல்லவா 
கள்ளப்பணம் கண்டுபிடிக்கப்பட்டன!
கடலே இல்லாத ஊரிலா கப்பல்
அதையும் கேட்டான் 
கதவே இல்லாத ஏழை!
சில மனிதங்கள்
ஓட்டிற்காகவே 
வளர்க்கப்படுகின்றன. 
மதவாதிகளிடம் மனிதம்….. 
அது மதிய நிலவல்லவா?
மதங்களை மடியில் கிடத்தி 
பாலூட்டி வளர்த்ததில் 
எழுந்துசென்று மனிதம் நோக்க 
காலமில்லையாம் 
வெறிநாய் என்றாலும் 
மதவெறிநாய் கடித்தால்
மகிழ்ச்சி…!
மனங்களில் தேடாத இறைவனை 
மதங்களில் தேடி 
மறுத்துவிட்டன மனங்கள்!
நீதிமன்றங்களில் 
நிச்சயம் இருக்குமே மனிதம்!
நிகழ்வதை நம்பமுடியவில்லை…!
காசின்றி காதுகேட்பதில்லை 
வழக்கறிஞருக்கு 
கட்டணமின்றி கதவு 
திறப்பதில்லை…..
பூனையை மீட்க குதிரை
விற்கப்பட்டது. 
குதிரையை மீட்க இருந்த 
குடிசையும் விற்கப்பட்டது…..
குருடன் கண்டதாய் சாட்சி கூற 
அதை செவிடன் கேட்டு 
ஊமையன் பொய் பேசுகிறான்
ஓ… 
புரிந்துவிட்டது பொய்களை
நிறுக்கத்தானோ
நீதி தராசு…?
இதயம் நின்று துடித்தது…?
மருத்துவமணையில் கூடவா
மனிதம் குறைவு….!
உயிர்காக்கும் கட்டிடத்தில் 
மனிதம் காக்க 
சிறுகம்பி கூடவா இல்லை…
பணத்திற்காய் மருந்திட்டவர்கள்
மனிதம் கண்டு 
முகம் சுளித்தார்கள்
ஆடைகளில் இருக்கும் வெள்ளை 
அவர்களின் அகங்களில்
இல்லை…..
உணரப்பட்டது…….!
தீர்க்க முடியா நோயினால்அல்ல!
திரட்ட முடியா பணத்தினால்….!
மனிதத்தை மட்டும் மறந்தவன் 
மறக்கவில்லை
விலங்கிற்கும் ஆறாம் 
அறிவை புகுத்த….
சிங்கத்தை வேடிக்கை காட்ட… 
கிளியை சீட்டெடுக்க…..
யானையை பிச்சையெடுக்க…..
ஐயோ! 
இறைவா நகம் வளர்ந்த அளவு கூட 
மனிதம் வளரவில்லையே!
குரங்கிற்கே குட்டிகரணம் போட 
கற்றுக் கொடுத்தவன் 
குழந்தையையா விட்டுவைப்பான்!
ஏதோ கற்றுக்கொண்டது
காசு கொடுத்தால்தான் 
கடைக்கே செல்கிறது…
விருந்தாக இல்லையெனினும் 
மருந்தாக ஊட்டியிருக்கலாம் 
மனிதத்தை….
படித்தவர்
வாங்கும் சிறப்பு சான்றிதழை விட
பதவியில் இருப்பவரின்
சிபாரிசு சான்றிதழ்
சற்று அதிகமாகவே சாதிக்கிறது
பதவியில் மனிதம் 
பனியளவு கூட இல்லை!
கருக் கலைக்கப்பட்டும் 
கன்னிகளாய் சில பெண்கள்…. 
உறவு அங்கீகரிக்கப்பட்டும் 
கலைக்கப்படும் சில கருக்கள்!
எங்கே மனிதம்?
இளைஞரிடம் இருப்பதாக 
தெரியவில்லை
இருட்டுக்குள் படம் பார்ப்பவர்களிடம் 
மனிதம் மங்களாகத்தானே தெரியும் 
பெண்களுமா மாறிவிட்டார்கள்
மானம் என்றால் 
மரணம் கொள்வார்களே!
மனிதம் என்றால் 
என்ன செய்வார்கள்?
தொலைக்காட்சியின் தொடர்கதையில்
தொலைந்தவர்கள் 
மனிதம் எப்படி தேடுவார்கள்?
மனிதம் மறந்தவர்களுக்காய்
மாநாடு போடுவோம்!
மனிதம் மறந்த முதியோரா?
காய்ந்த மனதை 
அன்பால் உழுவோம் 
மனிதம் மறந்த இளைஞரா?
இங்கும் அங்கும் இலைகளாய் 
துளிர்விடும் மனிதத்தை 
மறவாமல் போற்றுவோம் 
பால் குடிக்கும் குழந்தையா?
வீரத்தை ஊட்டியது போதும், 
மனிதம் ஊட்டுவோம் 
குடிக்கமறுத்தால்
மருந்தாய் ஊட்டுவோம் !
மனிதம் காக்கும் பணி 
நம் 
மனதிலிருந்து முதலில் துவங்கட்டும் 

சகோ. பிரான்சிஸ் அமலதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக